இந்தியாவில் டிராக்டர்களை வாங்க ஆள் இல்லை!! விவசாயிகள் போராட்டம் காரணமா? விவசாய நாட்டில் இப்படியொரு நிலைமையா!
டெல்லியை நோக்கிய விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில், இந்தியாவில் டிராக்டர்களின் விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் டிராக்டர்களை வாங்குவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக இந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா, ஓர் விவசாய நாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம் நாட்டில் விளைவிக்கப்படும் பொருட்கள் வெவ்வேறானவைகளாக இருந்தாலும், பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். மாடு பிடித்து ஏர் உழுத காலம்போய், டிராக்டரையும், தானாக அறுவடை செய்யும் தொழிற்நுட்ப வாகனங்களையும் பயன்படுத்தும் காலத்தில் இருக்கிறோம்.

கார்களை போல், டிராக்டர்களும் ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக் கணக்கில் விற்பனையாகக்கூடியவை. ஆனால், சமீப வருடங்களாக இந்தியாவில் டிராக்டர்களின் விற்பனை பெரிய அளவில் குறைந்து வருகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, இந்தியாவின் மேற்கு மற்றும் நம் தமிழ்நாடு உள்பட தெற்கு மாநிலங்களில் டிராக்டர்களின் விற்பனை கடந்த ஒரு வருடத்தில் அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது.
கடந்த 2023 ஏப்ரல் - டிசம்பர் மாதம் வரையில், இந்த 9 மாத காலத்தில் இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் டிராக்டர்கள் விற்பனை 4% குறைந்துள்ளது. அதாவது, 2022ஆம் ஆண்டின் கடைசி 9 மாதங்களுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டின் கடைசி 9 மாதங்களில் 4% குறைவான எண்ணிக்கையில் டிராக்டர்கள் மக்களால் வாங்கப்பட்டுள்ளன.

4% என்பது ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை ஆகும். தனித்தனியாக ஒவ்வொரு மாநிலமாக எடுத்து பார்த்தால், தெலுங்கானாவில் டிராக்டர்கள் விற்பனை சுமார் 36% குறைந்துள்ளது. அதேபோல், மஹாராஷ்டிராவில் 33 சதவீதமும், ஆந்திராவில் 24 சதவீதமும், கர்நாடகாவில் 21 சதவீதமும் குறைந்துள்ளது. இந்த மாநிலங்களில் இதற்கு முன் இந்த அளவிற்கு டிராக்டர்கள் விற்பனை குறைந்தது இல்லை.
உத்தர பிரதேசத்திற்கு அடுத்து, இந்தியாவின் 2வது பெரிய விவசாய மாநிலமான மத்திய பிரதேசத்தில் டிராக்டர்கள் விற்பனை 4% குறைந்துள்ளது. மேலும், பீகார் மற்றும் தமிழ்நாட்டிலும் டிராக்டர்கள் விற்பனை கணிசமான அளவு குறைந்துள்ளது. ஆனால், உத்தர பிரதேசத்தில் 2022ஐ காட்டிலும் கடந்த ஆண்டில் டிராக்டர்கள் விற்பனை 6% அதிகரித்துள்ளது.

அதாவது, இந்தியாவில் கடந்த ஆண்டில் உத்தர பிரதேசத்தில் மட்டும்தான் ஓரளவிற்கு டிராக்டர்கள் விற்பனை நல்லப்படியாக இருந்துள்ளது. இவ்வாறு, மற்ற மாநிலங்களில் டிராக்டர்கள் விற்பனை குறைந்திருப்பதற்கு போதிய மழையின்மையால் விளைப் பொருட்கள் குறைந்தது மற்றும் அதன் மூலமாக கிடைக்கக்கூடிய வருவாய் குறைந்தது என பல்வேறு காரணங்களை சொல்லலாம்.
நீர்நிலைகளில் விவசாயத்திற்கு தேவையான போதிய நீர் இருப்பு இல்லாததும் டிராக்டர்கள் விற்பனை குறைந்ததற்கு ஒரு காரணம் ஆகும். இந்தியாவில் விவசாய வேலைகள் மெதுவாக குறைந்து வருவதை டிராக்டர்கள் விற்பனை சரிவு காட்டுவதாக இந்தியாவின் மிக பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் கூறுவது போல், டிராக்டர்கள் விற்பனை குறைந்திருப்பது நாட்டில் போதிய அளவிற்கு விவசாயம் நடப்பது இல்லையா என்கிற சந்தேகத்தை ஏற்படுகிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தலை டார்க்கெட் செய்து விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டங்கள் வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருவதால், டிராக்டர்கள் விற்பனை வரும் மாதங்களிலும் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









