ஊபரின் பேருந்து சேவை இந்தியாவில் தொடக்கம்.. பொது போக்குவரத்து துறையின் அடி மடியிலேயே கை வைத்த ஊபர்!
முன்னணி கால் டாக்சி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஊபர் (Uber) இந்தியாவின் குறிப்பிட்ட ஓர் மாநிலத்தில் பேருந்துகளை இயக்க அனுமதி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எங்கு? என்ன மாதிரியான பேருந்தை அது இயக்க இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஊபர் தலைநகர் டெல்லியிலேயே தன்னுடைய வாடகை பேருந்து சேவையை இயக்க இருக்கின்றது. இதற்கான அனுமதியை சமீபத்திலேயே டெல்லி போக்குவரத்து துறையிடம் இருந்து ஊபர் பெற்றிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, நாட்டின் தலைநகரத்தில் பேருந்தை இயக்குவதற்கான பணியில் ஊபர் தீவிரமாகி உள்ளது. உலகத்திலேயே ஊபர் இரண்டு நாடுகளில் மட்டுமே பேருந்து சேவையை இயக்கி வருகின்றது.

அதில் ஒன்று எகிப்து ஆகும். இந்தியாவே இரண்டாவது நாடாகும். ஊபர் ஷட்டில் எனும் பெயரிலேயே இந்த சேவையை எகிப்தில் இயக்கி வருகின்றது. இந்தியாவிலும் அதே பெயரைக் கொண்டே பேருந்து சேவையைத் தொடங்கி இருக்கின்றது. ஊபர் நிறுவனம், ஓலா மற்றும் ரேபிடோ ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் விதமாக வாடகை வாகன சேவையில் ஈடுபட்டு வருகின்றது.
கார், ஆட்டோ ரிக்ஷா மற்றும் பைக் ஆகிய வாகனங்களையே தன்னுடைய சேவையில் அது ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது. இதுதவிர, உள்ளூர் பார்சல் சேவையிலும் அது ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே புதிய சேவையாக செல்போன் செயலி சார்ந்த பேருந்து வாடகை சேவையையும் ஊபர் தொடங்கி இருக்கின்றது.
ஊபர் பிரீமியம் பேருந்துகளையே தன்னுடையே சேவையில் ஈடுபடுத்த இருக்கின்றது. மேல் நடுத்தர வர்க்கத்தினரைக் கவரும் நோக்கிலேயே இந்த சேவையை ஊபர் இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்கப் போவதாக ஊபர் தெரிவித்து உள்ளது. கூடுதல் அல்லது அதிக கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அது தெரிவித்து இருக்கின்றது.
ஊபர் பேருந்து சேவையை ஏற்கனவே மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் இயக்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், தலைநகர் டெல்லியில் பேருந்து வாடகை சேவை சோதனையோட்டமாக கடந்த ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையிலேயே தற்போது அந்த சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு இருக்கின்றது.
19 முதல் 50 பேர் வரை அமர்ந்து பயணிக்கும் பேருந்துகளையே தன்னுடைய சேவையில் ஊபர் வழங்க இருக்கின்றது. அனைத்தும் உள்ளூர் பார்ட்னர்கள் வாயிலாகவே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஊபர் கால் டாக்சியைப் போலவே இதுவும் மலிவான கட்டணத்தில் இயக்கப்படும் என நம்பப்படுகின்றது.
மேலும், கொல்கத்தா, டெல்லியைத் தொடர்ந்து இந்தியாவின் மற்ற நகரங்களிலும் ஊபர் தன்னுடைய வாடகை பேருந்து சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அடுத்ததாக எந்த நகரத்தில் இந்த சேவையைத் தொடங்கும் என்கிற விபரங்கள் வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய விபரங்களை ஊபர் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊபரின் போட்டி நிறுவனமான ஓலா, கால் டாக்சி சேவையை மட்டுமின்றி இந்தியாவில் மின் வாகன உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், ஊபர் நிறுவனம் தன்னுடைய கவனத்தை வாடகை வாகன சேவையில் மட்டுமே கொண்டிருக்கின்றது. எனவே, பேருந்தைத் தொடர்ந்து அது அடுத்து என்ன மாதிரியான சேவையைத் தொடங்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் புகழ்பெற்ற வாடகை வாகன சேவை நிறுவனமான ஊபர், பேருந்து சேவையைத் தொடங்கி இருப்பது ஊபர் பயன்பாட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக, இவர்களின் நுழைவின் காரணமாக பேருந்தை வாடகை எடுப்பது தற்போது மேலும் பல மடங்கு சுலபமாகி உள்ளது. அதுதவிர, கட்டணமும் ஓர் சமநிலைக்கு வரும் சூழலும் உருவாகி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








