ரயிலில் நைட் 10 மணிக்கு மேல டிக்கெட் செக் பண்ண கூடாது... ரூல்ஸ் என்ன சொல்லுது தெரியுமா?
ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் இரவு நேரங்களில் தேவையில்லாமல் டிக்கெட் பரிசோதனை செய்யமாட்டார்கள் ஏன் தெரியுமா? ரயில்வே நிர்வாக விதிமுறைகளின் படி இப்படியாக இரவு 10 மணிக்கு மேல் பயணிகளிடம் தேவையில்லாமல் டிக்கெட் பரிசோதனை செய்வதை தடுக்க விதிமுறைகளும் உள்ளன. இது குறித்த தெளிவான முழு விபரங்களைக் கீழே காணலாம் வாருங்கள்.

பயணத்திலேயே சுகமான பயணம் என்றால் ரயில் பயணம் தான். ஒருவர் நீண்ட தூரத்தைப் படுத்துத் தூங்கிக்கொண்டே பயணம் செய்வதை ரயில்கள் தான் சாத்தியமாக்கியுள்ளன. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்தியா முழுவதும் பெரும்பாலான ரயில்கள் இரவில்தான் பயணம் செய்கின்றன.

ரயில்கள் பெரும்பாலும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பதால் பயணிகள் இரவு பயணத்தை விரும்புவதால் இரவில் ஓடும் ரயில்கள் தான் அதிகம். இந்நிலையில் ரயிலில் செல்பவர்களின் டிக்கெட்களை சோதனை செய்ய ஒவ்வொரு 3-4 பெட்டிக்கு ஒரு டிக்கெட் பரிசோதகர் பணியில் இருப்பார்.

அவர் பயணிகளின் டிக்கெட்களை சரி பார்த்து வழங்குவார். முறையான டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட அதிகாரமும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு இருக்கிறது. பொதுவாக ஒரு நீண்டதூர ரயிலில் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை டிக்கெட் பரிசோதகர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட்களை சோதனை செய்வதில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகப் புகார்கள் ரயில்வே துறைக்கு வந்து கொண்டே இருந்தன. குறிப்பாக ஒரு முறை டிக்கெட் சோதனை செய்தபின்பு மீண்டும் புதிய டிக்கெட் பரிசோதகர் வந்ததும் அவரும் அனைவரது டிக்கெட்டை சோதனை செய்கிறார்.

இதனால் பயணிகள் எரிச்சலைடைகின்றனர். மேலும் இந்த டிக்கெட் பரிசோதனை செய்வதைச் சாக்காக வைத்து தனியாகப் பயணிக்கும் பெண் பயணிகள் டிக்கெட் பரிசோதகர்களே சில நேரம் தேவையில்லாமல் தொந்தரவு செய்வதாகப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தான். ரயில்வே நிர்வாகம் டிக்கெட் பரிசோதகர்களுக்கான விதிமுறைகளை வகுத்துள்ளது.

அதன்படி ஒரு டிக்கெட் பரிசோதகர் இரவு 10 மணிக்கு மேல் ஒரு பயணியிடம் இரண்டாவது முறையாக டிக்கெட்டை சோதனை செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. அப்படி என்றால் ஒரு பயணி இரவு 10 மணிக்கு முன்பு ரயிலில் ஏறிவிட்டால் அவர் ஏறி தனது சீட்டிற்கு வந்ததும் ஒரு முறை டிக்கெட்டை பரிசோதகர் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

ஆனால் இரவு 10 மணிக்குப் பின்பு அவரிடம் மீண்டும் சென்று பரிசோதனை செய்யக்கூடாது. அதுவே அந்தப்பயணி இரவு 10க்கு பிறகு தான் ரயிலில் ஏறுகிறார் என்றால் அவரிடம் ஒரு முறை டிக்கெட்டை பரிசோதனை செய்து கொள்ளலாம். காலை 6 மணி வரை இந்த இரண்டாவது சோதனைக்குத் தடை உள்ளது.

ஆனால் இந்த தடை என்பது தேவையில்லாத சோதனைகளுக்குத் தான். ஆனால் குறிப்பிட்ட டிக்கெட்டில் குழப்பம், சந்தேகம், அல்லது வேறு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்தால் அதைத் தீர்க்க டிக்கெட் பரிசோதகர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் டிக்கெட்களை பரிசோதனை செய்து கொள்ளலாம். இரவு 10 மணிக்கு மேல் தொந்தரவு செய்யக்கூடாது என்ற சட்டம் பயணிகளுக்கு நிம்மதியான பயணத்தை உறுதி செய்வதற்காகத் தான்.

இனி நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் பரிசோதகர் இரவு 10 மணிக்கு மேல் உங்களைத் தேவையில்லாமல் தொந்தரவு செய்வதாக உணர்ந்தீர்கள் என்றால் உடனே ரயில்வே உதவி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு இது குறித்து புகார் அளிக்கலாம். உடனடியாக அந்த டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications