போலீசை பாத்ததும் ஹெல்மெட்டை போட்ட இளைஞர்! ஆனா இப்படி ஆகும்னு நெனச்சிருக்க மாட்டாரு! சினிமாவை விஞ்சிய ட்விஸ்ட்!
இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பது கிடையாது. குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் பலர் இரு சக்கர வாகனங்களை இயக்கி வருகின்றனர். அவர்களிடம் ஹெல்மெட் இல்லாமல் எல்லாம் இருக்காது. அணிவதற்கு கஷ்டப்பட்டு கொண்டு, டூவீலரிலேயே வைத்திருப்பார்கள். காவல் துறையினர் நிற்பதை பார்த்தால் மட்டும், உடனே ஹெல்மெட்டை எடுத்து தலையில் அணிந்து கொள்வார்கள். சாலைகளில் இது போன்ற விஷயங்களை நாம் சர்வ சாதாரணமாக காண முடியும். சமீபத்தில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர், சாலையில் காவல் துறையினரை கண்டதும் இந்த யுக்தியை பின்பற்றினார்.
ஆனால் அடுத்து என்ன நடந்தது? என்பதுதான் ஹைலைட்டே! சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

அவரது டூவீலரின் ஹேண்டில்பாரில் ஹெல்மெட் மாட்டப்பட்டு இருக்கிறது. ஆனால் அதை தலையில் அணிய சிரமப்பட்டு கொண்டு, அவர் பயணம் செய்கிறார். அப்போது சாலையின் ஓரத்தில் காவல் துறையின் கார் ஒன்று நிற்பதையும், அதன் அருகே காவல் துறை அதிகாரி ஒருவர் நிற்பதையும் அவர் பார்க்கிறார்.
உடனே டூவீலரை நிறுத்தி, ஹெல்மெட்டை எடுத்து தலையில் அணிந்து கொண்டு அவர் தனது பயணத்தை தொடர்கிறார். அவர் சற்று தொலைவில் இருந்து பார்த்த காவல் துறை அதிகாரியை கடந்தவுடன், அவர் அதிர்ச்சியில் உறைந்திருப்பார் என நாம் நம்பலாம். ஏனெனில் அவர் பார்த்தது உண்மையான காவல் துறை அதிகாரி கிடையாது.

ஆம், அது போலியான ஒரு விஷயம். காவல் துறை காரும் கூட போலியானதுதான். இன்னும் தெளிவாக புரியும்படி சொல்வதென்றால், அட்டையில் அப்படி செய்து வைத்துள்ளனர். வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்வதற்காக இந்த யுக்தி கையாளப்பட்டுள்ளது. இதன் மூலம் காவல் துறையினர் இருக்கிறார்கள் என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவார்கள் என்பது அரசு அதிகாரிகளின் நம்பிக்கை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உண்மையில் இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு நடவடிக்கைதான். சாலைகளில் கண்காணிப்பிற்கு காவல் துறையினர் இல்லை என்பதால்தான், வாகன ஓட்டிகள் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்றனர். காவல் துறையினர் இருக்கும்பட்சத்தில், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆனால் அனைத்து இடங்களிலும், அனைத்து நேரங்களிலும், காவல் துறையினரை நிறுத்தி கொண்டிருக்க முடியாது. எனவே இது போன்ற யுக்திகளை கையாளும்பட்சத்தில், வாகன ஓட்டிகளை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்கலாம். ஆனால் இந்த யுக்தி நீண்ட கால அடிப்படையில் பயன்தராது. அதாவது இவை வெறும் அட்டை என்பது தெரியவந்து விட்டால், வாகன ஓட்டிகளை கையில் பிடிக்க முடியாது.
போக்குவரத்து விதிமுறைகளை மீற தொடங்கி விடுவார்கள். எனவே சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பது பலன் தரும் என நாங்கள் கருதுகிறோம். சிசிடிவி கேமராக்கள் மூலம், விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கலாம். இந்த நடைமுறை நாட்டின் பல பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறதுதான்.
இருந்தாலும் இன்னும் பல்வேறு பகுதிகளுக்கும் இதை விரிவாக்கம் செய்ய வேண்டும். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த வீடியோவில் நாம் காணும் இரு சக்கர வாகன ஓட்டி, ஹெல்மெட் இருந்தும் கூட அதை அணியவில்லை. காவல் துறையினர் போன்ற அட்டையை பார்த்ததும், அபராதத்தை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவர் ஹெல்மெட்டை அணிகிறார்.
இங்கே நாங்கள் சொல்லி கொள்வது என்னவென்றால், அபராதத்தை தவிர்ப்பதை காட்டிலும், சாலை விபத்தில் படுகாயங்கள் மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்ப்பது மிகவும் முக்கியமானது. அதற்குதான் நாம் அனைவரும் முன்னுரிமை வழங்க வேண்டும். எனவே போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றுங்கள். இது அபராதங்களில் இருந்தும், சாலை விபத்துக்களில் படுகாயங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படுவதில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.


Click it and Unblock the Notifications








