இந்த நியூ இயருக்கு மெரீனா பீச்சில் ‘பைக் வீலிங்’ சான்ஸே இல்ல!! தயாராக சென்னை போலீஸார் - முக்கிய சாலைகள் மூடல்
2022ஆம் ஆண்டு நிறைவடைந்து 2023ஆம் ஆண்டு பிறக்க உள்ளது. ஒரு வருடம் முடிகிறது... நமக்கு மேலும் ஒரு வயது ஆக போகிறது என சில வருத்தங்கள் நம்மை ஆட்டோமேட்டிக்காக சூழ்ந்தாலும், நியூ இயர் கொண்டாட்டங்கள் என்றதுமே நமக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. அதற்கு முக்கிய காரணம், நள்ளிரவு 12 மணி வரை தூங்காமல் விழிந்திருந்து புதிய வருடத்தை வரவேற்கலாம், கேக் வெட்டி கொண்டாடலாம் போன்ற சின்ன சின்ன சந்தோஷங்களே ஆகும்.
சென்னையை பொறுத்தவரையில், ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31ஆம் தேதி இரவு பல்லாயிரக்கணக்கான மக்கள் மெரீனா கடற்கரையில் கூடுவர். இதனால் சில மணிநேரங்களுக்கு மெரீனா கடற்கரையும், அதன் அருகே உள்ள காமராஜர் சாலையும் ஸ்தம்பித்து போய் காணப்படும். இது தொடர்பான செய்திகளை ஒவ்வொரு வருடமும் முதல் நாளில் கண்டிருப்பீர்கள். மெரீனா கடற்கரை மட்டுமின்றி, சென்னையில் உள்ள மற்ற பெசண்ட் நகர் கடற்கரையும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும்.

ஆனால் இந்த ஆண்டு அத்தகைய கொண்டாட்டங்களை ரசிப்பது சற்று சிரமம் தான் போலிருக்கிறது. ஏனெனில் சென்னை போக்குவரத்து போலீஸார் காமராஜர் சாலையுடன் இணையும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகளை அமைத்து வாகனங்களை நுழைய விடாமல் செய்ய தயாராகி வருகின்றனர். குறிப்பாக, தென் சென்னையை காமராஜர் சாலையுடன் இணைக்கும் பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலை கலங்கரை விளக்கம் பகுதியில் டிசம்பர் 31 இரவு 7 மணி முதல் ஜனவரி 1 காலை 6 மணி வரையில் மூடப்பட உள்ளது.
அடையாறு பகுதியில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கர்னீஸ்வரர் பகோடா தெரு சாலை வழியாக திருப்பி விடப்படுவர். அதேபோல் வட சென்னையில் இருந்து வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தும் பொருட்டு, போர் நினைவுச்சின்னம் உள்ள பகுதியில் சாலை இரவு 8 மணியளவில் மூடப்பட உள்ளது. அந்த வாகன ஓட்டிகள் வெங்கடாச்சலம் தெரு வழியாக திசை மாற்றி அனுப்பப்படுவர். இவ்வாறு காமராஜர் சாலையுடன் இணையும் அனைத்து முக்கிய சாலைகளையும் பாதுகாப்பு கருதி போலீஸார் மூட உள்ளனர்.
இதனால் காமராஜர் சாலை வழியாக வழக்கமாக செல்லும் மாநகர அரசு பேருந்துகளின் வழித்தடங்களும் திசை திருப்பிவிடப்பட உள்ளன. அதேபோல், சென்னையில் உள்ள மேம்பாலங்களும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக மூடப்பட உள்ளன. மெரீனா கடற்கரைக்கு செல்ல விரும்புவோர் தங்களது வாகனங்களை சுவாமி சிவனாந்தா சாலை, வலாஜா சாலை, பாரதி சாலை, PWD அலுவலக சாலை, பெசண்ட் நகர் சாலை மற்றும் ராணி மேரி கல்லூரி வளாகத்திற்குள் நிறுத்தி கொள்ளலாம் என போலீஸார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குறிப்பிடப்பட்டுள்ள இந்த பகுதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்திய பின்னர் மக்கள் மெரீனா கடற்கரைக்கு நடந்தே செல்ல வேண்டியிருக்கும். அதற்கேற்றவாறு தயாராக செல்லவும். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நியூ இயர் இரவில் வீலிங் உள்ளிட்ட சாலை விதிமுறைகளுக்கு புறம்பான ஈடுப்படுவோரை தடுப்பதற்காகவே. ஏனெனில் ஒவ்வொரு வருடமும் போலீஸாரின் பெரும் தலைவலியாக இருப்பது 'கெத்து' காட்ட நினைக்கும் வாகன ஓட்டிகளும், அவர்களது சாகசங்களும் தான்.
குறிப்பாக, விலைமிக்க மோட்டார்சைக்கிள்களில் வீலிங் செய்து மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க நினைப்போர் போலீஸாருக்கு மட்டுமின்றி, சாலையில் நடந்து செல்லுவோர்க்கும் பிரச்சனையாக அமைகின்றனர். அத்தகையவர்களை தடுக்கவே வழக்கம்போல் இந்த முறையும் முன்னெச்சரிக்கையாக சாலைகளை மூடி போக்குவரத்தை காமராஜர் சாலை வழியாக நுழைய விடாமல் போக்குவரத்து போலீஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். போக்குவரத்து சட்டங்களுக்கு புறம்பான 'புத்தாண்டு கொண்டாட்டங்கள்' மெரீனா, பெசண்ட் நகர் கடற்கரை பகுதிகளில் மட்டுமின்றி, முழு சென்னையிலும் நடக்கக்கூடியவையே.
அவற்றை வழக்கம்போல் இந்த புத்தாண்டிலும் தடுக்கும் பொருட்டு, சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள ANPR மற்றும் சிசிடிவி கேமிராக்களை பயன்படுத்த போலீஸார் தயாராக உள்ளனர். போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுப்படும் வாகன ஓட்டிகளுக்கு அந்த நேரத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டு அபராத இ-செல்லான் அவர்களது இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடும். ஆகையால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல், அபராதத்திற்கு உள்ளாகாமல் புத்தாண்டை கொண்டாடுமாறு கிரேட்டர் சென்னை போலீஸார் அனைவருக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications