அபுதாபிக்கு போறவங்க தெரியாமல் கூட இந்த தப்பை பண்ணிடாதீங்க... உங்க சொத்தை தான் விற்க வேண்டியிருக்கும்!!
உலகளவில் போக்குவரத்து விதிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும் நகரங்களுள் ஒன்று அபுதாபி என சொல்லலாம். ஐக்கிய அரபு அமீரகம் (UAE) நாட்டின் தலைநகரான அபுதாபியில் வாகனங்கள் ஓட்டுவது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. பொதுவாகவே, அரபு நாடுகளில் சட்ட திட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படும் என பலர் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள். சாலை போக்குவரத்து விதிகள் அபுதாபியில் இன்னும் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட மாநகரத்தில் செல்போனை உபயோகப்படுத்திக் கொண்டு வாகனம் ஓட்டினால் என்ன மாதிரியான அபராதங்கள் விதிக்கப்படும் என எப்போதாவது யோசித்துள்ளீர்களா? வாருங்கள் அதனை பற்றி இனி பார்க்கலாம்.
அபுதாபி என்று மட்டுமில்லை, பொதுவாகவே செல்போன் பயன்படுத்தியவாறு வாகனம் ஓட்டுவது முற்றிலும் தவறானது ஆகும். ஏனெனில், நாம் நமது முழு கவனத்தை செலுத்த வேண்டிய இடம் சாலை ஆகும். அதுவும், நம் இந்திய சாலைகளில் எது எப்போது நடக்கும் என்றே சொல்ல முடியாது. எந்த பக்கத்தில் இருந்து திடீரென வாகனம் வரும்; நாய், ஆடு, மாடு எப்போது குறுக்கே வரும் என்பதை யூகிக்கவே முடியாது.

இருப்பினும், செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்களை தினந்தோறும் நம் நாட்டில் பார்க்க முடிகிறது. ஆனால், அபுதாபியில் கதையே வேறு. இந்த நகரத்தில் வாகனம் ஓட்டும்போது சாலையிலும், டிராஃபிக் சிக்னல்களிலும் முழு கவனத்தையும் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். அபுதாபியில் சாலை விதிமுறைகளை மீறுவோர்க்கு 800 திர்கம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.18 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.
அத்துடன், சாலை விதிமுறைகளை மீறியதற்காக 4 கருப்பு புள்ளிகள் வழங்கப்படும். வாகனம் ஓட்டும்போது மொபைல் போனை உபயோகப்படுத்துவது, கவன குறைவாக இருப்பது, உணவு உண்பது, மேக்-அப் செய்வது உள்ளிட்டவை தண்டனைக்குரிய குற்றமாக அபுதாபியில் பார்க்கப்படுகின்றன. இத்தகைய செயல்களினால் எந்த அளவிற்கு அபாயகரமான விபத்துகள் நடைபெறுகின்றன என்பதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை அபுதாபி போலீசார் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
யுஏஇ சட்டத்தின்படி, சிவப்பு சிக்னலுக்கு நிற்காமல் செல்வது மிகுந்த தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த விதிமீறலுக்கு 1,000 திர்கம் (ரூ.22,800) அபராதமாக விதிக்கப்படுகிறது. அத்துடன், வாகன ஓட்டியின் நன் மதிப்பில் சுமார் 12 கருப்பு புள்ளிகள் சேர்க்கப்படும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, சிவப்பு சிக்னலில் நிற்காமல் சென்றால், உங்களது வாகனம் 30 நாட்களுக்கு போலீசாரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ரெட் சிக்னலில் நிற்காமல் சென்றதற்காக முதற்கட்ட அபராத தொகை 1,000 திர்கம் ஆனது, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை மீட்பதற்கான தொகை உடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவாகும். ஏனெனில், ரெட் சிக்னலில் நிற்காமல் சென்றதற்காக 30 நாட்களுக்கு போலீசாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வாகனத்தை மீட்பதற்கு சுமார் 50,000 திர்கம் செலுத்த வேண்டியிருக்கும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.11.40 லட்சம் ஆகும்.
அதாவது, இவ்வளவு தொகை கொடுத்து மீட்பதற்கு மீட்காமலேயே விட்டுவிடலாம் என நினைப்போரும் அபுதாபியில் உள்ளனர். இந்த தொகையை செலுத்த 3 மாதங்களுக்கு அவகாசம் கொடுக்கப்படும். அதற்குள் செலுத்த முடியவில்லை என்றால், நேரடியாக ஏலம் தான். ஆதலால், ரெட் சிக்னலில் நிற்காமல் செல்வது அபுதாபியில் மிக பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், அரபு நாடுகளில் சட்டங்கள் மிக கடுமையானதாக இருக்கும். அபுதாபியில் அமலில் உள்ள போக்குவரத்து விதிமுறைகள் அதற்கு சிறந்த சாட்சியாகும். குறிப்பாக, ரெட் சிக்னலில் நிற்காமல் செல்பவர்களுக்கு சுமார் ரூ.11.60 லட்சம் அபராதம் என்பது நம்மை மிரள வைக்கிறது. ஆனால் நம் நாட்டில், போலீசார் இருக்கிறார்களா என சுற்றி முற்றி பார்த்துவிட்டு எளிதாக ரெட் சிக்னலை கடந்துச் செல்கிறோம். தண்டனைகள் கடுமையாகினால்தான் குற்றங்கள் குறையும்.


Click it and Unblock the Notifications








