இனி ஒரு நாளுக்கு 200 ரூபாய்க்கு மட்டும்தான் பெட்ரோல் போட முடியுமா? அதிர்ச்சியில் உறைந்த வாகன உரிமையாளர்கள்!
இந்தியாவின் வடகிழக்கு (North-East) பகுதியில் உள்ள மாநிலங்களில் ஒன்று திரிபுரா (Tripura). அஸ்ஸாம் (Assam), மிசோரம் (Mizoram) மற்றும் வங்கதேசம் (Bangladesh) ஆகிய பகுதிகளுடன், எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள திரிபுரா மாநிலத்தில் தற்போது எரிபொருளுக்கு (Fuel) மிக கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அஸ்ஸாமின் ஜாடிங்கா (Jatinga) பகுதியில் ஏற்பட்டுள்ள மிக கடுமையான நிலச்சரிவுதான் (Landslide) இதற்கு காரணம். இந்த நிலச்சரிவு காரணமாக திரிபுரா மாநிலத்திற்கு சரக்கு ரயில் (Goods Train) போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே திரிபுரா மாநிலத்தில் தற்போது பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) ஆகிய மிக முக்கியமான எரிபொருட்களுக்கு மிக கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே திரிபுரா மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு தற்போது அதிரடியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன உரிமையாளர்கள் தற்போது மிக கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

திரிபுரா மாநிலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி, இனி இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய்க்கு மட்டுமே எரிபொருள் விற்பனை செய்யப்படும். அதே நேரத்தில் நான்கு சக்கர வாகனங்கள் என்றால், ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்கு மட்டுமே எரிபொருள் விற்பனை செய்யப்படும்.
மறுபக்கம் பஸ்கள் என்றால், ஒரு நாளைக்கு 60 லிட்டர் எரிபொருள் மட்டும்தான் விற்பனை செய்யப்படும். மினி பஸ்கள் என்றால், ஒரு நாளைக்கு 40 லிட்டர் எரிபொருள் மட்டுமே விற்பனை செய்யப்படும். மூன்று சக்கர வாகனங்கள் விடுபட்டுள்ளதே என நீங்கள் நினைப்பது புரிகிறது.

மூன்று சக்கர வாகனங்கள் என்றால், ஒரு நாளைக்கு 15 லிட்டர் எரிபொருள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் நியாயமான அளவில் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த திடீர் கட்டுப்பாடுகள், மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக திரிபுரா மாநிலத்தை சேர்ந்த வாகன உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர். இதனால் பிரச்னையை கூடிய விரைவில் சரி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவை பொறுத்தவரையில், பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது என்பது அரிதான ஒரு விஷயம் ஆகும். எனினும் எலெக்ட்ரிக் வாகனங்களை (Electric Vehicles) மாற்று ஆப்ஷனாக வைத்து கொண்டால், இது போன்ற பிரச்னைகளை எளிதாக சமாளித்து விடலாம் என நாங்கள் கருதுகிறோம்.
இந்தியாவில் தற்போது பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் இறக்குமதியை குறைக்க வேண்டும் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டைதான் அதிகமாக ஊக்குவிக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளும் கொடுக்கப்படுகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு களமிறக்கி வருகின்றன.


Click it and Unblock the Notifications








