ஹைவே நம்பருக்கு பின்னால் இவ்வளவு மேட்டரு இருக்கா!! சும்மா கண்ணை மூடி சூஸ் பண்ற விஷயம் கிடையாது!
எந்தவொரு நாட்டிற்கும் நெடுஞ்சாலைகள் அவசியமான ஒன்று. ஏனெனில், நாட்டின் பாதி பொருளாதாரத்தை நேரடியாக நிர்ணயிப்பவை நெடுஞ்சாலைகள் ஆகும். வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலமாக கொண்டுவரப்படும் பொருட்களை கடலில் இருந்து தொலைவாக உள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்ல நெடுஞ்சாலைகள் ஆணி வேராக விளங்குகின்றன.
இதன் காரணமாகவே, நெடுஞ்சாலைகளையும், விரைவுச்சாலைகளையும் நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. இந்தியாவில் நெடுஞ்சாலைகள் சுருக்கமாக 'என்.எச்' என்கிற பெயரில், இறுதியில் ஒரு எண் உடன் அழைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, என்.எச்-47, என்.எச்-68. ஆனால், இந்த நெடுஞ்சாலை எண்கள் ஒரு வரிசைப்படி இருக்காது.

அதாவது, என்.எச்-1 ஒரு இடத்தில் இருக்கிறது என்றால், என்.எச்-2 சம்பந்தமே இல்லாமல் வேறொரு இடத்தில் இருக்கும். நெடுஞ்சாலை எண்கள் ஏன் இவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன என்று எப்போவாவது யோசித்துள்ளீர்களா? எதுவும் தெரியாதவர்களுக்கு வேண்டுமாயின், இந்த எண்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாதவை போன்று தெரியலாம். ஆனால், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) இந்த எண்களை ஒரு பேட்டர்னில் நிர்ணயிக்கிறது.
ஒவ்வொரு நெடுஞ்சாலை எண்களும், அந்த நெடுஞ்சாலை அமைந்துள்ள புவியியல் இடத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை எண்களை நிர்ணயிப்பதில், கடைசியாக 2010ஆம் ஆண்டில் புதிய யுக்தியை மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சகம் கொண்டுவந்தது. இதன்படி, நாட்டின் முக்கியமான நெடுஞ்சாலைகளுக்கு ஒற்றை இலக்க எண்கள் சூட்டப்பட்டன.

அதாவது, என்.எச்-1 இல் இருந்து என்.எச்-9 வரையிலான பெயர்கள் நாட்டின் முக்கியமான நெடுஞ்சாலைகளுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்தியாவின் வடக்கில் இருந்து தெற்கை நோக்கி செல்லும் நெடுஞ்சாலைகளுக்கு இரட்டைப்படை எண்கள் உள்ளன. அதாவது, 12, 14, 16, 18 போன்றவை. இந்த நெடுஞ்சாலைகள் ஒருவேளை விரிவாக்கம் செய்யப்பட்டாலும், இந்தியாவின் தெற்கை நோக்கியே வளரும்.
இவ்வாறு வடக்கில் இருந்து தெற்கை நோக்கி செல்லும் நெடுஞ்சாலைகளுக்கான எண்கள் இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதிக்கு செல்ல, செல்ல அதிகரித்து செல்வதை காணலாம். தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், உதாரணத்திற்கு கொல்கத்தாவில் இருந்து தெற்கு நோக்கி ஹைதராபாத் அல்லது சென்னை வரையிலான நெடுஞ்சாலைக்கு ஒரு எண் கொடுக்கப்படுகிறது என்றால், அந்த எண் மேற்கை நோக்கி நகர, நகர அதிகரித்து கொண்டே செல்லும்.

இதனால், மும்பையில் இருந்து கொச்சி வரையிலான நெடுஞ்சாலைக்கு அதிகப்பட்ச இரட்டைப்படை எண் வழங்கப்படும். இவ்வளவு நேரம், வடக்கே இருந்து கீழே தெற்கை நோக்கி வரும் நெடுஞ்சாலைகளை பார்த்தோம். அடுத்து, கிழக்கே இருந்து மேற்கு நோக்கி செல்லும் நெடுஞ்சாலைகளை பற்றி பார்ப்போம். இந்த நெடுஞ்சாலைகளுக்கு ஒற்றைப்படை எண்கள் கொடுக்கப்படுகின்றன.
கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் நெடுஞ்சாலைகள் வடக்கில் இருந்து கீழே தெற்கு நோக்கி இறங்க, இறங்க அவற்றிற்கான ஒற்றைப்படை எண்கள் அதிகரிக்கின்றன. இவை இல்லாமல், கிளை நெடுஞ்சாலைகள் என்பவையும் உள்ளன. ஓர் முக்கிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் நெடுஞ்சாலைகள், கிளை நெடுஞ்சாலைகள் எனப்படுகின்றன. இவற்றிற்கான எண்கள் என்.எச்244, 144 & 344 என மூன்று இலக்கங்களில் கொடுக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய தேசிய நெடுஞ்சாலைகளுக்கு எண்கள் எவ்வாறு சூட்டப்படுகின்றன என்பதை புரிந்துக் கொள்வது கொஞ்சம் சிரமம் தான். ஆனால், புரிந்துக் கொண்டால் இந்த விஷயம் மிகவும் எளிமையானதாக இருக்கும். நெடுஞ்சாலை எண்களின்படி பார்க்கும்போது, இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து செல்லும் நெடுஞ்சாலைகளுக்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் முக்கியத்துவம் கொடுப்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









