கேப் புக்கிங் செய்த பயணிகளுக்கு சர்ப்ரைஸ்... டிரைவராக வந்தவர் இவ்ளோ பெரிய ஆளா? நம்ப முடியாத சம்பவம்!
மிகப்பெரிய பொறுப்பில் உள்ள நபர் ஒருவர், சாதாரண டிரைவரை போல் உபேர் காரை ஓட்டியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்றைய சூழலில் ஓலா (Ola) மற்றும் உபேர் (Uber) போன்ற கேப்களை (Cab) நாம் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். செல்போன் செயலில் 'புக்' செய்தால், நாம் இருக்கும் இடத்திற்கே 'கேப்' வந்து விடுகிறது. பொதுவாக ஓலா, உபேர் போன்ற கேப்களை நம்மை போன்ற சாதாரணமான டிரைவர்கள்தான் ஓட்டுகின்றனர்.

கேப்களின் டிரைவர் இருக்கையில், மிகவும் பிரபலமான மனிதர்களை காண்பது அரிது. அப்படிப்பட்ட அரிதான ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த மனிதரை கண்டு பயணிகள் ஆச்சரியமடைந்துள்ளனர். இவ்வளவு பெரிய நபர், கேப் ஓட்டுகிறாரா? என்பதுதான் அந்த ஆச்சரியத்திற்கு காரணம்.

உபேர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான (Uber India's CEO), பிரப்ஜித் சிங்தான் (Prabhjeet Singh) சாதாரணமாக 'கேப்' ஓட்டிய பிரபல மனிதர். உபேர் கேப்பை ஒரு நாள் முழுவதும் ஓட்ட வேண்டும் என பிரப்ஜித் சிங் சமீபத்தில் முடிவு செய்தார். உபேர் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் பிரச்னைகளை புரிந்து கொள்வதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார்.

தரைமட்ட அளவில், களத்தில் இறங்கி பணியாற்றினால்தான் இதனை புரிந்து கொள்ள முடியும் என்பதால், பிரப்ஜித் சிங்கால் இந்த அதிரடியான முடிவு எடுக்கப்பட்டது. பொதுவாக பெரிய நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் இவ்வாறான முடிவை எடுக்க மாட்டார்கள். ஆனால் வாடிக்கையாளர்களுக்காக பிரப்ஜித் சிங் இந்த வித்தியாசமான முடிவை எடுத்தார்.

டெல்லி மற்றும் குர்கான் உள்ளிட்ட பகுதிகளில் அவர் உபேர் டிரைவராக பணியாற்றினார். உபேர் இந்தியா நிறுவனத்தின் தினசரி 'கேப்' என பதிவு செய்யப்பட்ட மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) காரை அவர் ஓட்டினார். உபேர் இந்தியா நிறுவனத்தின் மற்ற டிரைவர்கள் எப்படி செயல்படுவார்களோ, அதே போன்ற பணி நடைமுறைகளை பிரப்ஜித் சிங்கும் பின்பற்றினார்.

வாடிக்கையாளர்கள் செய்த புக்கிங்கை ஏற்றுக்கொண்டு, நேராக அவர்களின் இருப்பிடத்திற்கு பிரப்ஜித் சிங் சென்று விட்டார். அவர்களின் இருப்பிடத்தை சென்றடைந்த பிறகு, தான் உபேர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என பிரப்ஜித் சிங் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவரின் உண்மையான அடையாளம் தெரிந்தவுடன் பயணிகள் ஆச்சரியமடைந்து விட்டனர்.

இதுதொடர்பான அனுபவத்தை ஒரு சில பயணிகள் சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். மேலும் ஒரு சிலர் பிரப்ஜித் சிங் கூறுவது உண்மையா? என கூகுள் உதவியுடன் 'க்ராஸ்-செக்' செய்தனர். அத்துடன் பிரப்ஜித் சிங்குடன் ஒரு சிலர் செல்பியும் எடுத்து கொண்டனர். இந்த அதிரடி நடவடிக்கைக்காக, பிரப்ஜித் சிங்கிற்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அடிமட்ட அளவில் வாடிக்கையாளர்களின் பிரச்னைகளை புரிந்து கொள்வதற்கு முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும்? என்பதை பிரப்ஜித் சிங் எடுத்துக்காட்டியுள்ளதாக சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வு அனைவருக்கும் முன்மாதிரி என்பது அவர்களின் கருத்து.

தனது பதவியை பொருட்படுத்தாமல் பிரப்ஜித் சிங் களத்தில் இறங்கி வேலை செய்திருப்பது உண்மையிலேயே ஆச்சரியமான மற்றும் அரிதான ஒரு நிகழ்வுதான். பிரப்ஜித் சிங்கிற்கு மட்டுமல்லாது, இந்த நிகழ்வின் மூலம் உபேர் இந்தியா நிறுவனத்திற்கு சேர்த்தே நற்பெயர் கிடைத்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உபேர் நிறுவனம் தற்போது தனது சேவையை வழங்கி வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் உபேர் கேப்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வாடிக்கையாளர்களின் பிரச்னைகளை சரி செய்வதற்கு, கேப் டிரைவராக பணியாற்றிய அனுபவம் பிரப்ஜித் சிங்கிற்கு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








