டூவீலருடன் சேர்த்து 'வாலிபரையும்' பறிமுதல் செய்த வினோதம்..! புனே துரை சிங்கத்துக்கு ஆப்பு!!
டூவீலருடன் சேர்த்து வாலிபரையும் அலேக்காக தூக்கி பார்சல் செய்து, வேனில் ஏற்றிச்சென்ற போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டூவீலருடன் சேர்த்து வாலிபரையும் அலேக்காக தூக்கி பார்சல் செய்து, வேனில் ஏற்றிச்சென்ற போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வீடியோக்கள் வெளியாகி வைரலாக பரவியதால், சப்-இன்ஸ்பெக்டர் சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

நாங்க ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்ஸ்...!!!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள விமன் நகர் பகுதியில், நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்களை பறிமுதல் செய்யும் பணியில், போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதற்கு உதவி செய்வதற்காக, ஒப்பந்த ஊழியர்கள் சிலரும், போலீசாருடன் இருந்தனர்.

அப்போது நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் ஒன்றின் மீது வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். இதனால் அந்த டூவீலரை பறிமுதல் செய்யும்படி, போலீசார் கட்டளையிட்டனர். இந்த உத்தரவை நிறைவேற்றும் பணியில் இருந்த ஒப்பந்த ஊழியர்கள், சற்று வினோதமாகவே நடந்து கொண்டனர்!!!

ஆம், டூவீலரை மட்டும் அவர்கள் பறிமுதல் செய்யவில்லை. டூவீலருடன் சேர்த்து, அதன் மீது அமர்ந்திருந்த வாலிபரையும் அப்படியே அலேக்காக வேனுக்குள் ஏற்றி பார்சல் செய்துவிட்டனர்!!! அந்த விசித்திர நடவடிக்கை வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
துரைசிங்கமாக மாறிய புனே போலீஸ்...!!!
விதிமுறைகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்வது மட்டுமே போலீசாரின் வழக்கம். ஆனால் இம்முறை என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. வாகனத்தில் அமர்ந்திருந்தவரையும் சேர்த்து பறிமுதல் செய்து, சிங்கம் சூர்யா போல் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆகவே நடந்து கொண்டனர்!!!

இந்த சம்பவம் குறித்த பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிப்புக்கு உள்ளான வாலிபர், சம்பவம் நடந்த நேரத்தில், டூவீலரின் மீது அமர்ந்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த போலீசார், டூவீலரை எடுக்கும்படி கூறியுள்ளனர்.

ஆனால் அந்த வாலிபரோ, அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் ஆத்திரம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கும், அந்த வாலிபருக்கும் இடையே வாக்குவாதமும் கூட ஏற்பட்டுள்ளது. இதனால்தான் டூவீலருடன் சேர்த்து அந்த வாலிபரையும் பார்சல் செய்து விட்டனர் போல!!!

எஸ்ஐக்கு ஆப்பு
கடந்த மார்ச் 30ம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இது தொடர்பான வீடியோக்கள் தற்போதுதான் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன. அத்துடன் நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்களை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கும் இந்த வீடியோ ஆப்பு வைத்து விட்டது.

ஆம், இந்த சம்பவம் குறித்து அப்பகுதி டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் மிசால் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இதுபோன்ற மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை எடுப்பது முற்றிலும் தவறு என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்ட நடவடிக்கையை எடுக்க உத்தரவிட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

விசாரணை முடிவில், சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இன்ஸ்பெக்டர் மிசால் கூறியுள்ளார். அத்துடன் ஒப்பந்த ஊழியர்கள் தவறு செய்ததாக கண்டறியப்பட்டால், அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

நான் பாட்டுக்கு செவனேன்னு தான இருந்தேன்...!!!
உண்மையில் பாதிப்புக்கு உள்ளான வாலிபர், பறிமுதல் செய்யப்பட்ட டூவீலரின் உரிமையாளரே கிடையாது. சம்பவம் நிகழ்ந்த நேரத்தில், அவர் டூவீலர் மீது சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தார். அவ்வளவுதான். ஆனால் அந்த வாலிபர் தவறான முறையில் நடந்து கொண்டதாக, சப்-இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.

நிதின் பகுஜால் என்பவர்தான், பறிமுதல் செய்யப்பட்ட டூவீலரின் உரிமையாளர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என போலீசாருக்கு இன்ஸ்பெக்டர் மிசால் அறிவுரை வழங்கியுள்ளார். முன்னதாக பாதிப்புக்கு உள்ளான வாலிபர், போலீசாரின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications