ரோடு போட்ட மத்திய அமைச்சருக்கே கடைசியில இதுதான் நிலைமை! சட்டத்துக்கு முன்ன எல்லாருமே சமம்...
பாதுகாப்பான சாலை போக்குவரத்தை பெற வேண்டுமெனில், அதற்கேற்ப சாலை விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், நம்மில் நிறைய பேரிடத்தில் போதிய சாலை விழிப்புணர்வு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதன் காரணமாகவே சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அதிரடியாக அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. ஆனால் சிலர் இவ்வாறான அபாரதங்களுக்கு கண்டனங்களை தெரிவிப்பதை பார்க்க முடிகிறது. சாலை போக்குவரத்து விதிமீறல்களை தெரிந்து செய்தாலும் சரி, தெரியாமல் செய்தாலும் சரி அபராதம் விதிக்கப்படுவது இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் தவிர்க்க முடியாதது ஆகும்.
நம் நாட்டில் பல நகரங்களில் வாகனங்கள் அதிகளவில் சாலையில் செல்கின்றன. ஒரு சிறிய தவறு கூட வேகமாக செல்லும் வாகனங்களுக்கு இடையே பெரிய விபத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகையால், அபராதங்களை விதித்து வாகன ஓட்டிகளை எப்போதும் எச்சரிக்கை உடன் வைத்திருக்க வேண்டி உள்ளது.

நம்மில் நிறைய பேர் குறைந்தப்பட்சம் ஒருமுறையாவது சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் செலுத்தி இருப்போம் என நினைக்கிறேன். பாமர மக்களில் இருந்து பெரும் செல்வந்தர்களில் கூட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுப்படுவோர் இருக்கின்றனர். இவ்வளவு ஏன், மத்திய அரசாங்கத்தின் அமைச்சரான எனது வாகனத்தின் மீது கூட இருமுறை அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தின் போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சராக நிதின் கட்கரி உள்ளார். இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளை அமைப்பது அமைச்சர் நிதின் கட்கரியின் வேலை ஆகும். இவ்வளவு உயரிய பொறுப்பில் இருப்பவரும் அபராதத்தை செலுத்த சொல்லும் அளவிற்கு நமது சாலை பாதுகாப்பு துறை வலுவானதாகவும், கண்டிப்பானதாகவும் உள்ளது.

குறிப்பாக, நம் இந்திய சாலைகளில் பொருத்தப்பட்டு இருக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்ட சிசிடிவி கேமராக்கள் மிகவும் கண்டிப்பானவைகளாக உள்ளன. ஏனெனில், மத்திய அமைச்சர் போன்ற நாட்டின் உயரிய பதவியில் உள்ள ஆட்களின் மீது கூட எந்தவொரு பாரப்பட்சமுமின்றி ஏஐ-கேமராக்கள் (AI Cameras) அபராதங்களை விதிக்கின்றன.
கேரளா (Kerala)-இல் சில வருடங்களுக்கு முன்பு ஏஐ கேமராக்கள் அதிக இடங்களில் பயன்பாட்டில் இருந்த போது, அரசு அதிகாரிகள் மற்றும் சில போலீசார் மீது கூட ஏஐ கேமராக்கள் ஆட்டோமேட்டிக்காக அபராதங்களை விதித்த சம்பவங்களை பற்றி நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். ஆனால், அதன்பின் ஏஐ கேமராக்களை முறையாக பராமரிக்காததால், அவற்றின் பயன்பாடுகள் கேரளாவில் மெல்ல மெல்ல முடிவிற்கு வந்தன.
ஆனால், டெல்லி, மும்பை போன்ற இந்தியாவின் முக்கியமான மாநகரங்களில் பரவலாக ஏஐ கேமராக்கள் சாலை பாதுகாப்பு பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறான ஏஐ கேமரா ஒன்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பயணித்த காரின் மீது அதிவேகமான பயணத்திற்காக 2 முறை அபராதங்களை விதித்துள்ளது.
இந்த விபரங்கள் அனைத்தையும் வளரும் பாரத் உச்சிமாநாடு 2025-இல் கலந்துக் கொண்ட போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிதின் கட்கரி மேலும் பேசுகையில், "பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு சாலையை நான் தான் உருவாக்கினேன். மும்பையில் எனக்கு ஒரு கார் இருக்கிறது.
அந்த கார் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றதற்காக 2 முறை அபராதம் விதிக்கப்பட்டது. யாரும் தப்பிக்க முடியாது. கேமரா எல்லாவற்றையும் படம் பிடிக்கிறது. நான் ரூ.500 செலுத்த வேண்டியிருந்தது. மக்கள் பெரும்பாலானோர் அபராதம் குறித்து புகார் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் விதிகளை மீறக் கூடாது. அபராதங்கள் வருவாய் ஈட்டுவதற்காக அல்ல" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதை போல், அபராதங்கள் வருவாய் ஈட்டுவதற்காக அல்ல. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவும், வாகன ஓட்டிகள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஆகும். ஆகையால், அபராதங்களில் சிக்காமல் தப்பிக்க, சாலையில் எப்போதும் கவனமாக இருக்கவும். அதேநேரம், தெரியாத்தனமாக அபராதத்திற்கு உள்ளாகினால், அதற்கு மனவேதனை அடைய வேண்டாம். ஏனெனில், மத்திய அமைச்சர் கூட அபராதம் செலுத்தி உள்ளார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








