பெட்ரோல் பங்க்கிற்கு போனால் இனி முதலில் இதை செக் பண்ணுங்க! புகையோட கலரை வைத்தே கண்டுப்பிடிச்சிடலாம்!
பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் (Ma Ka Pa Anand), சென்னையில் உள்ள ஓர் எரிபொருள் நிலையத்தில் டீசலை நிரப்பியதால் ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட வீடியோ தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு அப்படி என்ன நடந்தது? அவர் கூறுவதை போல் நீர் கலக்கப்பட்ட டீசலை பயன்படுத்துவதால் வாகனத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுவதன் மூலமாகவும், சில திரைப்படங்களில் நடித்ததன் மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர், மாகாபா ஆனந்த் ஆவார். திரையில் மட்டுமன்றி, நிஜ வாழ்விலும் ஜாலியான மனிதர். ஆனால் சமீபத்தில், இவரது வாழ்வில் ஒரு கசப்பான சம்பவம் நடந்துள்ளது.

தனது சொகுசு காருக்கு டீசலை நிரப்ப சென்றவருக்கு நீர் கலப்படம் செய்யப்பட்ட டீசலை நிரப்பி, அவரை பெட்ரோல் பங்க் (Petrol Bunk) நிர்வாகம் மோசடி செய்துள்ளது. இதன் விளைவாக, பாதி வழியில் கார் நின்று போனது மட்டுமன்றி, தனது சொகுசுக் காருக்கு பல லட்சம் ரூபாய் செலவு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மாகாபா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவிட்ட வீடியோ தற்சமயம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பழுதான காரை மெக்கானிக்கிடம் காண்பித்தபோது, டீசலில் அளவுக்கு அதிகமான தண்ணீர் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இதனால் காரின் என்ஜின் மற்றும் எரிபொருள் அமைப்பு பெரிதும் பாதிக்கப்பட்டது. காரைச் சரி செய்வதற்கு சுமார் 3 லட்சம் ரூபாய் செலவானதாக மாகாபா ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் நிர்வாகத்திடம் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.

ஆனால், தங்கள் தவறை முழுமையாக ஒப்புக்கொண்டு இழப்பீடு வழங்குவதற்குப் பதிலாக, அவர்கள் பேரம் பேசியதாக மாகாபா ஆனந்த் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டாம் என்று கூறிய அவர்கள், இழப்பீடாக வெறும் 80 ஆயிரம் ரூபாய் மட்டுமே தர முன்வந்தார்கள். உங்களை நம்பி வரும் மக்களுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு இதுதானா?" என்று மாகாபா ஆனந்த் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், "இனி டீசலையும் மக்களே வீட்டில் தயாரித்துக் கொள்ள வேண்டுமா?" என்றும் அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மாகாபா ஆனந்த் போன்ற ஒரு பிரபலமான நபருக்கே இந்த நிலை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்ற கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது. வாகனத்தில் நீர் கலந்த டீசலைப் பயன்படுத்துவது அதன் என்ஜின் உள்பட ஒட்டுமொத்த எரிபொருள் அமைப்புக்கே பெரும் சேதத்தை விளைவிக்கும்.
ஏனெனில் டீசலை விட நீர் அதிக அடர்த்தி கொண்டது என்பதால், அது எரிபொருள் டேங்கின் அடியில் சேர்ந்துவிடும். எரிபொருள் பம்ப் வழக்கமாக அடியிலிருந்துதான் எரிபொருளை உறிஞ்சி என்ஜினுக்கு கொடுக்கும். இதனால், வாகனம் ஸ்டார்ட் செய்த உடனேயே நீர் என்ஜினுக்குள் நுழையக்கூடும். டீசலை எரிக்கும் இடத்திற்குள் நீர் நுழையும்போது, உடனடியாக வாகனத்தில் பல செயல்திறன் சிக்கல்கள் ஏற்படும்.

டீசல் போல நீர் எரியாததால், என்ஜின் தடுமாறி, சீரற்ற முறையில் இயங்கும். திடீர் ஆற்றல் இழப்பு, வேகத்தை அதிகரிக்கவோ அல்லது தக்கவைக்கவோ முடியாத நிலை போன்றவற்றை ஓட்டுநர்கள் உணரலாம். வாகனம் ஜர்க் ஆகி கொண்டே ஓடலாம் அல்லது குலுக்கல்கள் ஏற்படலாம். மேலும், வாகனம் ஸ்டார்ட் ஆக தாமதமாகலாம் அல்லது முற்றிலும் ஸ்டார்ட் ஆக மறுக்கலாம். நீர் ஆவியாவதால், எக்ஸாஸ்ட் குழாயில் இருந்து வெள்ளை புகை அல்லது நீராவி வெளியேறுவதும் ஓர் வெளிப்படையான அறிகுறியாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டீசலில் தண்ணீர் கலந்ததால் தனது வாகனம் பழுதாகியதாகவும், அதனை சரிச்செய்ய பெரிய தொகை செலவாகியதாகவும் பலர் புகார் கூறும் நிகழ்வுகளை இணையத்தில் அவ்வப்போது பார்க்க முடிகிறது. இன்னும் சொல்லப்போனால், இது நாடு முழுக்கவே ஆங்காங்கே நடக்கக்கூடிய ஒன்று தான். அதிக பேர் இதனால் பாதிக்கப்படாததால் இன்னும் இது நாடு தழுவிய அளவில் பிரச்சனையாக மாறாமல் இருக்கிறது.
ஆனால், மாகாபா ஆனந்த் போன்ற திரை பிரபலங்களுக்கு நடக்கும்போது அது பெரிய அளவில் கவனத்தை பெறுகிறது. ஒருத்தருக்கு நடந்தாலும் சரி, அதிக பேருக்கு நடந்தாலும் சரி இது கண்டிக்கத்தக்கதே. பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளில் இதுபோன்ற மோசடிகள் நடைபெறுவது மிகுந்த கவலை அளிக்கிறது.


Click it and Unblock the Notifications









