ரூ.381 கோடியில் பராமரிப்பு பணிகள்... நம்ம தூத்துக்குடி ஏர்போர்ட் வேற லெவல்ல மாற போகுது!!
தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி விமானம் நிலையம் ரூ.381 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த சீரமைப்பு பணிகள் மூலம் இந்த விமான நிலையத்தில் புதியதாக வரவுள்ள அம்சங்களை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

விரைவான பயணத்தாலும், எப்போதும் கிடைக்கக்கூடிய டிக்கெட்களினாலும் விமானங்களை போக்குவரத்திற்காக பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எந்த அளவிற்கு என்றால், அருகில் உள்ள முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கு கூட தற்சமயம் பெரும்பாலானோர் விமான சேவை இருக்கிறதா என்றே தேடுகின்றனர்.

விமான சேவை இல்லாத பட்சத்திலேயே இரயில், கார் கேப் என செல்கின்றனர். இவ்வாறு விமான போக்குவரத்தின் பயன்பாடு மக்களிடத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், விமானங்களையும் விமான நிலையங்களையும் அவ்வப்போது சீரமைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இந்த வகையிலேயே தற்சமயம் தூத்துக்குடி விமான நிலையம் பெரும் தொகையில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டதிலேயே பெரும் சீரமைப்பு பணிகளாக விளங்கும் இவற்றின் மூலம் ஏ-321 விமானத்திற்கான ஓடுத்தள பாதை, விமானங்களை நிறுத்தி வைக்க புதிய இடம், புதிய டெர்மினல் கட்டிடம், டெக்னிக்கல் பிளாக்-கம்-கண்ட்ரோல் கோபுரம் மற்றும் புதிய தீயணைப்பு நிலையம் உள்ளிட்டவை கட்டமைக்கப்பட உள்ளன. இவை மொத்தத்திற்கும் ஆகும் செலவாக ரூ.381 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 13,500 சதுர மீட்டர்கள் பரப்பளவில் கட்டப்படும் புதிய டெர்மினல் கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 600 பயணிகளை கையாள முடியுமாம். இரு ஏரோ பிரிட்ஜ்கள் (விமான நிலையத்தையும் விமானத்தின் பிஸ்னஸ் கிளாஸ் பகுதியின் வாசலையும் இணைக்கும் பாலம்) மற்றும் கார் பார்க்கிங் வசதிகளுடன் கட்டப்படும் புதிய தூத்துக்குடி விமான நிலையத்தை, அதேநேரம் பயணிகள் அருகில் உள்ள சாலைகளையும் எளிதாக அணுகும் விதமாக உருவாக்கி வருகின்றனர்.

அத்துடன், தற்கால மாடர்ன் வசதிகள் அனைத்தும் புதிய தூத்துக்குடி விமான நிலையத்தில் கொண்டுவரப்படும். பிரபலமான செட்டிநாடு வீடுகளின் ஸ்டைலில் கட்டப்பட உள்ளதாக கூறப்படும் தூத்துக்குடி விமான நிலையத்திற்கான புதிய டெர்மினல் கட்டிடம் தென்னிந்திய விமான நிலையங்களிலேயே தனித்துவமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, தூத்துக்குடி மக்களுக்கே உண்டான கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிப்பலிக்கும் விதமாக டெர்மினல் கட்டிடம் இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் கட்டிடத்திற்குள் அடிக்கப்பட உள்ள பெயிண்ட்களும் தூத்துக்குடி மக்களின் வாழ்க்கையை பிரதிப்பலிக்கும் நிறங்களாக இருக்கும்.

இவ்வாறு கட்டமைக்கப்பட உள்ள தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய டெர்மினல் கட்டிடம் GRIHA ரேட்டிங்கில் 4 நட்சத்திரங்களை பெற்றதாக விளங்கும் என இப்போதே கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், புதிய டெர்மினல் கட்டிடத்துடன் தூத்துக்குடி விமான நிலையத்தின் ஓடுத்தள பாதையின் அளவும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலமாக ஏ-321 வகையை சேர்ந்த விமானங்களை இயக்குவதற்கு ஏற்றதாக தூத்துக்குடி விமான நிலையம் மாறும் என கூறப்படுகிறது. இவற்றுடன், புதிய டவர்-கம்-டெக்னிக்கல் கட்டட பகுதி, தீயணைப்பு நிலையம், ஏ-321 வகையை சேர்ந்த விமானங்களை நிறுத்துவதற்கு 5 விமான பார்க்கிங் விரிகுடாக்கள் மற்றும் ஸ்பெஷல் விமான பார்க்கிங் பகுதி உள்ளிட்டவையும் இந்த புதிய கட்டமைப்புகளில் அடங்குகின்றன.

இந்தியாவில் தெற்கில் கடைக்கோடியில் அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையம் ஆகும். விமான நிலையத்தை சீரமைப்பது மட்டுமில்லாமல், தூத்துக்குடியிலும், அதன் அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி & கன்னியாக்குமரி மாவட்டங்களிலும் சுற்றுலா பகுதிகளை மேம்படுத்தினால் மட்டுமே தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடியும். தூத்துக்குடி விமான நிலையத்தில் இந்த மேம்பாட்டு & விரிவாக்க பணிகள் 2023 டிசம்பர் மாதத்தில் தான் நிறைவடையும் என தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications