ஆயில் உற்பத்தி நிறுவனங்களுக்கு 800 கோடி ரூபாயை வழங்கும் மத்திய அரசு... ஏன்-னு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!
மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக நாட்டில் அமல்படுத்தப்பட்ட திட்டம் ஃபேம். இந்த திட்டத்தின் இரண்டாம் பாகமே (ஃபேம்2) தற்போது செயல்பாட்டில் உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் இதன்கீழே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ரூ. 10 ஆயிரம் கோடி இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிதி முழுக்க முழுக்க மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு மட்டுமே ஆகும். இந்த நிலையிலேயே ஆயில் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ. 800 கோடியை மத்திய அரசாங்கம் ஃபேம்2 திட்டத்தின்கீழ் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெட்ரோல் பங்க்குகளில் சார்ஜிங் மையங்களை அமைத்திடவே இந்த பெரும் நிதி வழங்கப்படுவதாக அரசு தெரிவித்து உள்ளது.

தற்போது நாட்டில் மின் வாகனங்களைச் சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் மையங்களின் தட்டுப்பாடு மிகக் கடுமையாக உயர்ந்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாக நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வரிசையில் நின்று சார்ஜ் செய்யும் சூழல் ஏற்பட்டு உள்ளது. குறிப்பிட்ட சில சார்ஜ் மையங்களில் வாகனங்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்க வேண்டி, முழுமையாக சார்ஜாகும் முன்னரே வாகனங்கள் வெளியேற்றப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
குறிப்பிட்ட அளவு சார்ஜை வாகனங்கள் எட்டிய உடன் சார்ஜ் தானாக துண்டிக்கும் வகையில் சார்ஜிங் மையங்களில் உள்ள சார்ஜிங் கருவிகளில் செட்-அப் செய்யப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் மின்சார வாகன பயன்பாட்டாளர்கள் புகார் கூறி வருவதையும் நம்மால் காண முடிகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மின்சார வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க ரூ. 800 கோடியை ஆயில் நிறுவனங்களுக்கு மத்திய அரசாங்கம் வழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிதியின் கீழ் 7,432 மின்வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கனரக தொழில்துறை அமைச்சகத்தின்கீழே இந்த பெரும் நிதி ஆயில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி நாட்டில் ஒட்டுமொத்தமாக 6,586 சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றுடன் விரைவில் புதிதாக 7,432 சார்ஜிங் மையங்கள் இணைக்கப்பட இருக்கின்றன.
ஆகையால், கணிசமான அளவு மின்வாகன சார்ஜிங் மையங்களின் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதி-வேக சார்ஜிங் மையங்களே அமைக்கப்பட இருக்கின்றன. பெட்ரோல் பங்க்குகளிலேயே இதற்கான இடம் ஒதுக்கப்பட்டு, அங்கேயே சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது மின்சார வாகனங்களை வாங்க பலர் தயாராக இருக்கின்றனர்.

ஆனால், சார்ஜிங் மையங்களின் தட்டுப்பாடு அவர்களின் இந்த எண்ணத்தை உடைத்தெறியும் வகையில் உள்ளது. இந்த நிலையை விரைவில் புதிய சார்ஜிங் மையங்களின் வருகை களைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, நான்கு சக்கர மின்சார வாகன பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை இப்போது இருப்பதைவிட பலமடங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
சிசிஎஸ்-II (Combined Charging System) ரக ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களே அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்களை அமைக்க மட்டுமே அரசு மானியம் வழங்கும். CHAdeMO ரக சார்ஜிங் மையம் அமைக்க எந்தவொரு மானியமும் வழங்கபடாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் உள்ளிட்ட ஆயில் நிறுவனங்களுக்கே சார்ஜிங் மையங்கள் அமைக்க நிதி வழங்கப்பட இருக்கின்றது.
இதுதவிர, தனியார் நிறுவனங்கள் சார்ஜிங் மையங்களை கட்டமைப்பதற்கு மானியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. 2024 ஆண்டிற்குள் நாடு முழுவதும் 22 ஆயிரம் சார்ஜிங் மையங்களை அமைப்பதை இலக்காகக் கொண்டு அரசாங்கம் செயல்பட தொடங்கி இருக்கின்றது. எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அசூர வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், இதன் எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் அதிகப்படுத்தப்பட இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
மத்திய அரசு இந்தியாவில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதுமட்டுமின்றி, பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றும் பணியிலும் அது தீவிரம் காட்டி வருகின்றது. குறிப்பாக, மாசை அதிகம் ஏற்படுத்தும் பத்து மற்றும் 15 ஆண்டுகளுக்கு பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களை ஒட்டுமொத்தமாக பயன்பாட்டில் இருந்து வெளியேற்றி ஸ்கிராப் செய்ய முயற்சியில் அரசு களணிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications