எப்போவாவது யோசித்துள்ளீர்களா... ஒரு இரயிலில் எத்தனை சக்கரங்கள் இருக்கும்? நிறைய பேருக்கு தெரியாத விஷயங்கள்!!
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத விஷயங்களாக யானை, கடல், இரயிலை கூறுவர். இதில் இரயிலில் பயணம் செய்ய யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். குலுங்கி, குலுங்கி இயங்கும் இரயில்களில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தவாறு பயணம் செய்யும்போது லேசாக மழைத் தூரல்கள் விழுந்தால், அந்த உணர்வே தனி சுகம் என பலர் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
இரயில் பயணங்கள் எந்த அளவிற்கு சுவாரஸ்யமானதோ அதே அளவிற்கு அவற்றை பற்றிய தகவல்களும் சுவாரஸ்யமானவை. மனிதன் மிக நீண்ட காலமாக இரயில்களை போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகிறான். டிரான்ஸ்-சைபீரியன், ஓரியண்ட் எக்ஸ்பிரஸ், ஃப்ளையிங் ஸ்காட்மேன், ப்ளூ டிரெயின், யூரோஸ்டார், கான் மற்றும் ராக் ஐலேண்ட் ராக்கெட் உள்ளிட்டவை நீண்ட காலமாக பயன்பாட்டில் இருக்கும் நீண்ட தொலைவு இரயில் வழித்தடங்கள் ஆகும்.

தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்தில், சில இரயில்களை தவிர்த்து, பெரும்பாலான இரயில்களில் இரும்பு சக்கரங்களே பொருத்தப்படுகின்றன. பொதுவாக இரயில் பெட்டி ஒன்றில் அதன் நீளத்தை பொறுத்து, 8 அல்லது 12 சக்கரங்கள் பொருத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு சக்கரமும் தனித்தனியாக செயல்படாத வண்ணம், நடுவே ஒரு கம்பியின் மூலம் இரு சக்கரங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படுகின்றன.
பின்னர், இவ்வாறு இணைக்கப்பட்ட சக்கர ஜோடிகள் இரண்டை ஒன்றாக போகி (Bogie) மூலம் இணைப்பதன் மூலம் 4 சக்கரங்கள் ஒன்றாக செயல்படும். இதனை வீல் செட்ஸ் என அழைக்கின்றனர். அப்படியென்றால், ஒவ்வொரு இரயில் பெட்டிக்கும் 2 - 3 வீல் செட்ஸ் கொடுக்கப்படும். இந்த வீல் செட்ஸின் எண்ணிக்கை ஆனது இரயில் பெட்டியின் நீளம் மட்டுமின்றி, பெட்டிக்குள் ஏற்றப்படும் சுமைகளை பொறுத்தும் வேறுப்படும்.

அதாவது, பயணிகளை ஏற்றி செல்லும் இரயில்களின் பெட்டிகளில் பெரும்பாலும் 2 வீல் செட்ஸ், அதாவது 8 சக்கரங்கள் மட்டுமே இருக்கும். ஒரு வீல் செட் பெட்டியின் முன்பக்கத்திலும், ஒரு வீல் செட் பெட்டியின் பின்பக்கத்திலும் வழங்கப்படுகின்றன. மறுப்பக்கம், சரக்கு இரயில் பெட்டிகளிலும், இரயில் என்ஜின் பெட்டிகளிலும் 12 சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. இதில் சரக்கு இரயில் பெட்டிகளில் 12 சக்கரங்கள் 3 வீல் செட்களாக பொருத்தப்படுகின்றன. ஒரு வீல் செட் சக்கரத்தின் மத்தியில் இருக்கும்.
அதுவே இரயில் என்ஜின் பெட்டிகளில் இரு வீல் செட்கள் பொருத்தப்படுகின்றன. அதாவது, ஒவ்வொரு வீல் செட்ஸிலும் 6 சக்கரங்கள் இருக்கும். இரயில் என்ஜின் பெட்டிகள் முன்பக்கமாக செல்ல வேண்டும், அதேநேரம் ரிவர்ஸிலும் செல்ல வேண்டும் என்பதால் இவ்வாறு 6 சக்கரங்களை கொண்ட வீல் செட்கள் வழங்கப்படுகின்றன. இதற்கேற்ப சக்கர ஜோடிகளை இணைக்கும் போகிகளும் என்ஜின் பெட்டிகளுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்படுகின்றன.

இரு சக்கரங்களை கொண்ட சக்கர ஜோடிகளை இணைக்கும் போகி சிஸ்டத்தை சில உற்பத்தி நிறுவனங்கள் வித்தியாசமான முறையில் உருவாக்குகின்றன. உதாரணத்திற்கு, பிரெஞ்சு நாட்டில் இயக்கப்படும் சுரங்கப்பாதை இரயில்களில் இரட்டை-அச்சு போகி சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், சில இரயில்களில் இரும்பு சக்கரங்களுக்கு பதிலாக ரப்பர் சக்கரங்கள் பயன்படுத்துகின்றன.
ஆனால் இத்தகைய ரப்பர் சக்கரங்களிலும் மைய அச்சு ஆனது இரும்பு அல்லது வேறொரு வலிமையான உலோகத்தால் செய்யப்பட்டதாகவே உள்ளது. இத்தகைய ரப்பர் இரயில் சக்கரங்களும் பிரெஞ்சு நாட்டின் கண்டுப்பிடிப்பே ஆகும். ஏற்கனவே கூறியதுபோல், சக்கரங்கள் இல்லாமல் இயங்கும் இரயில்களும் உள்ளன. இத்தகைய இரயில்களை மக்லெவ் இரயில்கள் என அழைக்கின்றனர்.

ஆனால் இவற்றை இயக்குவதற்கு மிகவும் பிரத்யேகமான கட்டமைப்பு தேவைப்படுவதால், மிகவும் குறைவான எண்ணிக்கையிலான மக்லெவ் இரயில்களே பயன்பாட்டில் உள்ளன. உலகளவில் தற்சமயம் மொத்தமாகவே 6 மக்லெவ் இரயில்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இதில் 3 சீனாவிலும், 2 தென்கொரியாவிலும், ஒன்று ஜப்பானிலும் உள்ளது. இவை சக்கரங்களுக்கு பதிலாக காந்த சக்தியை கொண்டு இயக்கப்படுகின்றன. மக்லெவ் இரயில்களின் சிறப்பம்சமே 500kmph வரையிலான வேகத்தில் இயங்கக்கூடிய அவற்றின் திறன் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இரயில்களின் சக்கரங்களில் மட்டும் எவ்வளவு விஷயங்கள் உள்ளன என்பதை பாருங்கள். இதனால்தான், மனிதன் கண்டுப்பிடித்த தரமான வாகனமாக இரயில்களை சொல்கிறோம். இரயில் பெட்டி ஒன்று காலியாக இருப்பினும் பல்லாயிர கிலோ எடை கொண்டது. அதனை தாங்குவதற்கு 8 -12 சக்கரங்கள் போதும் எனும்போது, சக்கரங்களை எவ்வளவு வலிமையானதாக உருவாக்க வேண்டும் என யோசிக்கும்போது ஆச்சரியமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









