தப்பு பண்ணுறவங்கள போட்டு கொடுத்தா பணம் தருவாங்களாம்.. நாளை அறிமுகமாகிறது புதிய செல்போன் செயலி!
வாகனங்களின் எண்ணிக்கை எப்படி நாளுக்கு நாள் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகின்றதோ அதைப் போலவே அதுசார்ந்து நடைபெறும் விதிமீறல் சம்பவங்களும் பலமடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலை காவல்துறைக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தக் கூடியதாக மாறியிருக்கின்றது. போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் பொருட்டு காவல்துறையும் பல்வேறு புதுபுது நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் வருகின்றது. இருப்பினும் அவை பெரிய அளவில் பலன் அளித்ததாக தெரியவில்லை. தெருவுக்கு தெரு நின்று விதிமீறல்வாதிகளை பிடிப்பது, சிசிடிவி மற்றும் வைரல் வீடியோக்களின் அடிப்படையில் போக்குவரத்து விதிமீறல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்பது என கடும் கெடுபிடியை காவல்துறை எடுத்து வருகின்றது.
இருப்பினும் போக்குவரத்து விதிமீறல் அதிகரிப்பு என்பது அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றது. இந்த நிலையிலேயே டெல்லி காவல்துறை போக்குவரத்து விதிமீறல்களைக் குறைப்பதற்காக ஓர் வித்தியாசமான முயற்சியைக் கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்களுடைய பிரத்யேக செயலியை மறுஅறிமுகம் செய்யவே டெல்லி காவல்துறை திட்டமிட்டு இருக்கின்றது.

இந்த செயலி வாயிலாக வாகன ஓட்டிகள் சக வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல் செயல்கள் குறித்து புகார் அளிக்கலாம். டிராஃபிக் பிரஹாரி (Traffic Prahari) எனும் செயலிலையே டெல்லி காவல்துறை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த செயலி வாயிலாக வழங்கப்படும் புகார்களின் உண்மை நிலை அறிந்து, பின்னர் அதன்மேல் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறை தெரிவித்து இருக்கின்றது.
வருகின்ற செப்டம்பர் 1 (நாளை) முதலே இந்த செயலியை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றனர் காவல்துறையினர். மேலும், இந்த செயலி வாயிலாக புகார்களை பதிவிடும் குடிமக்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் டெல்லி காவல்துறை அறிவித்து இருக்கின்றது. ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையே சன்மானம் வழங்கப்பட இருக்கின்றது.

டெல்லியின் துணைநிலை ஆளுநர் விகே சக்ஸேனா, டெல்லி போக்குவரத்து காவல்துறையிடம் இந்த செல்போன் செயலியின் செயல்பாட்டை மீண்டும் தொடங்க அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையிலேயே காவல்துறையும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் டிரஃபாரிக் பிரஹாரி-யை பயன்பாட்டிற்குக் கொண்டு வர உள்ளனர்.
அதிக அளவில் போக்குவரத்து விதிமீறல்கள்குறித்து புகார் அளிப்பவருக்கே அதிக சன்மானம் கிடைக்கும் என தெரிகின்றது. நான்கு பிரிவுகளின்கீழே சன்மானம் வழங்கப்பட இருக்கின்றது. அதிக புகார்களை அளித்து முதல் இடத்தைப் பிடிப்பவருக்கு ரூ. 50 ஆயிரமும், இரண்டாவது இடத்தைப் பிடிப்பவருக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்கப்பட இருக்கின்றது.
இதேபோல், மூன்றாவது நபருக்கு ரூ. 15 ஆயிரமும், நான்காவது நபருக்கு ரூ. 10 ஆயிரமும் சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால், பொதுமக்கள் துடிப்புடன் செயல்பட்டு போக்குவரத்து விதிமீறல் வாதிகளைக் காட்டிக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், வாகன போக்குவரத்து விதிமீறல்களும் இதனால் குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, போக்குவரத்து விதிமீறல்களினால் அரங்கேறும் விபத்து சம்பவங்களும் மிகப் பெரிய அளவில் குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் முக்கிய நகரங்களில், அதிகம் சாலை விபத்து அரங்கேறும் நகரமாக டெல்லி உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அவல நிலையில் இருந்தும் இந்த புதிய நடவடிக்கை டெல்லியைக் காக்கும் என நம்பப்படுகின்றது.
இந்த செயலி உறுப்பினராவது மிகவும் சுலபமான ஒன்றாகும். பயனர்கள் முதலில் டிராஃபிக் பிரஹாரி செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் செல்போன் எண்ணை பதிவிட்டு லாக்-இன் செய்ய வேண்டும். இதைச் செய்த பின்னர் போக்குவரத்து விதிமீறல் நிகழ்வுகளை புகைப்படமாகவோ அல்லது வீடியோ ஆதாரமாகவோ அதில் பதிவேற்று புகார் தெரிவிக்கலாம்.
புகார்களை பதிவு செய்யும் போது தேதி, நேரம், இடம் மற்றும் வாகன பதிவு எண் போன்ற முக்கிய விவரங்களையும் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஏதேனும் சிறு தவறு செய்தாலும் போலீஸார் புகாரை நிராகரிக்கவும் வாய்ப்பு உண்டு. இதற்கான அதிகாரம் அவர்களுக்கு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுமக்கள் சரியான தகவல்களை அதில் உள்ளிட்டு, முறையாக புகாரை தெரிவிக்க வேண்டும் என்பதே எங்களின் கருத்தாகும். இதனால் மிகப் பெரிய போக்குவரத்து விதிமீறல்கள் குறையக் கூடும். குறிப்பாக இந்த செயலி வாயிலாக போக்குவரத்து பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் காவல்துறை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








