சென்னையிலும் இதை கொண்டுவாங்கப்பா... பெண்கள் யாரை நம்பியும் இருக்க வேண்டியதில்லை!!
உபெர் (Uber), இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியதில்லை. கார் டாக்ஸி மட்டுமின்றி, ஆட்டோ டாக்ஸி மற்றும் பைக் டாக்ஸி சேவைகளையும் நாடு முழுவதும் வழங்குகிறது. இந்த நிலையில், 'உபெர் மோட்டோ வுமன்' (Uber Moto Women) என்கிற பெயரில் புதிய சேவையை உபெர் துவங்கியுள்ளது. பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய சேவை தற்போதைக்கு பெங்களூரில் துவங்கப்பட்டுள்ளது. இந்த புதிய உபெர் சேவை குறித்த விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
மொபைல் போன் மற்றும் இணைய வளர்ச்சியின் மூலமாக வணிகத்தில் மிக பெரிய முன்னேற்றம் கண்ட நிறுவனங்களுள் உபெர் என்கிற மொபைலிட்டி நிறுவனமும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவில் டாக்ஸி சேவைக்கு ஆதரவு மற்றும் தேவை இருக்கும் அதேநேரத்தில், குறிப்பிட்ட சில மக்கள் டாக்ஸி சேவையை எதிர்ப்பதையும் பார்க்க முடிகிறது.

குறிப்பாக, பைக் டாக்ஸிக்கு ஆதரவை காட்டிலும் எதிர்ப்புகள் தான் அதிகமாக உள்ளன. இதன் காரணமாகவே இந்தியாவில் சில மாநிலங்களில் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், பைக் டாக்ஸியை பயன்படுத்தி குற்ற செயல்கள் நடப்பதாகவும், பைக் டாக்ஸியை வழங்கும் கேப்டன்கள் துன்புறுத்தப்பட்டு வழிபறி உள்ளிட்டவற்றிற்கு ஆளாகுவதாகவும் கடந்த சில வருடங்களில் பல புகார்கள் எழுந்துள்ளன.
இவை எல்லாவற்றையும் விட பைக் டாக்ஸியை பலர் எதிர்ப்பதற்கு முக்கிய காரணம், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் ஆகும். இரவு நேரங்களில் பைக் டாக்ஸி சேவையை பயன்படுத்தும் பெண் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என கூறி சில மாநில அரசாங்கங்கள் பைக் டாக்ஸிக்கு தடை விதித்துள்ளன. பைக் டாக்ஸி சேவையை வழங்கும் சில ரைடர்களே பெண் பயணிகளிடம் தவறாக நடந்துக் கொண்டுள்ள சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.

இந்த குற்றச்சாட்டுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் உபெர் நிறுவனம் அதன் ஒருபகுதியாக, பெண்களால் வழங்கப்படும் பைக் டாக்ஸி சேவையை உபெர் மோட்டோ வுமன் என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. உபெர் பைக் டாக்ஸியை புக் செய்யும் பெண் பயணிகளுடன் பெண் ரைடர்களை இணைப்பதுதான் இந்த புதிய சேவையின் முக்கிய சாராம்சம் ஆகும்.
பெண் ரைடர்கள் மற்றும் பயணிகளிடம் இருந்து கிடைத்த கருத்துகளுக்கு ஏற்ப முழுக்க முழுக்க பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தையும், வருமானத்தையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய உபெர் மோட்டோ வுமன் சேவை தற்போதைக்கு பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்ற பின் சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுப்படுத்தப்படும்.

உபெர் மோட்டோ வுமன் சேவையில் அட்வான்ஸான தொழிற்நுட்ப வசதிகளை உபெர் அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, பெண் பயணிகள் தங்களது பயணம் குறித்த விபரங்களை நம்பகமான 5 பேர் உடன் பகிர்ந்துக் கொள்ள முடியும். அந்த நம்பகமான நபர்கள் பெண் பயணியின் பயணத்தை ரியல்-டைமில் டிராக் செய்யலாம். அதேபோல், பெண் பயணிகளின் மொபைல் எண் மற்றும் இறங்கும் இடம் குறித்த விபரங்கள் பெண் ரைடர் உள்பட யாராலும் பார்க்க முடியாத வகையில் மொபைல் செயலியில் சேமிக்கப்படும்.
மேலும், உபெர் மோட்டோ வுமன் சேவையில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பயணங்களையும் உபெர் நிறுவனம் உன்னிப்பாக கவனிக்கும். இதனால், போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் வாகனம் நீண்ட நேரத்திற்கு நின்றாலோ அல்லது பாதி வழியிலேயே பெண் பயணி இறக்கிவிடப்பட்டாலோ அல்லது வரைப்படத்தில் காட்டப்படும் வழித்தடத்திற்கு பதிலாக வேறு வழியில் பெண் பயணி அழைத்து செல்லப்பட்டாலோ பயணியை எச்சரிக்க தொடர்ந்து பயணத்தை கண்காணிக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பைக் டாக்ஸிக்கு சமீபத்தில்தான் நம் தமிழ்நாடு அரசு பச்சை கொடி காட்டியது. பைக் டாக்ஸி மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் கொண்டுவர உபெர் மோட்டோ வுமன் சேவை பயனுள்ளதாக இருக்கும். இந்த புதிய சேவையின் மூலம் மேற்கூறப்பட்ட வசதிகளை பெறும் அதேநேரம், வழக்கம்போல் பெண் ரைடர்கள் மற்றும் பயணிகள் எப்போது வேண்டுமென்றாலும் உபெரின் 24x7 பாதுகாப்பு உதவியை நாடலாம்.


Click it and Unblock the Notifications
