காரை அப்பளத்தை விட மோசமா நசுக்கிய லாரி! கிரேன் வந்து தூக்கிய போது நடந்த அதிசயம்! எல்லாரும் மெரண்டு போய்ட்டாங்க
இந்திய சாலைகளில் வாகனம் ஓட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இங்கு பல்வேறு இடங்களில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. போதாக்குறைக்கு நிறைய வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகள் எதையும் முறையாக பின்பற்றுவது கிடையாது. வாகனங்களை தாறுமாறாக இயக்குகின்றனர்.
இதன் காரணமாக அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதில் பலர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். ஆனால் மிகவும் கொடூரமான ஒரு சில சாலை விபத்துக்களில் கூட, சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து விடுகின்றனர். அத்தகைய சாலை விபத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு விஷயமாக உள்ளன.

இந்த வகையிலான ஒரு சாலை விபத்து தற்போது நிகழ்ந்துள்ளது. சரக்குடன் வந்த லாரி ஒன்று மேலே விழுந்ததில், ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) கார், அப்பளத்தை விட மோசமாக நொறுங்கியது. எனினும் காருக்கு உள்ளே இருந்த டிரைவர் உயிர் தப்பியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ (Video) யூடியூப் (YouTube) தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. நிலக்கரி ஏற்றி வந்ததாக கூறப்படும் லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால், ஹூண்டாய் க்ரெட்டா காரின் மீது விழுந்து, அதனை அப்பளத்தை விட மோசமாக நொறுக்கியுள்ளது.

ஹிமாச்சல பிரதேச மாநிலம் மலைகளால் சூழப்பட்டதாகும். இங்கு பெரும்பாலான சாலைகள் குறுகலாக இருக்கும். அடிக்கடி கொண்டை ஊசி வளைவுகள் வரும். அப்படிப்பட்ட ஒரு இடத்தில் மிகவும் கவனமாக வாகனங்களை ஓட்ட வேண்டும். ஆனால் லாரி டிரைவர் அலட்சியமாக செயல்பட்டதால்தான், இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
அவர் அதிவேகத்திலும், தாறுமாறாகவும் லாரியை ஓட்டி கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வளைவு ஒன்றில் திரும்ப வேண்டிய இடத்தில், அவரால் லாரியை கட்டுப்படுத்த இயலாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது. லாரியில் அதிகப்படியான சரக்குகள் இருந்ததும் கூட, இதற்கு ஒரு காரணம்தான்.
இந்த தவறுகள் காரணமாக கண்ணிமைக்கும் நேரத்தில் கொடூரமான விபத்து நிகழ்ந்து விட்டது. லாரி மேலே விழுந்து நொறுக்கியதில், ஹூண்டாய் க்ரெட்டா காரின் டிரைவர் அடியில் சிக்கி கொண்டார். கார் எந்த அளவிற்கு நொறுங்கியுள்ளது என்பதை நம்மால் இந்த வீடியோவில் மிகவும் தெளிவாக காண முடிகிறது.
அப்படி இருந்தும் கூட டிரைவர் உயிர் பிழைத்திருப்பது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான். இங்கே ஆச்சரியமான மற்றொரு விஷயம் என்னவென்றால், ஹூண்டாய் க்ரெட்டா காரின் டிரைவர் சுமார் 3 மணி நேரம் இந்த இடிபாடுகளுக்கு இடையே உயிரை கையில் பிடித்து கொண்டு போராடியுள்ளார் என்பதுதான்.
லாரியின் எடை மிகவும் அதிகமாக இருந்த காரணத்தால், கிரேன் வைத்துதான் அதனை தூக்கியுள்ளனர். அப்போதுதான் ஹூண்டாய் க்ரெட்டா காரின் டிரைவர் உயிருடன் இருந்ததே அனைவருக்கும் தெரிய வந்தது. எப்படியோ இவ்வளவு மோசமான விபத்திலும் அவர் உயிர் பிழைத்து விட்டார் என்பது மகிழ்ச்சியான ஒரு செய்திதான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: லாரி போன்ற கனரக வாகனங்களை ஓட்டுபவர்கள், கூடுதல் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். அதிகப்படியான எடையை சுமந்து செல்வதால், சில சமயங்களில் அவற்றை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியமாக இருக்கும். எனவே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கலாம்.


Click it and Unblock the Notifications








