எண்ணி முடிக்கவே 3 நாள் ஆயிருச்சு... பைக் ஷோரூம் ஊழியர்களை கதற விட்ட பீடி வியாபாரி... வெச்சு செஞ்சுட்டாரு!
பைக் ஷோரூம் ஊழியர்களை, பீடி வியாபாரி ஒருவர் கதற விட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் டூவீலர் மற்றும் கார் போன்ற வாகனங்களை நாணயங்கள் மூலமாக பலர் வாங்கியுள்ளனர். அது தொடர்பான செய்திகள், டிரைவ்ஸ்பார்க் தமிழ் இணையதளத்தில் பலமுறை வெளியாகியுள்ளன. இந்த வரிசையில், மேற்கு வங்க மாநிலத்தில், இதேபோன்றதொரு சுவாரஸ்யமான சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

வியாபாரி ஒருவர் 1.50 லட்ச ரூபாயை நாணயங்களாக கொடுத்து, புதிய பைக் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் பெயர் சுப்ரதா சர்க்கார் ஆகும். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து அவர் நாணயங்களை சேமிக்க தொடங்கியுள்ளார். அந்த சமயத்தில்தான் இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திடீரென மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைகக்கு பிறகே, சுப்ரதா சர்க்கார் நாணயங்களை சேமிக்க ஆரம்பித்துள்ளார். சுப்ரதா சர்க்காருக்கு தற்போது 46 வயதாகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் அவர் பீடி வியாபாரம் செய்து வருகிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, பணத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது.

குறிப்பாக அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளுக்கு பற்றாக்குறை நிலவியது. எனவே அந்த சமயத்தில், சுப்ரதா சர்க்காரின் வாடிக்கையாளர்கள் நிறைய பேர், குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் மூலம், சுப்ரதா சர்க்காருக்கு கொடுக்க வேண்டிய தொகையை வழங்கியுள்ளனர். அப்போதில் இருந்துதான் சுப்ரதா சர்க்கார் நாணயங்களை சேமிக்க தொடங்கினார்.

நாணயங்களை சேமிக்க தொடங்கியதில் இருந்து, அந்த தொகையை எப்படி செலவு செய்ய போகிறோம்? என்பது தொடர்பாக சுப்ரதா சர்க்காருக்கு எந்தவொரு திட்டமும் இல்லை. சில வருடங்கள் நாணயங்களை சேமித்த பின்னர், ஏதாவது ஒன்றை வாங்கலாம் என்று மட்டும்தான் சுப்ரதா சர்க்கார் நினைத்திருந்தார். ஆனால் அது என்ன பொருள்? என்பதை அவர் யோசிக்கவில்லை.

இப்படியே சுமார் 6 வருடங்கள் அவர் நாணயங்களை சேகரித்து விட்டார். இந்த சூழலில், சமீபத்தில் ஒரு பைக் ஷோரூம் வழியாக அவர் சென்றுள்ளார். அப்போது புதிய பைக் ஒன்றை வாங்குவதற்கு இந்த நாணயங்களை செலவு செய்தால் என்ன? என்ற யோசனை அவருக்கு தோன்றியுள்ளது. இதன்பின் பைக் ஷோரூம் ஊழியர்களிடம், சுப்ரதா சர்க்கார் பேசியுள்ளார்.

நாணயங்கள் மூலமாக மொத்த தொகையையும் பெற்று கொள்வதற்கு அவர்கள் ஒப்பு கொண்டனர். இதன்பின் நாணயங்களை பைக் ஷோரூமிற்கு கொண்டு செல்ல, சுப்ரதா சர்க்காரின் குடும்பத்தினர் உதவியுள்ளனர். ஒவ்வொரு பையிலும் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம், 5 பைகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கான நாணயங்களை அவர்கள் கட்டினர்.

இந்த 5 பைகள் தவிர, 2 சாக்குகளிலும் பைக் ஷோரூமுக்கு நாணயங்கள் கொண்டு செல்லப்பட்டது. ரிக்ஸாவை வாடகைக்கு எடுத்து, இந்த நாணயங்களை சுப்ரதா சர்க்கார் பைக் ஷோரூமுக்கு கொண்டு சென்றார். இந்த நாணயங்கள் கைக்கு கிடைத்ததும், பைக் ஷோரூம் ஊழியர்களின் பணி தொடங்கியது. நாணயங்களை எண்ணி முடிப்பதற்கு பைக் ஷோரூம் ஊழியர்களுக்கு சுமார் 3 நாட்கள் ஆகி விட்டது!

அதுவும் 5 ஊழியர்கள், நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில் சுப்ரதா சர்க்கார் சுமார் 1.5 லட்ச ரூபாயை நாணயங்கள் மூலம் செலுத்தியதை, பைக் ஷோரூம் மேலாளர் உறுதி செய்தார். ஆனால் சுப்ரதா சர்க்கார் என்ன பைக்கை வாங்கியுள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை. தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தை வைத்து பார்க்கையில், பஜாஜ் ஷோரூம் போல் தெரிகிறது.

எனவே பஜாஜ் நிறுவனத்தின் ஏதாவது ஒரு பைக்கை அவர் வாங்கியிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி, இந்தியாவில் இவ்வாறு நாணயங்கள் மூலம் டூவீலர் மற்றும் கார் போன்ற வாகனங்களை வாங்குவது புதிய விஷயம் கிடையாது.

தமிழகத்திலும் கூட இவ்வாறான வினோதமான சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளன. சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்துவதற்காகவும் கூட நாணயங்கள் மூலம் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஆனால் முன்பெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் எப்போதாவது அரிதாக மட்டுமே நடக்கும். எனினும் சமீப காலமாக இதுபோன்ற நிகழ்வுகள் அதிகமாக நடக்க தொடங்கியுள்ளன.
Note: Bajaj Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








