"சார் டிராப் எங்க" எனக் கேட்டு பின்னர் கேன்சல் செய்வது நடக்காது... உபேர் கொண்டுவந்துள்ள செம அப்டேட்...
கார்பரேட் கால் டாக்ஸி நிறுவனமான உபேர் இனி டிரைவர்கள் டிராப் செய்ய வேண்டிய இடத்தை தெரிந்து கொண்டு பின்னர் புக்கிங்கை கேன்சல் செய்வதைத் தடுக்க தற்போது புதிய அப்டேட் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இது குறித்த விரிவாகத் தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் கார்பரேட் கால் டாக்ஸியில் கொடி கட்டி பறக்கும் நிறுவனம் உபேர் மற்றும் ஓலா தான். இந்த இரு நிறுவனங்களும், பயணிகளுக்கு செல்போன் மூலமே கால்டாக்ஸிகளை புக் செய்யும் வாய்ப்பை வழங்கி வருகின்றன. பயணிகள் எங்கிருந்து கால்டாக்ஸியை புக் செய்கிறார்களோ அவர்கள் அருகில் ரைடிற்காக காத்திருக்கும் கால்டாக்ஸிக்கு இந்த ரைடு செல்கிறது.

அந்த கால்டாக்ஸி டிரைவர் இந்த ரைடை ஏற்றக்கொள்ளும் நிலையில் பிக்கப் லோக்கேஷன் காண்பிக்கப்படும். அதன் பின்னர் டிரைவர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற பயணிகளை பிக்கப் செய்ததும், அவர் செல்ல வேண்டிய இடம் காட்டும். அந்த இடத்திற்குச் சென்றதும் குறிப்பிட்ட தொகை காட்டப்படும். அதைப் பயணிகள் செலுத்தவேண்டும்.

இப்படியாகச் செயல்படும் இந்த சிஸ்டத்தில் கார்பரேட் நிறுவனங்களான ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள் இந்தியாவில் பல நகரங்களில் தங்கள் சேவையைக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நீங்கள் தொடர்ந்து இது போன்று கார்பரேட் கால் டாக்ஸி நிறுவனங்களில் புக்கிங் செய்து சென்றிருந்தீர்கள் என்றால் அதில் உள்ள நடைமுறை சிக்கல் உங்களுக்குத் தெரியும்.

நீங்கள் கால் டாக்ஸியை புக் செய்ததும். குறிப்பிட்ட டிரைவர் அந்த ட்ரிப்பை ஏற்றுக்கொள்வார். பின்னர் அவர் உங்களை போன் மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை கேட்டறிவார். நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை அறிந்ததும் அவர் அந்த இடம் அவருக்குச் சரி பட்டு வந்தால் வருவார். இல்லை என்றால் உங்கள் ட்ரிப்பை கேன்சல் செய்து விடுவார். அல்லது உங்களிடம் கேன்சல் செய்யச் சொல்லிக் கேட்பார்.

இது செல்லும் இடத்திற்கு மட்டுமல்ல பிக்கப் லோக்கேஷன், எக்ஸ்ட்ரா பணம், பணம் கட்டும் முறை ஆன்லைனிலா அல்லது பணமாகக் கொடுக்கிறோமா உள்ளிட்ட விபரங்களை வைத்துக்கூட புக் செய்யப்பட்ட ரைடுகளை கேன்சல் செய்யும் நிகழ்வு அதிகம் நடக்கிறது.

இதனால் நம் ஒரு இடத்திற்குச் செல்ல கேப் புக் செய்தால் நமக்குத் தலைவலி ஏற்படும் அளவிற்கு மாற்றி மாற்றி கால் செய்து விபரங்களைக் கேட்டு கேன்சல் செய்வதால் புக் செய்பவர்கள் டென்சன் ஆகிறார்கள். இதைத் தவிர்ப்பதற்காக உபேர் நிறுவனம் கடந்த மே மாதம் மாதம் இந்தியாவில் 6 முக்கிய பெரு நகரங்களில் ஒரு அப்டேட் ஒன்றைக் கொண்டு வந்தது.

அதன்படி ரைடு புக்கிங்கிற்கான ரெக்வஸ்ட் வரும் போதே பயணிகள் செல்ல வேண்டிய இடம் குறித்து டிரைவருக்கு தகவல் சென்று விடும். அதைப் பார்த்தும் டிரைவர் அந்த ரைடை எடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்து விடுவார். இதனால் புக்கிங் செய்யப்பட்ட பின்னர் கேன்சலாவது குறையும் என நினைத்தனர்.

இந்த சோதனை முயற்சி நல்ல முடிவுகளைக் கொண்டு வந்த நிலையில் தற்போது உபேர் நிறுவனம் இந்த வசதிகளை அனைத்து நகரங்களுக்கும் விஸ்தரித்துள்ளது. இதன் மூலம் இனி கால்டாக்ஸியை புக் செய்யும் போது ஏற்படும் கால்டாக்ஸி டிரைவர் போன் செய்து "சார் டிராப் எங்க" எனக் கேட்டுவிட்டு பின்னர் கேன்சல் செய்வது குறையும்.

ஆனால் கேன்சல் செய்வது முற்றிலுமாக நிற்காது என அர்த்தம் கிடையாது. பல்வேறு காரணங்களுக்காக டிரைவர் கேன்சல் செய்கிறார்கள். அதில் ஒரு காரணம் தான் டிராப் செய்ய வேண்டிய இடம் தெரியாதது. அதற்கு மட்டுமே தற்போது தீர்வு கிடைத்துள்ளது. அடுத்தாக இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை எந்த வகையில் வாடிக்கையாளர்கள் பணம் செல்லுவார்கள் என்பதும் முக்கியமான அம்சமாகிறது.

பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் முறையிலேயே பணம் செலுத்த விரும்புகின்றனர். ஆனால் டிரைவர்கள் நேரடியாகப் பணம் வாங்கவே விரும்புகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் ஆன்லைன் மூலம் செலுத்தப்படும் பணம் டிரைவருக்கு காலதாமதமாகக் கிடைப்பது தான். இதையும் கால்டாக்ஸி நிறுவனங்கள் சரி படுத்தினால் அதில் உள்ள பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என மக்கள் கருதுகின்றனர். இந்த மாற்றத்தையும் கால் டாக்ஸி நிறுவனங்கள் செய்யுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








