மின்சார வாகனங்களின் விலை நம்ப முடியாத அளவிற்கு குறைய போகுதா!.. 2025 பட்ஜெட்டில் வெளியான சூப்பரான தகவல்!
2025-26 மத்திய பட்ஜெட்டில் லித்தியம் பேட்டரி (Lithium Batteries) மற்றும் அது சார்ந்த துறைகளை ஊக்குவிக்கும் விதமாக வரி விலக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்து, உள்நாட்டில் இவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கின்றது. அரசின் இந்த நடவடிக்கையால் மின்சார வாகனங்கள் (Electric Vehicle) மற்றும் பிற மின்சாதன பொருட்களின் விலை சற்றே குறைவதற்கான சூழல் உருவாகி இருக்கின்றது.
மேலும், மத்திய பட்ஜெட்டில் கோபால்ட், லித்தியம்-அயன் பேட்டரி ஸ்கிராப், லெட் மற்றும் ஜிங்க் போன்ற 12 முக்கிய தாதுக்களுக்கான அடிப்படை கஸ்டம்ஸ் டூட்டி (BCD)-ம் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்திருக்கின்றது. இந்த பொருட்கள் அனைத்தும் மின்சார வாகனம் மற்றும் மின்சாதன பொருட்களின் உற்பத்தியில் முக்கிய பங்களிக்கக் கூடியவை ஆகும்.

இத்தகைய முக்கிய பொருட்களின் வரியை ரத்து செய்து அரசு நடவடிக்கை எடுத்திருப்பதனால் இந்தியாவின் மின்சார வாகன பிரிவு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் மிக முக்கிய வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் மின்சார வாகனங்கள் உள்ளிட்டவை அதிகம் நம்பியிருக்கக் கூடிய பொருட்களின் மீதான வரிகள் நீக்கப்பட்டு இருப்பதனால் அது சார்ந்து இயங்கும் தொழில் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய அளவில் செலவு குறைய நேரிடும். இதற்கான வழியையே தற்போது அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.
குறிப்பாக, இந்த மூலோபாய நடவடிக்கையால் உள்ளூர் உற்பத்தி திறன் பலமடங்காக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை நம்பியிருப்பதை குறைக்கவும் இந்த நடவடிக்கை பெரிதும் உதவியாக இருக்கும் என யூகிக்க முடிகின்றது. இதுமட்டுமல்ல மின்சார வாகனங்கள் மற்றும் மின்சாதனப் பொருட்களின் சந்தை விலைகள் குறையவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஆமாங்க, அரசின் இந்த அறிவிப்பால் மின்சார வாகனங்களின் விலை மட்டுமல்ல ஸ்மார்ட் ஃபோன்களின் விலையும் மிகப் பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இதை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலை நாட்டில் பேட்டரி சார்ந்த பொருட்களின் உற்பத்தியை பெரிய அளவில் வலுப்படுத்தக் கூடும்.
இந்த பலனை பெறும் முயற்சியாகவே அரசு தற்போது 2025-26 மத்திய பட்ஜெட்டில் கோபால்ட், லித்தியம்-அயன் பேட்டரி ஸ்கிராப் மற்றும் லெட் போன்ற பல முக்கிய பொருட்களுக்கான அடிப்படை கஸ்டம்ஸ் டூட்டியை ரத்து செய்வதாக அறிவித்திருக்கின்றது. மின்சார வாகனங்களின் பேட்டரி உற்பத்திக்கு உதவும் 35 முக்கிய பொருட்கள் மற்றும் மொபைல் போன் பேட்டரிகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான 28 முக்கிய பொருட்களின் மீதான வரி விலக்கையே அரசு வெளியிட்டிருக்கின்றது.
இது உற்பத்தியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வரி விலக்கானது பேட்டரி உற்பத்திக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கும் நீட்டிக்கப்பட்டு இருப்பது கவனிக்கத்தகுந்தது. இதனால் நிறுவனங்கள் சந்தித்து வரும் கூடுதல் வரி சுமை பெரிய அளவில் குறைய உள்லது. அவற்றை வரி பாரம் இன்றி உற்பத்தியாளர்களால் இறக்குமதி செய்துக் கொள்ளவும் முடியும்.
இந்த முயற்சியின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம் உள்நாட்டு பேட்டரி உற்பத்தியின் வளர்ச்சியைத் தூண்டிவிடுவதே ஆகும். இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் இறக்குமதி பேட்டரிகளையே நம்பியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா, ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ரிலையன்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் பேட்டரி உற்பத்தி பிசினஸை விரிவுபடுத்த தற்போது வெளியாகி இருக்கும் திட்டம் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்ல வேறு சில நிறுவனங்களும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி செல்களைத் தயாரிக்கும் பணியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக முக்கியமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைய இருப்பதாக கூறப்படுவது மட்டும் உண்மை ஆகினால், இப்போது விற்பனையாகிக் கொண்டிருப்பதை இருமடங்கு அதிக விற்பனை வளர்ச்சியை அவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








