மத்தவங்களுக்கு எல்லாம் ஃபைன் போடும் போலீஸ் டிடிஎஃப் வாசனை ஏன் கைது பண்ணாங்க தெரியுமா? முழு விபரம் இதோ!
யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய காரணத்திற்காக மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் செல்போன் பேசியபடி கார் ஓட்டிய வீடியோவை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார். இதை ஆதாரமாக வைத்து மதுரை போலீசார் அவரை கைது செய்துள்ளார்கள். சமீபத்தில் தான் கார் டிரைவிங் லைசென்ஸ் பெற்றார். கார் ஓட்டுவதற்கு உரிமம் பெற்ற அடுத்த ஒரு சில நாட்களிலேயே இவர் விதிமுறைகளை மீறி கார் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
யூட்யூபில் டிராவல் விலாக் போட்டு பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் டிராவல் விலாக் மூலம் பிரபலமானதை விட சர்ச்சைகளில் சிக்கி செய்திகளில் இடம் பெற்று பிரபலமானது தான் அதிகம். இவர் பைக் மூலம் இந்தியா முழுவதும் சுற்றி வீடியோ வெளியிட்டு வந்தார். அப்பொழுது இவர் மீது அதிக வேகத்தில் பைக் ஓட்டி இளைஞர்களை தவறான பாதையில் வழி நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல்வேறு முறை இவர் கோர்ட்டுக்கு சென்று வந்துள்ளார். இவர் கோர்ட்டுக்கு சென்று வந்ததை எல்லாம் கெத்தாக வீடியோ எடுத்து வெளியிட்டு சமூக வலைதளங்களில் அதன் மூலமும் பிரபலம் தேடிக்கொண்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார்.
இவர் விபத்தில் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியானது. அதில் இவர் பைக்கில் செல்லும்போது வீலிங் செய்ய முயன்று பைக் விபத்தில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில் இவர் படுகாயம் அடைந்த நிலையில் இவர் சாலையில் விபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவரிடம் உள்ள ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

இதனால் இவர் பைக் ஓட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின் ஜெயிலில் இருந்து வெளியே வந்த டிடிஎஃப் வாசன் மற்ற நபர்களுடன் வாகனங்களில் பயணம் செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் கார் ஓட்டுவதற்கான உரிமத்தை வாங்கி விட்டதாகவும் இனி கார் ஓட்டி வீடியோ வெளியிடப் போவதாகவும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர் கார் ஓட்ட உரிமம் வாங்கிய அடுத்த ஒரு சில நாட்களிலேயே சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மதுரை பகுதியில் இவர் பயணம் செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோவில் இவர் செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகளையும் அவர் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதை பார்த்த போலீசார் டிடிஎஃப் வாசன் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரை மதுரை அண்ணா நகர் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து டிடிஎஃப் வாசன் சாலை விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுவதால் இவர் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டு இருக்கிறது.
வாகனங்களில் பயணம் செய்யும்போது செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது என்பது மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும். செல்போனை பேச வேண்டும் என்றால் வாகனங்களை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு தான் வாகன ஓட்டுநர் பேச வேண்டும். செல்போனில் லவுட் ஸ்பீக்கர் மூலம் பேசினாலும், அல்லது ஹெட் போன் மாட்டிக்கொண்டு பேசினாலும் அல்லது செல்போனில் மெசேஜ் அனுப்பி கொண்டே பயணம் செய்தாலும் அது சட்டப்படி குற்றம் தான்.
வாகனம் ஓட்டும்போது முழு கவனமும் வாகன ஓட்டிக்கு சாலையில் தான் இருக்க வேண்டும். செல்போனை பயன்படுத்தும் போது வாகன ஓட்டியின் கவனம் செல்போனுக்குள் மாறுவதால் வாகனம் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மோட்டார் வாகன சட்டப்படி இது சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறது. இந்த குற்றத்திற்காக இவருக்கு ரூபாய் 5000 வரை அபராதம் மிதிக்க வாய்ப்புள்ளது.
இதை தொடர்ந்து இது போன்ற சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதால் போலீசார் தற்போது அவரை கைது செய்துள்ளார்கள். இவர் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விரிவான விபரங்கள் எதுவும் தெரியவில்லை. இந்த விபரங்கள் தெரியும் பட்சத்தில் இவர் ஜாமினில் விடுதலை செய்யப்படுவாரா அல்லது சிறையில் அடைக்கப்படுவாரா என்ற தகவல் தெரிய வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவது என்பது மோட்டார் வாகன படி குற்றமான விஷயம் தான். ஆனால் இந்த குற்றங்களில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் அபராதம் மட்டும் விதிக்கப்படும்போது டிடிஎஃப் வாசன் கைது செய்யப்படுவதற்கு முக்கியமான காரணம் இவர் தொடர்ந்து சாலை விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுவது தான். இதனால் நீங்கள் சாலையில் வாகனம் ஓட்டும்போது முழு கவனத்தையும் சாலையில் வைத்து செல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









