காஷ்மீரில் நடந்த இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி... இந்தியாவிலேயே முதல் முறை என்பதால் தீவிர விசாரணை
காஷ்மீரில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உலகிலேயே மிகப்பெரிய ஆட்டோமொபைல் மார்க்கெட்டை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு ஆர்டிஓ அலுவலகங்கள் மூலம் இங்கு ஒவ்வொரு மாதமும் பல லட்சக்கணக்கான புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

சேஸிஸ் நம்பர், கலர் மற்றும் மாடல் பெயர் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு புதிய பதிவு எண்கள் ஒதுக்கப்படுகின்றன. இதன்படி ஒவ்வொரு புதிய வாகனத்திற்கும் தனித்துவமான புதிய பதிவு எண்கள் வழங்கப்படுகின்றன.

ஆனால் ஒரே மாதிரியான இரண்டு கார்கள், ஒரே பதிவு எண்ணுடன் சாலைகளில் இயங்கிய வினோதமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இத்தனைக்கும் அந்த இரண்டு கார்களும் ஒரே பகுதியை சேர்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இரண்டு ஹூண்டாய் வெர்னா செடான் கார்கள் ஒரே பதிவு எண்ணுடன் சாலையில் இயக்கப்பட்டு வந்துள்ளன. அத்துடன் அவை இரண்டும் ஒரே கலரில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர அந்த இரண்டு கார்களும் ஒரே 1.6 லிட்டர் டீசல் இன்ஜினைதான் பெற்றுள்ளன. கத்துவா அருகே உள்ள லக்கான்பூர் என்ற பகுதியை சேர்ந்த ஜடின்தர் ஷர்மா என்பவர் அளித்த ஒரு புகாரின் மூலமாகவே இந்த வினோத சம்பவம் வெளிவர தொடங்கியது.

ஜடின்தர் ஷர்மா தனது புகாரில், ''அச்சு அசலாக எனது காரை போலவே உள்ள ஹூண்டாய் வெர்னா கார் ஒன்று சாலையில் இயங்கி கொண்டுள்ளது. அத்துடன் பதிவு எண்ணும் ஒரே மாதிரியாக உள்ளது'' என்று கூறியிருந்தார். அந்த இரண்டு கார்களும் JK 08 H 0088 என்ற ஒரே பதிவு எண்ணை பெற்றுள்ளன.

ஜடின்தர் ஷர்மாவிடம் இருந்து புகாரை பெற்று கொண்ட போலீசார் உடனே விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில், ஒரே பதிவு எண்ணுடன் இருந்த மற்றொரு ஹூண்டாய் வெர்னா காரையும் அவர்கள் கண்டறிந்தனர்.

இந்த கார் முகமது ரஃபீக் என்பவருக்கு சொந்தமானது. அவரும் கத்துவா பகுதியை சேர்ந்தவர்தான். ஆனால் முகமது ரஃபீக்கின் ஹூண்டாய் வெர்னா காருக்கு, ஆர்டிஓ அலுவலக விதிமுறைகளின்படி, உண்மையான பதிவு எண்தான் பெறப்பட்டிருந்தது.

எனவே புகார்தாரரான ஜடின்தர் ஷர்மாவின் காரில் போலியான நம்பர் பிளேட் பொருத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதன்பின் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், ஜடின்தர் ஷர்மாவிற்கு காரை விற்பனை செய்த நபரை கைது செய்தனர்.

அத்துடன் இரண்டு கார்களும் போலீசாரால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது. போலியான நம்பர் பிளேட்டை பயன்படுத்தியதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தை வெளிக்கொணரும் பணிகளில் போலீசார் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஜடின்தர் ஷர்மாவிற்கு காரை விற்பனை செய்த நபர் சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்பதற்காக, ஆர்டிஓ அலுவலகம் மூலமாக பதிவு செய்யாமல் விட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு பதிலாக தோற்றத்தில் ஒரே மாதிரியாக உள்ள மற்றொரு காரை பார்த்து, அதன் பதிவு எண்ணை புதிய காருக்கும் அவர் கொண்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

போலி நம்பர் பிளேட்களை பயன்படுத்தியது தொடர்பான சம்பவங்கள் கடந்த காலங்களில் பல்வேறு முறை நடைபெற்றுள்ளன. ஆனால் ஒரே மாடல், ஒரே கலர் ஆகியவற்றை கொண்ட இரண்டு வாகனங்களில் ஒரே நம்பர் பிளேட் பயன்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இது தொடர்பாக Daily Excelsior வெளியிட்டுள்ள செய்தியை நீங்கள் கீழே காணலாம்.
பொதுவாக ஒரு வாகனம் விற்பனை செய்யப்படும்போது, டீலர்ஷிப் தரப்பில் இருந்து புதிய பதிவு எண் கேட்டு உள்ளூர் ஆர்டிஓ அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்படும். இதன்பின் ஆர்டிஓ அனைத்து தகவல்களையும் பரிசோதித்து பார்த்து விட்டு புதிய பதிவு எண் வழங்குவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் (High-Security Registration Plate - HSRP) திட்டம் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவத்தை போன்ற முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க வேண்டுமென்றால், வாகனம் வாங்கும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பதும் அவசியம். சேஸிஸ் நம்பர் மற்றும் விஐஎன் நம்பர் போன்ற வாகனத்தின் தகவல்கள், ஆர்சி (Registration Certificate) போன்ற ஆவணங்களுடன் பொருந்தி செல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications