தமிழகத்திற்கு பெருமை தேடி தந்த டிவிஎஸ்... மிக மிக மலிவு விலை உயிர் காக்கும் கருவி தயாரித்து சாதனை!
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் முதன்மையான கருவிகளில் ஒன்றான வென்டிலேட்டர்களை மிக மலிவு விலையில் தயாரித்து, டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடே மிக இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. இந்த வைரஸ் தொற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் மற்றும் இழப்புகள் ஏராளாம். மேலும், தற்போது வரையிலும் வைரஸ் அலை ஓயாமல் அடித்துக் கொண்டே இருக்கின்றது. எனவே, நோய் தொற்றால் பாதிப்போர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே வருகின்றது.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் தமிழகத்தின் தலை நகர், நம்ம சென்னை. கோயம்பேடு காய்கறி சந்தையின் மூலம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று மாநிலம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் தொற்று ஏற்படுத்தியிருப்பதை நம்மால் காண முடிகின்றது. ஆகையால், மருத்துவ மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

அதிலும் குறிப்பாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு தேவைப்படும் முதன்மையான உயிர்காக்கும் கருவியாக வென்டிலேட்டர்கள் இருக்கின்றன. இவற்றின் பற்றாக்குறையோ தலைக்கு மேல் ஓங்கி நிற்கின்றன. நாள் தோறும் வைரசால் பாதிப்போரின் எண்ணிக்கை ஆயிரம் கணக்கில் உயர்ந்து வருவதே இதற்கு முக்கிய காரணம்.

எனவே, உயிர் காக்கும் கருவிகளான வென்டிலேட்டர்கள் தேவை ஒவ்வொரு நாளும் கூடுதலாக உயர்ந்துக் கொண்டே இருக்கின்றது. இதனை பூர்த்தி செய்கின்ற பணியில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இதன்படி, நாட்டின் முன்னணி நிறுவனங்களான மாருதிசுசுகி, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் பாதுகாப்பு கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தயாரித்து வழங்கி வருகின்றன.

அந்தவகையில், தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனமும், மிக மலிவு விலையில் வென்டிலேட்டர் கருவிகளைத் தயாரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை டிவிஎஸ் நிறுவனம் மட்டுமின்றி ஐஐடி மெட்ராஸ்-ம் இணைந்து தயாரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உயிர் காக்கும் கருவிகுறித்து விளக்கிய அந்நிறுவனம், "இந்த சாதனம், சுவாசிப்பதற்கு சிரமப்படும் நோயாளிக்கு செயற்கையாக சுவாசத்தை வழங்க உதவும். இதனை, தானாக இயங்கும் பம்பின் வாயிலாக அது மேற்கொள்கிறது. இதற்காக, ஏஎம்பியூ ஏர் பேக் வழங்கப்பட்டுள்ளது. இது, சாதனத்தின் கன்ட்ரோலுக்கு கட்டுப்பட்டு நோயாளிக்கு தேவையான சுவாசத்தை வழங்கும்" என தெரிவித்திருந்தது.

சுந்தரம் வெட்டாகோ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த உயிர் காக்கும் சாதனம் ஐஐடி மெட்ராஸின் இணைவில் மட்டுமின்றி காவேரி மருத்துவமனை மற்றும் மெட்ராஸ் மருத்துவ கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பிலும் தயாரித்திருப்பதாக கூறப்படுகின்றது.

இவை, டிவிஎஸ் நிறுவனத்தின் மற்றுமொரு அங்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிரேக்ஸ் இந்தியாவில் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், அங்கு தற்போது 25 யூனிட்டுகளை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வென்டிலேட்டர்களை குறிப்பாக தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்பட இருப்பாதக டிவிஎஸ் அறிவித்துள்ளது.

சுந்தரம் வென்டாகோ, காற்று மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை இல்லாமலோ இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே, இக்கருவியின் மிக முக்கிய அம்சமாக இருக்கின்றது.
அதேசமயம், இது இயங்க கட்டாய மின்சார இணைப்பு தேவைப்படுகின்றது. அல்லது யுபிஎஸ் போன்ற மற்ற மின்திறன் வழங்கிகள் மூலமாகவும் இந்த வென்டிலேட்டர்.

மேலும், மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் ஆம்புலன்ஸ்களிலும் பயன்படும் வகையில் சுந்தரம் வென்டாகோவிற்கு உருவ அமைப்பைக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஒரு பவர் கனெக்ஷன் மட்டும் இருந்தால்போதும் இதனை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மருத்துவ நிபுணர்களுடன் மேற்கொள்ளப்பட்ட பல கட்ட ஆய்வு மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த உயிர் காக்கும் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பல லட்சங்கள் மதிப்பில் தயாராகி வரும் வென்டிலேட்டர்களுக்கு மத்தியில் இதனை சில ஆயிரங்கள் ரூபாய் மதிப்பிலேயே தயாரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதன் துள்ளியமான மதிப்புகுறித்த தகவல் வெளியாகவில்லை. குறிப்பாக, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் நோக்கிலேயே இதனை டிவிஎஸ் மிகக் குறைந்த விலையில் தயார் செய்திருக்கின்றது.
மேலும், 20 யூனிட்டுகளை மட்டுமே தயார் செய்திருக்கும் டிவிஎஸ், விரைவில் அதிக எண்ணிக்கையில் வென்டிலேட்டர்களைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








