காசை ஏமாத்த சாமி மேல பழி போட்ட இன்சூரன்ஸ் கம்பெனி! நீதிபதிகள் போட்ட அதிரடி உத்தரவால் கதிகலங்கி போய்ட்டாங்க!
இன்சூரன்ஸ் (Insurance) நிறுவனங்களிடம் 'க்ளைம்' (Claim) செய்து பணத்தை பெறுவது என்பதெல்லாம் அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி க்ளைமை தட்டி கழிக்க முயல்வதாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதை நிரூபிக்கும் வகையில், இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்று, விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு (Compensation) வழங்காமல் தட்டி கழித்து வந்தது. ஆனால் நீதிமன்றம் தலையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு குட்டு வைத்துள்ளது. இந்த விஷயத்தில் என்ன நடந்தது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி சாலை விபத்து ஒன்று நடைபெற்றது. இதில், மகரண்ட் பட்வர்தன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் புனேவில் இருந்து மும்பை நோக்கி, காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் ஒன்றாக வேலை செய்த 2 பேரும் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக காரின் பின் பக்க டயர் வெடித்தது. இந்த பயங்கர விபத்தில் மகரண்ட் பட்வர்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கை, புனேவில் உள்ள வாகன விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயம் விசாரித்தது. அப்போது மகரண்ட் பட்வர்தனின் குடும்பத்திற்கு 1.25 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அத்துடன் 9 சதவீத வட்டியை வழங்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் இதனை ஏற்கவில்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டது, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் (New India Assurance) இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகும். இழப்பீடு வழங்க முடியாது என அந்நிறுவனம் தெரிவித்ததுடன், வித்தியாசமான விளக்கம் ஒன்றையும் அளித்தது.
டயர் வெடித்தது என்பது கடவுளின் செயல் என்பதுதான் இந்த விளக்கம். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இந்த வாதத்தை மும்பை உயர் நீதிமன்றம் (Bombay High Court) தற்போது நிராகரித்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மும்பை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் அதிரடியாக தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இந்த உத்தரவு மன நிம்மதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இங்கே நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயமும் உள்ளது. இந்தியாவில் டயர் வெடிப்பு சம்பவங்களால் ஏராளமான சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன. முடிந்தவரை நாம் எச்சரிக்கையாக இருந்தால், இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும்.
டயர்களை அவ்வப்போது பரிசோதனை செய்வது, மிதமான வேகத்தில் வாகனங்களை ஓட்டுவது ஆகிய எளிமையான செயல்களின் மூலமாகவே முடிந்தவரை டயர் வெடிக்கும் நிகழ்வுகளை நம்மால் தவிர்க்க முடியும். எனவே காரில் ஸ்டியரிங் வீலில் கை வைப்பதற்கு முன்னதாக, இந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்து செயல்படுவது உங்களுக்கு நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications








