Train Production Cost இவ்வளவு கோடியா? இந்த தகவலை வேற யாரும் சொல்ல மாட்டாங்க!
இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிக முக்கியமான போக்குவரத்து வசதிகளில் ஒன்று. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். குறிப்பாக நீண்ட தூரப் பயணத்திற்கு பெரும்பாலான மக்கள் ரயிலைத் தான் தேர்வு செய்கின்றனர். இப்படிப்பட்ட ரயிலைத் தயாரிக்க எவ்வளவு செலவாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவில் ரயில்கள் மொத்தம் 6 இடங்களில் வேறு வேறு பாகங்களாகத் தயாராகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சித்ரஞ்சன் பகுதியில் ரயில்களுக்கான இன்ஜின் தயாரிக்கப்படுகிறது. வாரணாசியில் டீசல் இன்ஜின் தயாரிக்கப்படுகிறது. சென்னை ஐசிஎஃப்பில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.

பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் குறைந்த எடை கொண்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது. பெங்களூருவில் ரயில் வீல்கள் தயாரிக்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவின் டீசல் இன்ஜின்களை நவீனத்துவப்படுத்தும் பணி நடக்கிறது. இத்தனை இடங்களில் தனித்தனியாகத் தயாரிக்கப்பட்டாலும் ஒரு முழு ரயில் உருவாவதற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா? வாருங்கள் காணலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய சாதனை என்றால் வந்தே பாரத் ரயில்கள் தான். டிரைன் 18 என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில்கள் தான் தற்போது இந்தியாவின் நவீன வசதிகளைக் கொண்ட ரயிலாக இருக்கிறது. இந்த ரயில் சென்னை ஐசிஎஃப் பணிமனையிலேயே உருவாக்கப்படுகிறது. இந்த ரயில் இன்ஜின் பெட்டி என தனித்தனியாக இல்லாமல் சேர்ந்தே இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு வந்தே பாரத் ரயிலை அதிகரிக்க ரூ110-120 கோடி செலவாகும் என ஐசிஎஃப் பொதுமேலாளர் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த வந்தே பாரத் ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். இந்தியா முழுவதும் இன்று (ஏப். 12ம் தேதி) நிலவரப்படி மொத்தம் 14 ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் செயல்பாட்டில் இருக்கிறது. வந்தே பாரத் ரயிலில் அமர்ந்து செல்லும் இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் மட்டுமே இருக்கிறது.
அடுத்தாக சாதாரண ரயிலைப் பொருத்தவரை இரண்டு விதமான ரயில் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளது. ஒன்று சென்னை ஐசிஎஃப்பில் தயாரிக்கப்படும் அதிக எடை கொண்ட ரயில் பெட்டிகள் இது எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்களில் பயன்படுத்தப்படுகிறது. அடுத்தது எல்எச்பி எனப்படும் குறைந்த எடை கொண்ட ரயில் பெட்டிகள். இது சூப்பர்பாஸ்ட், துரந்தோ, போன்ற அதிவேக ரயில்களில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த இரண்டிற்கும் ஒரே வகையான இன்ஜின் தான் பயன்படுத்தப்படுகிறது. ஒரு எலெக்ட்ரிக் ரயில் இன்ஜினை தயாரிக்க ரூ18 கோடி வரை செலவாகிறது. அதுவே ரயில் பெட்டி என்றால் ஐசிஎஃப் பெட்டிகளைத் தயாரிக்க ரூ80 லட்சம் முதல் ரூ1.5 கோடி வரை செலவாகிறது. எல்எச்பி பெட்டி என்றால் ரூ1.5 கோடி முதல் ரூ2 கோடி வரை செலவாகிறது.
இதில் ஒவ்வொரு ரயிலிலும் ஜெனரேட்டர் கோச் இருக்கும். இதில் ஒரு கோச்சைத் தயாரிக்க ரூ3 கோடி செலவாகும். ஐசிஎஃப் பெட்டிகளில் 24 பெட்டிகள் பொருத்தப்பட்ட ரயில் என்றால் ஒரு பெட்டிக்கு ரூ1.5 கோடி விதம் கணக்கிட்டால் ஒரு முழு ரயிலைத் தயாரிக்க ரூ 57 கோடி செலவாகிறது.
இதுவே ஒரு எல்எச்பி கோச் என்றால் ஒரு பெட்டிக்கு ரூ2 கோடி எனக் கணக்கிட்டால் 24 பெட்டிகளுக்கு ரூ48 கோடியும், இன்ஜினிற்கு 18 கோடியும், ஜெனரேட்டருக்கு ரூ3 கோடி என மொத்தம் ரூ69கோடி செலவாகும். இதன் மூலம் நமக்குத் தெரிய வருவது சாதாரண ரயிலை விட வந்தே பாரத் ரயிலைத் தயாரிக்க இரண்டு மடங்கு வரை செலவாகும்.
தற்போது இந்தியாவில் சிலீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அறிமுகமாகவில்லை. இந்த ரயிலுக்கான தயாரிப்பு நடந்து வருகிறது. இந்த ரயில் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரயில்வே நிர்வாகம் இந்தியாவில் 400 ரயில்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








