நான் அப்படிப்பட்ட மனுஷன் கிடையாதுங்க, எல்லாம் நாட்டு நன்மைக்கு தான்... மத்திய அமைச்சரின் டுவிட்டர் பதிவு!!
டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் திட்டத்தில் மத்திய அரசு உள்ளது. இந்த நிலையில், நான் டீசல் எரிபொருளுக்கு எதிரானவன் கிடையாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
சில தினங்களுக்கு முன்பு, டீசல் வாகனங்களுக்கான வரியை 10% அதிகரிக்க மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி விருப்பம் தெரிவித்துள்ளதாக பரபரப்பான செய்திகள் வெளிவந்தன. ஏனெனில் இதன் காரணமாக, டீசல் வாகனங்களின் விலைகள் அதிகமாகுவதற்கு வாய்ப்புள்ளதால், இது பலத்த விவாதத்திற்கு உரியதாக மாறியது.

சில ஆட்டோமொபைல் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் கூட இதற்கு தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவியதை அடுத்து, இவ்வாறான எந்தவொரு விருப்ப முன்மொழிவும் அரசாங்கத்திற்கு இதுவரையில் வரவில்லை என அமைச்சர் நிதின் கட்கரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெளிவுப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில், "டீசல் வாகனங்கள் விற்பனைக்கு கூடுதலாக 10% ஜிஎஸ்டி விதிக்கப்பட உள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மத்திய அரசாங்கத்தின் தீவிர பரிசீலனையில் தற்போது அத்தகைய முன்மொழிவு இல்லை என்பதை தெளிவுப்படுத்துவது அவசியம்.
2070க்குள் கார்பனின் நிகர அளவில் பூஜ்ஜியத்தை அடைவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசுப்பாட்டின் அளவைக் குறைப்பதற்கும், அத்துடன் ஆட்டோமொபைல் வாகனங்கள் விற்பனையில் விரைவான வளர்ச்சிக்கும் ஏற்ப, தூய்மையான & பசுமையான மாற்று எரிபொருள்களை ஏற்றுக் கொள்வது அவசியம். மேலும், இந்த எரிபொருள்கள் தற்சமயம் இறக்குமதி செய்யப்படும் எரிபொருள்களின் இடத்தை நிரப்புபவைகளாகவும், செலவு குறைந்தவைகளாகவும், மாசு இல்லாததாகவும் இருக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டு உள்ளது.
அத்துடன், மாசு உமிழ்வின்படி பார்த்தால், இந்தியாவில் உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக டீசல் விளங்குவதாக கூறும் அமைச்சர் நிதின் கட்கரி, "மாசு உமிழ்வை குறைப்பதற்கு ஆட்டோமொபைல் துறைக்கு எனது பரிந்துரை என்னவென்றால், மாற்று எரிபொருளில் கவனம் செலுத்துங்கள் என்பதாகும்" என்றும் தெரிவித்துள்ளார்.

மாற்று எரிபொருள் என மத்திய அமைச்சர் கூறுவது சிஎன்ஜி, பிளக்-இன் ஹைப்ரீட், ஹைட்ரஜன் மற்றும் எலக்ட்ரிக் ஆகும். இதில் மற்றவை அனைத்தும் தற்காலிகமானவையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், எலக்ட்ரிக் நம் இந்தியா மட்டுமின்றி, மொத்த உலகின் எதிர்கால போக்குவரத்துக்கான ஆற்றல் மூலாதாரமாக கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் எலக்ட்ரிக் வாகனங்களின் காற்று மாசு ஆனது பூஜ்ஜியமாக உள்ளது.
இதனாலேயே, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியங்களை கடந்த சில வருடங்களாக மத்திய அரசு வழங்கி வருகிறது. மேலும், 2030ஆம் ஆண்டிற்குள் சாலைகளில் இயங்கும் வாகனங்களில் குறைந்தது 30% ஆவது எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றும் நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. எதிர்கால போக்குவரத்து எலக்ட்ரிக்கை நம்பியே இருக்கும் என்பதை உணர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஏற்கனவே எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் பணியில் இறங்கிவிட்டன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் இயக்கத்தை நோக்கி நாம் செல்கிறோம் என்றாலும், அந்த மாற்றத்தை நாம் முழுமையாக எட்ட இன்னும் பல வருடங்கள் ஆகும். ஆனால் அதற்குள்ளாக, டீசல் வாகனங்களை மக்கள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என்கிற கொள்கை உடன் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஏனெனில், அமைச்சர் நிதின் கட்கரி கூறுவதை போல், பெட்ரோல் வாகனங்களை காட்டிலும், டீசல் வாகனங்களில் இருந்து வெளிவரும் மாசு அளவானது அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









