நடுவீதிக்கு வந்த ரயில்.. அதிர்ச்சியில் அலறியடித்து ஓடிய மக்கள்.. ஓட்டுனருக்கு இதுதான் தண்டனை!
மஹிந்திரா ஸ்கார்பியோ காரில், ரயில் ஹாரனை பொருத்தி, சாலையில் அதனை ஒலித்து, பொது மக்களை பயப்பட வைத்து ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். திடீரென எழுந்த பயங்கர சப்தம் காரணமாக மக்கள் அலறியடித்து ஓடுகின்றனர்.
மஹிந்திரா ஸ்கார்பியோ காரில், ரயில் ஹாரனை பொருத்தி, சாலையில் திடீரென அதனை ஒலித்து, பொது மக்களை பயப்பட வைத்து ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். திடீரென எழுந்த பயங்கர சப்தம் காரணமாக மக்கள் அலறியடித்து ஓடுகின்றனர். இதுகுறித்த மற்றும் அதிக சப்தமான ஹாரன்களை பயன்படுத்துபவர்களுக்கு என்ன தண்டனை? என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

வாகன உற்பத்தியாளர்கள் வழங்கும் ஹாரன்களின் ஒலி அளவு சட்டத்திற்கு உட்பட்ட அளவில் இருக்கும். ஆனால் பெரும்பாலான வாகன உரிமையாளர்கள், வாகனங்களுடன் வரும் ஹாரன்களை அகற்றிவிட்டு, மிகவும் சப்தமான ஹாரன்களை பொருத்தி கொள்கின்றனர்.

விதிகளுக்கு புறம்பான அத்தகைய சப்தமான ஹாரன்கள் ஒலிக்கப்படும்போது, பிறருக்கு மிகுந்த எரிச்சல் உண்டாகும். அப்படிப்பட்ட ஹாரன்களை எல்லாம் மீறும் வகையில், மஹிந்திரா ஸ்கார்பியோ உரிமையாளர் ஒருவர், ''நான் வேற லெவல்'' என்கிற ரீதியில் நூதனமாக யோசித்துள்ளார்.

ஆம், அவர் தனது காரில் பொருத்தியது ரயில் ஹாரன். ரயில் ஹாரன் பொருத்தப்பட்ட தனது மஹிந்திரா ஸ்கார்பியோ காரை எடுத்து கொண்டு நகர் வலம் வருவது அவருக்கு பிடித்தமான விஷயம் போல. அவர் அத்துடன் நின்று விடவில்லை.

பாதசாரிகளுக்கு அருகே சென்று, திடீரென ரயில் ஹாரனை ஒலித்துள்ளார். திடீரென எழுந்த சப்தம் காரணமாக பாதசாரிகள் அலறியடித்து ஓடுகின்றனர். அதனை ரசித்த அவர், பாதசாரிகள் பதறியடித்து ஓடுவதை வீடியோவும் எடுத்துள்ளார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
ரயில் ஹாரனை ஒலித்து, சாலையில் நடந்து செல்பவர்களை பயமுறுத்துவதை, அவர் மிகவும் பெருமையாக நினைத்து கொண்டாரே என்னவோ? பாதசாரிகள் மட்டுமல்ல. பிற வாகனங்களில் செல்பவர்கள் கூட, திடீரென எழுந்த பயங்கர சப்தம் காரணமாக பதற்றம் அடைந்துள்ளனர்.

நல்ல உடல்நிலையுடன் இருப்பவர்களுக்கே இத்தகைய திடீர் சப்தம் மிகுந்த பதற்றத்தை உண்டாக்கிவிடும். அப்படி இருக்கையில், உடல் நிலை சரியில்லாதவர்கள் மற்றும் முதியவர்களின் நிலையை யோசித்து பாருங்கள். அத்துடன் நின்று விடாமல் மிகுந்த ஒலி மாசுபாட்டையும், இந்த ஹாரன்கள் ஏற்படுத்துகின்றன.

துரதிருஷ்டவசமாக கார் உரிமையாளர்கள் பலர், இப்படி பயங்கரமான சப்தம் எழுப்பும் ஹாரன்களை பொறுத்துவதற்கு நிறைய தொகையை செலவழிக்கின்றனர். அதற்கு அவர்களிடம் இருக்கும் ஒரே காரணம், ஹாரன் சப்தமாக ஒலித்தால்தான், முன்னால் செல்லும் வாகன ஓட்டிகள் வழிவிடுவார்கள் என்பதுதான்.

ஆனால் இப்படிப்பட்ட ஹாரன்களை பொருத்தி கொண்டு வாகனங்களை ஓட்டுவது முழுக்க முழுக்க சட்டத்திற்கு புறம்பானது. இத்தகைய ஹாரன்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் போலீசாருக்கு உள்ளது.

இதுபோன்ற ஹாரன்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து போலீசாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு பொது இடத்திலும், சாலை பாதுகாப்பு தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட தரங்களை மீறுகின்ற வகையில் நடந்து கொள்ளும் மற்றும் ஒலி, காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் வாகன ஓட்டுனர்கள், இந்திய மோட்டார் வாகன சட்டம் 1988ன் செக்ஸன் 190 (2)ன் படி தண்டிக்கப்படுவார்கள்.

வாகன ஓட்டுனர்கள் மட்டுமல்ல. அதற்கு அனுமதி கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை பாயும். முதல் முறை சிக்கினால், ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட நேரிடும். 2வது முறையாகவோ அல்லது தொடர்ச்சியாகவே இந்த தவறை செய்தால், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Sonam Chib


Click it and Unblock the Notifications