விமானத்தை விட குறைவான நேரத்தில் திருச்சி-பெங்களூர்! விரைவில் சீறி பாய்கிறது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்!
தமிழ்நாட்டில் சென்னை (Chennai) மற்றும் கோவை (Coimbatore) வரிசையில் வளர்ச்சியடைந்த நகரங்களில் ஒன்றாக இருப்பது திருச்சி (Trichy). காவிரி டெல்டா (Cauvery Delta) மாவட்டங்களின் தலைநகரம் என்று கூட திருச்சியை சொல்லாம். ஏனெனில் காவிரி டெல்டா பிராந்தியத்தில், திருச்சிதான் மிகவும் வளர்ச்சியடைந்த நகரமாக உள்ளது.
திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பிராந்தியத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் (Bangalore) வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஐடி (IT) துறையில் பணியாற்றி கொண்டுள்ளனர்.

ஐடி தவிர, சொந்த தொழில் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த டெல்டா பகுதி மக்களும் பெங்களூரில் வசிக்கின்றனர். கர்நாடகா மாநிலம் காவிரி மூலம் டெல்டாக்காரர்களை வாழ வைக்கிறதோ இல்லையோ, பெங்களூர் நகரம் மூலம் டெல்டாக்காரர்கள் பலரின் வாழ்க்கையில் விளக்கேற்றியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.
ஆனால் பெங்களூரில் வசிக்கும் டெல்டா மக்களுக்கு ஒரு பெரிய குறை உள்ளது. பெங்களூரில் இருந்து திருச்சிக்கு போதுமான அளவில் ரயில்கள் இல்லை என்பதுதான் அந்த குறை. குறிப்பாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயில் இல்லை என்பது பெங்களூர் வாழ் டெல்டா மக்களின் நீண்ட நாள் ஏக்கமாக உள்ளது.

தமிழகத்திற்கு தற்போது ஏராளமான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. சென்னை சென்ட்ரல்-மைசூர் (Chennai-Mysore), சென்னை-கோவை (Chennai-Coimbatore), சென்னை-விஜயவாடா (Chennai-Vijayawada), சென்னை-திருநெல்வேலி (Chennai-Tirunelveli), கோவை-பெங்களூர் (Coimbatore-Bangalore) போன்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், சென்னை சென்ட்ரல்-மைசூர் இடையே 2வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கூட சமீபத்தில் தொடங்கப்பட்டு விட்டது. ஆனால் திருச்சி-பெங்களூர் இடையே இன்னும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்படவில்லை. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இது காவிரி டெல்டா மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு ஆகும்.
திருச்சி-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவைக்காக காத்திருப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், நீங்கள் சந்தோஷப்பட வேண்டிய நேரம் இது. ஆம், டெல்டா தலைநகரையும், காவிரி தலைநகரையும் இணைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே-யிடம், திருச்சி ரயில்வே கோட்டம் வலியுறுத்தியுள்ளது. இதற்கு தென்னக ரயில்வே தலைமையும் க்ரீன் சிக்னல் கொடுத்திருப்பதாக தெரிகிறது. எனவே திருச்சி-பெங்களூர் இடையே விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சீறி பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டால், திருச்சி-பெங்களூர் இடையேயான பயண நேரம் வெகுவாக குறையும் என தெரிகிறது. இது ஆம்னி பஸ்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. தற்போதைய நிலையில் ஆம்னி பஸ்களில் திருச்சியில் இருந்து பெங்களூர் செல்ல சராசரியாக 7-8 மணி நேரம் ஆகிறது.
மறுபக்கம் நான்-ஸ்டாப் விமானங்கள் என்றால், சுமாராக 1 மணி நேரம் ஆகும். அதுவே சென்னையை சுற்றி செல்லும் விமானங்கள் என்றால், இன்னும் பல மணி நேரம் ஆகும். அதாவது, இந்த விமானங்கள் திருச்சியில் இருந்து பெங்களூரை அடைய குறைந்தபட்சம் 4 மணி நேரத்தில் இருந்து அதிகபட்சமாக 9 மணி நேரம் வரை எடுத்து கொள்கின்றன.
விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகள், பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து நகருக்கு உள்ளே வர ஆகும் நேரம் (போக்குவரத்து நெரிசலை பொறுத்து 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரத் வரை ஆகலாம்) ஆகியவற்றை எல்லாம் கணக்கில் கொண்டால், விமானங்களை காட்டிலும் கூட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மிச்சப்படுத்துவதாக இருக்கும் என தெரிகிறது.
எனவே திருச்சி-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பெங்களூர் வாழ் டெல்டா மக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம். ஆனால் தற்போது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், கூடிய விரைவில் இந்த ரயிலை நாம் எதிர்பார்க்க முடியுமா? என்பது சந்தேகம்தான். எனினும் அடுத்த சில மாதங்களில் இந்த ரயில் ஓடும் என நாம் உறுதியாக நம்பலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: திருச்சி-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டால், அது திருச்சி மக்களுக்கு மட்டுமல்லாது, டெல்டா பகுதியை சேர்ந்த பல்வேறு மாவட்ட மக்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். அதேபோல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள், இந்த ரயிலின் அறிமுகத்தை தாமதப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.


Click it and Unblock the Notifications








