டிராஃபிக் அபராத நிலுவையை EB பில்லில் சேர்க்கலாமா? உச்சநீதிமன்றம் சொன்ன அதிரடி யோசனை!
நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் அபராதங்கள் இன்னும் வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருப்பது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இதை வசூலிக்க புதிய வழிமுறைகளை உருவாக்குவது குறித்து விசாரித்த நீதிமன்றம், நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதத்தை மின்சாரக் கட்டணத்துடன் இணைத்து வசூலிப்பது குறித்த யோசனையையும் முன்வைத்துள்ளது.
நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக e-challan முறையில் விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.45,000 கோடி அளவுக்கு நிலுவையில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில் ரூ.25,000 கோடி அளவுக்கு ஏற்கனவே வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகையை வசூலிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதத் தொகையை வசூலிக்க, தற்போதுள்ள நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகள் தேவைப்படுவதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வாகன உரிமையாளர்களின் நிலுவை போக்குவரத்து அபராதத்தை மின்சாரக் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்க முடியுமா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதாவது, போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபாரதத் தொகையை கட்டாமல் இருக்கும் வாகன உரிமையாளரின் மின்சார இணைப்பு கணக்குடன் இணைத்து வசூலிக்க முடியுமா என்றும், இந்த நடைமுறையில் உள்ள சாத்தியக்கூறுகள் ஆராய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
விதிமீறல்களுக்கான நிலுவை அபராதங்களை வசூலிக்க வேறு சில கடுமையான நடவடிக்கைகளையும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. உதாரணமாக, நீண்டகாலமாக அபாரதம் செலுத்தாத வாகனங்களுக்கு பதிவு புதுப்பித்தல், உரிமையாளர் பெயர் மாற்றம், நகல் RC கார்டு உள்ளிட்ட சில வாகனங்களுக்கான ஆவண சேவைகளை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு வழங்குவதை கட்டுப்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வாகனத்திற்கான தகுதிச் சான்று (Fitness Certificate), மாசு உமிழ்வு சான்று (PUC) போன்ற ஆவணங்களை வழங்குவதில் கட்டுப்பாடுகளை கொண்டுவருவது, ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதற்கான வழிமுறைகளை கடுமையாக்குதல் அல்லது குறிப்பிட்ட சூழ்நிலைகளில் உரிமத்தை தற்காலிக ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளும் யோசனையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பரிவாஹன் இணையதளத்தில் நிலுவை அபராதம் உள்ள வாகனங்களை கருப்புப் பட்டியலில் கொண்டு வருவது, சோதனையின்போது நீண்டகால நிலுவை தொகை இருப்பது கண்டறியப்பட்டால் வாகனத்தை பறிமுதல் செய்வது போன்ற கடுமையான அமலாக்க நடவடிக்கைகளும் விவாதிக்கப்பட்டுள்ளன. அபராதம் விதிப்பதைவிட அதை வசூலிப்பதை உறுதி செய்வதற்காக இதன் நோக்கமாக தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட பிறகும் அதை செலுத்தாமல் இருப்பது தற்போது பல இடங்களில் பெரிய பிரச்சினையாக உள்ளது. அபராதம் வசூலிக்கப்படாமல் தொடர்ந்து நிலுவையில் இருப்பதால், விதிமீறல்களுக்கு எதிரான சட்ட அமலாக்கத்தின் நோக்கமே பாதிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் கருதுகிறது.
அதே நேரத்தில், போக்குவரத்து அபராதத்தையும் மின்சாரக் கட்டணத்தையும் இணைப்பது நடைமுறையில் எப்படி சாத்தியமாகும் என்பது தனியாக ஆராய வேண்டிய விஷயமாக உள்ளது. யாருடைய பெயரில் அபாரதம் விதிக்கப்பட்டு உள்ளது.
மின் இணைப்பு யாருடைய பெயரில் உள்ளது, வாகன உரிமையாளர் மாறியிருந்தால் என்ன செய்வது போன்ற பல கேள்விகளுக்கு தெளிவான நடைமுறை தேவைப்படும். எனவே, இந்த யோசனை எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியம் என்பதை அரசு ஆராய்ந்து தெளிவுப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதுவரை, மாற்று யோசனையில் அபாரதத் தொகையை வசூலிக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதே சிறந்ததாக இருக்கும்.


Click it and Unblock the Notifications


