இஷ்டத்துக்கு ஓட்டலாம் யாரும் அபராதம் போடமாட்டாங்க... மக்களுக்குத் தீபாவளி பரிசை அறிவித்த "மாடல்" அரசு...
குஜராத் மாநில அரசு மக்களுக்குத் தீபாவளி பரிசாக வரும் 27ம் தேதி வரை சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படமாட்டாது என அறிவித்துள்ளது. இதுகுறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள். தீபாவளியை முன்னிட்டு பலர் குடும்பத்துடன் வெளியே செல்வது வாடிக்கை தான். இந்த காலகட்டத்தில் சாலையில் பல விதிமீறல்கள் நடக்கும். வாகனங்களில் செல்பவர்கள் விதிமீறல்களில் ஈடுபடுவார்கள். ஆனால் இப்படியாக விதிமீறல்கள் செய்யும் நபர்களைப் பிடித்து போலீசார் அபராதம் விதிப்பார்கள்.

இதனால் இந்த காலகட்டத்தில் சாலை விதிமுறை மீறல் அபராதம் அதிகமாக வசூலாகும். இந்நிலையில் குஜராத் மாநில அரசு ஒரு வித்தியாசமான பரிசு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி அம்மாநிலத்தில் போலீசார் கடந்த அக்டோபர் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை சாலை விதிமுறை மீறல்களுக்காக அபராதம் எதுவும் விதிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பை அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஸ் சங்கவி என்பவர் தெரிவித்திருந்தார். மேலும் அவர் மக்களிடம் இதற்காகச் சாலை விதிமுறை மீறல்களில் வேண்டுமென்ற ஈடுபட்ட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் பொதுமக்களுக்குத் தீபாவளி பரிசாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது "இந்த அறிவிப்பை மக்கள் எல்லோரும் சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபடலாம் என அர்த்தம் கிடையாது. மாறாகச் சாலை விதிமுறைகளை மக்கள் கட்டாயம் கிடைபிடிக்க வேண்டும். ஆனால் ஆங்காங்கே தவறுகள் நடந்தால், தெரியாமல் விதிமுறைகள் மீறப்பட்டால் அதற்காக அபராதம் எல்லாம் விதிக்கப்படாது." எனக் கூறினார்.

பொதுவாகச் சாலைகளில் இருசக்கர வாகனத்தினர் ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பது, கார்களில் சீட்பெல்ட் போடாமல் பயணிப்பது, லைசென்ஸ் இல்லாமல் பயணிப்பது, போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவது, சாலைகளில் விதிமுறைகளை மீறுவது, உள்ளிட்ட பல காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் தற்போது கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் சாலை விதிகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநில அரசின் இந்த அறிவிப்பு பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கார்களில் பின்பக்க சீட்பெல்டும் கட்டாயம் என்ற விதிமுறை இருக்கிறது.

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி இறந்த பிறகு, இந்த சட்டம் இந்தியா முழுவதும் இந்த சட்டத்திற்காக விழிப்புணர்வு அதிகமாகியுள்ளது. குறிப்பாகக் கர்நாடக மாநில அரசு இந்த விதிமுறையை மிகக் கடுமையாகப் பின்பற்றி வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் கார்களில் பயணித்தால் அதில் உள்ள அத்தனை பயணிகளும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

கார்களில் பயணிகள் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ரூ1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பின்பக்க சீட் பெல்ட் என்பது அனைத்து வகையான கார்களுக்கும் பொருந்தும், ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி, எம்யூவி ஆகிய எந்த காராக இருந்தாலும் எத்தனை சீட்கள் இருக்கிறதோ அத்தனை சீட்களுக்கும் சீட் பெல்ட் கட்டாயம் இருக்க வேண்டும் எதை மக்கள் அணிந்து கொண்டு தான் காரில் பயணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

நிலைமை இப்படி இருக்கையில் குஜராத் மாநில அரசு தற்போது தீபாவளி பரிசாக சாலை விதிமுறைகளுக்கு அபராதம் இல்லை என வெளிப்படையாக அறிவித்துள்ளது. பல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இப்படியான ஒரு தீபாவளி பரிசை ஏன் மக்களுக்கு வழங்க வேண்டும்? தீபாவளியைப் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் கொண்டாடும் பரிசை அல்லவா ஒரு அரசு தனது மக்களுக்கு வழங்க வேண்டும் எனப் பலர் இதை விமர்சனம் செய்து வருகின்றனர்.
images used for representative purposes only


Click it and Unblock the Notifications








