பைக் ஆக்ஸலரேட்டர் ஏன் சாப்பிட்ற கை பக்கம் இருக்குனு தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் மறஞ்சிருக்கா!
இந்தியாவில் கிட்டத்தட்ட டூவீலர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை வந்து விட்டது. கிராமம், நகரம் என எங்கு வசிப்பவர்களாக இருந்தாலும், ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் ஒரு டூவீலராவது இருக்கிறது. ஒரு சில வீடுகளில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் ஒரு டூவீலர் உள்ளது.
இன்றைய அவசரமான உலகில் டூவீலர்கள் இல்லாவிட்டால் சற்று சிரமம்தான். எனவேதான் கிட்டத்தட்ட அனைவரும் டூவீலர் வைத்திருக்கின்றனர். இந்த டூவீலர்களில் எல்லாம் பொதுவான ஒரு விஷயம் இருக்கும். டூவீலர் வேகமாக செல்வதற்காக நாம் கைகள் மூலமாக முறுக்கும் ஆக்ஸலரேட்டர் வலது பக்கம் (Right Side) இருக்கும் என்பதுதான் அந்த பொதுவான விஷயம். ஸ்கூட்டர், பைக் என எந்த வகையான டூவீலர் என்றாலும், எந்த நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தாலும், ஆக்ஸலரேட்டர் வலது பக்கம்தான் இருக்கும்.

பொதுவாக அனைத்து டூவீலர்களிலும் ஆக்ஸலரேட்டர் ஏன் வலது பக்கம் மட்டும் வழங்கப்படுகிறது? இடது பக்கத்தில் (Left Side) ஏன் வழங்கப்படுவதில்லை? என என்றாவது யோசித்துள்ளீர்களா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை தேடி கொண்டிருந்தால், உங்களுக்குதான் இந்த செய்தி. டூவீலர்களில் ஆக்ஸலரேட்டர் வலது பக்கம் வழங்கப்படுவதற்கு 2 முக்கியமான காரணங்கள் உள்ளன. உலகின் பெரும்பாலான மக்கள் வலது கை பழக்கம் உடையவர்கள் என்பதுதான் இதற்கு முதல் காரணம்.
உங்களுக்கு தெரிந்த 100 பேரை மனதில் நினைத்து கொள்ளுங்கள். அவர்களில் 90க்கும் மேற்பட்டவர்கள் வலது கை பழக்கம் உடையவர்களாகதான் இருப்பார்கள். இடது கை பழக்கம் உடையவர்களை காண்பது மிகவும் அரிது. எனவே அவர்களின் வசதிக்காக ஆக்ஸலரேட்டர் வலது பக்கத்தில் வழங்கப்படுகிறது. உலகில் எந்தவொரு பொருள் தயாரிக்கப்பட்டாலும், பெரும்பான்மையான மக்களால் எளிமையாக பயன்படுத்தும் வகையில் இருக்கும்படி பார்த்து கொள்வார்கள். டூவீலர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
இந்த உலகில் வலது கை பழக்கம் உடைய மக்கள்தான் பெரும்பான்மையாக இருக்க கூடியவர்கள் ஆவர். அவர்களுக்கு இடது கையை விட வலது கையில்தான் நல்ல கண்ட்ரோலும் மற்றும் வலிமையும் இருக்கும். எனவேதான் அனைத்து டூவீலர் உற்பத்தி நிறுவனங்களும் ஆக்ஸலரேட்டரை வலது பக்கம் வழங்குகின்றன. உதாரணத்திற்கு டூவீலர்களில் ஆக்ஸலரேட்டர் வலது பக்கத்தில் இருப்பதால், பெரும்பான்மை மக்களால், இடது கை மூலம் மற்ற வாகன ஓட்டிகளுக்கு எளிமையாக ஹேண்ட் சிக்னல் கொடுக்க முடியும்.
வலது கை பழக்கம் உடையவர்களால், வலது கையில்தான் மிகவும் முக்கியமான வேலைகளை செய்ய முடியும். இடது கையில் ஆக்ஸலரேட்டரை முறுக்கி கொண்டு, வலது கையில் அவர்களால் சிக்னல் கொடுக்க முடியாது. ஹேண்ட் சிக்னல் கொடுப்பது என்பது ஒரு உதாரணம் மட்டுமே. பெரும்பான்மையான மக்களுக்கு அனைத்து விதங்களிலும் சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துதான், ஆக்ஸலரேட்டர் வலது பக்கம் வழங்கப்படுகிறது. அனைத்து டூவீலர்களிலும் ஆக்ஸலரேட்டர் வலது பக்கம் இருப்பதற்கு மற்றொரு காரணம் பாதுகாப்பு. ஆம், இந்த வகையான வடிவமைப்பிற்கு பின்னால் நம் அனைவரின் பாதுகாப்பும் அடங்கியுள்ளது.
நாம் டூவீலருக்கு சென்டர் ஸ்டாண்டு போட வேண்டுமென்றால், இடது பக்க ஹேண்டில் பாரில் ஒரு கையையும், டூவீலரின் பின் பக்கத்தில் ஒரு கையையும் வைத்து கொண்டு பின்னால் இழுப்போம். அப்படி இருக்கும்போது, இடது பக்கத்தில் ஆக்ஸலரேட்டரை வழங்கினால், நாம் தவறுதலாக முறுக்கி விடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒருவேளை இன்ஜின் 'ஆன்' ஆகி இருந்தால், சென்டர் ஸ்டாண்டு போடும் சமயத்தில், நாம் நம்மையே அறியாமல், ஆக்ஸலரேட்டரை முறுக்கி விட கூடும்.
தவறுதலாக அப்படி நடக்கும்பட்சத்தில், சாலை விபத்துக்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. டூவீலர் திடீரென முன்னோக்கி சென்று, மற்றவர்கள் மீதோ, மற்ற வாகனங்கள் மீதோ மோதலாம். இந்த காரணத்தையும் மனதில் வைத்துதான், டூவீலர்களில் இடது பக்கத்திற்கு பதிலாக வலது பக்கத்தில் ஆக்ஸலரேட்டரை வழங்குகின்றனர். அனைத்து டூவீலர்களிலும் ஆக்ஸலரேட்டர் ஏன் வலது பக்கத்தில் வழங்கப்படுகிறது? என்ற உங்களின் சந்தேகம் தற்போது நிவர்த்தியாகி இருக்கும் என நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications








