உங்ககிட்ட அதிகமா அபராதம் வசூலிக்கிறாங்களா? தமிழகத்துல என்னென்ன விதிமீறல்களுக்கு எவ்வளவு ரூபாய் அபராதம்!
போக்குவரத்து விதிமீறல்கள் பெருந்தொற்றைப் போல உருவெடுத்து இருக்கின்றது. மிக கொடியதாக அறியப்படும் சில வியாதிகளுக்கே மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட இந்த காலகட்டத்தில் நொடிப் பொழுதில் பேரழிவை ஏற்படுத்தும் போக்குவரத்து விதிமீறல்கள் விஷயத்தில் எந்தவொரு தீர்வையும் காண முடியவில்லை என்பது மிகப் பெரிய வருத்தமாக இருக்கின்றது. அரசும் அதன் சார்பில் மிகப் பெரிய கடுமையான கையாளுதல்களை போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக எடுத்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், அது குறைந்தபாடில்லை. குறிப்பாக, நாள்தோறும் போக்குவரத்து விதிமீறல்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் விளைவாக விபத்துகளும், விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
இருப்பினும், சோர்வடையாமல் அரசுகள் போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், ஒவ்வொரு விதிமீறல்களுக்கும் வெவ்வேறு விதமான அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாம் எந்தெந்த போக்குவரத்து விதிமீறலுக்கு எவ்வளவு ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படுகின்றது? மற்றும் என்ன மாதிரியான தண்டனை வழங்கப்படுகின்றது என்பது பற்றிய விபரங்களையே பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

இரண்டு சக்கர வாகனங்கள் இருவர் செல்ல மட்டுமே. இந்த விதியை மீறி, அதாவது, இரண்டிற்கும் அதிகமானோர் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்தால் அவர்களுக்கு ரூ. 1000 வரை அபராதம் விதிக்கப்படும். அத்துடன், ஓட்டுநர் உரிமத்தையும் 3 மாத காலம் வரை போலீஸாரால் ரத்து செய்ய முடியும். தலைக் கவசம் அணிவது கட்டாயம்.
இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தலைக் கவசம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. எனவேதான் இதைக் கட்டாயம் அணிய வேண்டும் கூறப்படுகின்றது. இதன் வாயிலாக உயிரிழப்பை தடுக்க முடியும். வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்பவர் இருவரும் தலைக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
இதை மீறினால் ரூ. 1,000 அபராதமாக வசூலிக்கப்படும். இந்த விதிமீறலுக்கும் 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. வாகனம் ஓட்டும்போது கட்டாயம் செல்போனை தவிர்க்க வேண்டும். செல்போன் பேசிய படி வாகனத்தை ஓட்டினால் ஆயிரம் ரூபாயில் இருந்து 5000 ரூபாய் வரை அபராதமாக விதிக்கப்படும்.
இதுதவிர, சிறை தண்டனையும் விதிக்கப்படலாம். இதற்கு 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகின்றது. பொதுவாக அபராதம் அல்லது சிறைத் தண்டனை இரண்டில் ஏதேனும் ஒன்றே விதிக்கப்படும். ஆனால், தொடர்ந்து இந்தி விதிமீறலில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் சில நேரங்களில் அபராதம் மற்றும் சிறை தண்டனை இரண்டும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதேநேரத்தில் மீண்டும் மீண்டும் இதே விதிமீறலில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 ஆண்டுகால சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இத்துடன் ஓட்டுநர் உரிமம் 3 மாத காலத்திற்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும். அதிக வேகமாக பயணிப்பவரா நீங்க. இதற்கு ரூ. 1000 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்படுகின்றது.
கனரக வாகனங்களுக்கு இதைவிட சற்று அதிகம் அபராதத் தொகை என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்துச் செய்யப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இத்துடன், 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து மற்றும் 6 மாதங்கள் முதல் 24 மாதங்கள் சிறைத் தண்டனையும் கூடுதல் போனஸாகக் கிடைக்கும்.
டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டக் கூடாது. இதற்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகின்றது. இத்துடன், 3 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொது சாலையில் வாகன ரேஸில் ஈடுபடுவது குற்றமாகும். இந்த விதிக்கு ரூ. 500 முதல் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகின்றது.
இத்துடன், 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்தும், 12 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். பர்மிட் இல்லாமல் வாகனம் ஓட்டுவதற்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகின்றது. இத்துடன், 12 மாதம் சிறைத் தண்டனையும் வழங்கப்படுகின்றது. ஆபத்தாக வாகனம் ஓட்டினால் ரூ. 1000 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்படும்.
இத்துடன், 3 மாதம் டிரைவிங் லைசென்ஸ் ரத்து மற்றும் 6-12 மாதம் சிறைத் தண்டனையும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும், 3 மாசம் டிரைவிங் லைசென்ஸ் ரத்து மற்றும் 6 மாதம் சிறைத் தண்டனையும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், அந்த வாகனத்தின் உரிமையாளர் அல்லது சிறுவர்களின் பெற்றோர்களுக்கே அபராதம் விதிக்கப்படும். ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் அவர்களுக்கு விதிக்கப்படும். இத்துடன், 25 வயது வரை அந்த சிறுவர்களால் ஓட்டுநர் உரிமத்தைப் பெற முடியாது. மேலும், பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக் கிடைக்கக் கூடும்.
அதிகாரிகளின் உத்தரவை மீறினால் ரூ. 2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே டிராஃபிக்கின்போது காவலர் சொல்லும்படி செய்வதே நல்லது. சிவப்பு சிக்னலை மதிக்காமல் சென்றால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இத்துடன், 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட காலத்தில் வாகனத்தை ஓட்டினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகன மாடிஃபிகேஷனுக்கு ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகின்றது. இதற்கு சில நேரங்களில் சிறைத் தண்டனையும் உண்டு. 6 மாதம் வரை அது வழங்கப்படலாம்.
முந்தக் கூடாத இடங்களில் முந்துதலுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் காற்று மற்றும் ஒலி மாசை ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகின்றது. மேலும், 6-24 மாதங்கள் சிறைத் தண்டனை மற்றும் 3 மாத கால ஓட்டுநர் உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கையும் இதற்காக பாயலாம்.
சரக்கு வாகனத்தில் அதிகம் பாரம் ஏற்றுவதற்கு ரூ. 20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகின்றது. இத்துடன், ஒவ்வொரு ஒரு டன் அதிக எடைக்கும் ரூ. 2 ஆயிரம் கூடிக் கொண்டே போகும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல் சரக்கு வாகனத்தை சோதனைக்கு நிறுத்தாமல் ஓட்டிச் சென்றால் ரூ. 40 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இதுதவிர, 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். ஓட்டுநர்களுக்கான ஒழுங்குமுறையை மீறுபவர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், வாகனத்தை பதிவு செய்யாமலேயே ஓட்டிக் கொண்டிருந்தால் அபராதமாக ஆண்டு வரியில் 5 மடங்கு அதிக கட்டணம் அல்லது ஆயுட்கால வரியில் மூன்றில் ஒரு மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாங்கும் சம்பளத்தில் பெரும் தொகையை சேவையில்லாமல் கொடுக்கும் எண்ணத்தில் இருப்பீர்கள் என்றால் மேலே உள்ள எந்தவொரு விதிமீறலையும் செய்து, தேவையில்லாத சிக்கலில் நீங்கள் சிக்கிக் கொள்ளலாம். எங்களின் அறிவுறுத்தல், நாமும் பாதுகாப்பாக பயணித்து, மற்றவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே ஆகும். இதை செய்வது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.


Click it and Unblock the Notifications








