2 மணிநேரம் உலகையே திரும்பி பார்க்க வைத்த திருச்சி விமானம்! நடந்தது இது தான்!
திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே லேண்டிங் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. விமானம் 2 மணி நேரம் திருச்சி பகுதியில் சுற்றி வந்து பின்னர் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் நடுவானில் தரையிறங்குவதில் சிக்கலை சந்தித்து 2 மணி நேரம் போராடிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இது குறித்து தொழில்நுட்ப தகவல்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்ற முழுமையான விபரங்களை இங்கே வழங்கி உள்ளோம்.
திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று மாலை திட்டமிட்டபடி 5:43 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து டேக் ஆஃப் ஆனது. விமானம் டேக் ஆஃப் ஆன ஒரு சில நிமிடங்களிலேயே விமானத்தின் லேண்டிங் கியரில் பிரச்சனை இருப்பது விமானிக்கு தெரியவந்தது. இதனால் விமானத்தை சார்ஜா நோக்கி கொண்டு சென்றால் அங்கு லேண்டிங் செய்யும்போது பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து விமானி விமான கட்டுப்பாட்டு அறைக்கு இது தகவலை தெரிவித்தார். உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானத்தை தொடர்ந்து திருச்சி பகுதியில் சுற்றிக் கொண்டிருக்க உத்தரவிடப்பட்டது. மேலும் விமான நிலைய அதிகாரிகள் எல்லாம் உஷார் படுத்தப்பட்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தினர். உடனடியாக பறந்து கொண்டிருக்கும் விமானத்தை பத்திரமாக தரையிறக்குவதற்குரிய ஏற்பாடுகளை எல்லாம் செய்தார்கள்.
விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் பறந்து கொண்டிருக்கும் விமானத்தை தரையிறக்க அதிக நேரமும் கிடையாது. அதேநேரம் விமானத்தை தரை இறக்கியாக வேண்டிய கட்டாயத்தால் ரிஸ்க் எடுத்து விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார்கள். இதற்காக முன்னேற்பாடுகள் எல்லாம் நடந்தது. ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு படையினர் உள்ளிட்ட அனைத்து அவசர நிலை ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

சுமார் 5:45 மணிக்கு டேக் ஆஃப் ஆன விமானம் இரவு 8 மணி வரை திருச்சி பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தது. சரியாக 8:15 மணிக்கு திட்டமிட்டபடி விமானம் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக விமானியின் சாதுரியத்தால் பெரிய அளவுக்கு விமான விபத்துக்கள் எதுவும் நடக்கவில்லை. விமானத்தில் இருந்த 141 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
லேண்டிங் பிரச்சினை ஏற்பட்டது எப்படி?: பொதுவாக விமானம் கிளம்பும்போது இப்படியான முக்கியமான விஷயங்கள் எல்லாம் சரியாக செக் செய்யப்படும். இவை எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே விமானம் பறப்பதற்கான அனுமதி வழங்கப்படும். அதன்படி இந்த விமானத்தில் அனைத்து விஷயங்களும் சோதனை செய்யப்பட்டு அதன் பின்னர்தான் பறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கும்.

விமானத்தின் லேண்டிங் கியர் என்பது விமானத்தின் சக்கரம் இருக்கும் பகுதிதான். விமானம் டேக் ஆஃப் ஆன பிறகு சக்கரம் விமானத்திற்கு உள்ளே செல்ல வேண்டும். இப்படியாக விமானம் டேக் ஆஃப் ஆகும் போது சக்கரம் உள்ளே செல்வதுதான் பிரச்சினையாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அதன் காரணமாக தான் விமானம் வேறு இடத்திற்கு பறக்கவில்லை அதே இடத்திலேயே தரை இறக்க உத்தரவிடப்பட்டது.
என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது குறித்த விசாரணை முடிவடையும் போது தான் இந்த பிரச்சனைக்கு என்ன காரணம் இதற்கு பின்னால் எதாவது சதி திட்டம் இருக்கிறதா? அல்லது இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட பிரச்சனையா என்பது தெரியவரும்.
2 மணி நேரம் விமானம் பறந்தது ஏன்: விமானம் டேக் ஆஃப் ஆனவுடன் விமானத்தின் லேண்டிங் பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. இருந்தாலும் தொடர்ந்து திருச்சியை சுற்றியே விமானம் பறக்க வைக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த விமானம் வானிலையே வட்டமடித்துக் கொண்டிருந்தது. பலருக்கும் விமானத்தை உடனடியாக தரையிறக்க முயற்சி செய்ய வேண்டி தானே ஏன் கால தாமதம் ஏற்படுத்தினார்கள் என்ற கேள்வி இருக்கும்.
இதற்கு முக்கியமான காரணம் விமானத்தின் எடையை குறைப்பது தான். பொதுவாக லேண்டிங் பிரச்சினை ஏற்படும் போது விமானம் அதிக எடையில் இருந்தால் அந்த பிரச்சினை மேலும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. அதனால் முடிந்த அளவுக்கு விமானத்தின் எடையை குறைத்தே லேண்டிங் செய்ய முயற்சி செய்வார்கள்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது விமானத்தின் எடையை குறைக்க வேண்டும் என்றால் இருக்கும் ஒரே ஆப்ஷன் விமானத்தில் உள்ள எரிபொருளை செலவு செய்வதுதான். விமானத்தில் உள்ள எரிபொருள் எடையை அதிக அளவில் இருக்கும் என்பதால் அதை குறைத்தாலே பெரும் அளவிலான எடை விமானத்திலிருந்து குறைந்துவிடும். இதனால் விமானம் லேண்டிங் ஆகும்போது பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு குறையும்.
இதனால் எரிபொருள் தீரும் வரை விமானம் திருச்சி பகுதியில் வட்டமடித்து வர உத்தரவிடப்பட்டது. 2 மணி நேரத்திற்கு பிறகு தான் விமானத்தில் உள்ள எரிபொருள் அளவு கணிசமான அளவு குறை குறையும். அதனால் அதன் பிறகு லேண்டிங் செய்ய உத்திரவிடப்பட்டிருந்தது. இதனால்தான் இந்த 2 மணி நேரம் விமானம் திருச்சி பகுதியில் சுற்றிக் கொண்டே வந்தது.
விமானங்களில் விமானி நினைத்தால் எரிபொருளை காற்றில் கலந்து விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எரிபொருள் டேங்கை ஓப்பன் செய்து விட்டே பறந்தால் விமானத்தின் எரிபொருள் வேகமாக குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் திருச்சியில் நடந்த சம்பவத்தில் அப்படியாக விமானத்தில் உள்ள எரிபொருள் குறைக்கப்படவில்லை இதற்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது.
லேண்டிங் பிரச்சினை இருக்கும்போது விமானம் அதிக உயரத்தில் பறக்க அனுமதிக்கப்பட மாட்டாது. உயரம் அதிகமாக காற்றின் அழுத்தம் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் அது லேண்டிங் கியருக்கு மேலும் பிரச்சனை அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. இதனால் விமானம் குறைவான உயரத்திலேயே வானில் வட்டமடித்துக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் எரிபொருளை திறந்து விடுவது சரியான முறையாக இருக்காது.
குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் விமானம் பறக்கும் போது தான் எரிபொருளை திறந்து விடும்போது அது காற்றுடன் கலந்து பூமிக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கும். குறைவான உயரத்தில் பறக்கும் போது இப்படியாக எரிபொருளை திறந்து விட்டால் அந்த எரிபொருள் நேராக பூமியில் வந்து விழுந்து பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இதன் காரணமாக தான் விமானத்தில் உள்ள எரிபொருள் விமானியால் திறந்து விடப்படாமல் தொடர்ந்து அதை இன்ஜினிற்குள் செலுத்தி அந்த எரிபொருளை செலவு செய்வதற்காக 2 மணி நேரத்தை எடுத்துக் கொண்டனர். இந்த 2 மணி நேர கால அவகாசத்திற்குள் அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் போதுமான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய முடிந்தது.
மேலும் குறிப்பிட்ட விமானத்தில் ஏற்பட்ட லேண்டிங் கியர் கோளாறு என்பது விமானம் தரையிறங்குவதில் பெரிய அளவு பிரச்சினையை ஏற்படுத்தாது என முன்பே உணர்ந்திருந்தார்கள். அதனால் தான் தைரியமாக விமானத்தை தரையிறக்க உத்தரவிட்டார்கள். இருந்தாலும் விமானியின் சாதூரியம் இதில் மிக முக்கியமான விஷயம் என்பதால் அவருக்கு போதுமான அனைத்து இன்ஸ்பெக்ஷன் மற்றும் பயிற்சிகளும் வழங்கப்பட்டிருந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக விமானிகள் பயிற்சி பெறும் போது இப்படியான அவசர கால சூழ்நிலையில் எப்படி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கும். அதற்கான பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். இதனால் விமானிகள் இந்த மாதிரியான சூழ்நிலைகளை மிக சுலபமாக சமாளிப்பார்கள். திருச்சி சம்பவம் இதற்கு ஒரு சாட்சியாக அமைந்துள்ளது தொடர்ந்து விமான நிறுவனங்கள் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். நடந்த பிரச்சனை எப்படி நடந்தது என முறையாக விசாரணை நடத்தி இதற்கு பின்னால் சதி இருக்கிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









