உலகிலேயே இந்த கார் நம்ம மத்திய அமைச்சர் கிட்ட மட்டுமே இருக்கு! ஒரு துளிகூட பெட்ரோல்-டீசல் தேவைப்படாத கார்!
இந்தியாவில் சாதாரண எம்எல்ஏ-க்களே பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் லேண்ட் ரோவர் போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்களை பயன்படுத்தி வரும் சூழலில், மத்திய அமைச்சரவையில் முக்கிய பொருப்பினை வகிக்கும் அமைச்சர் ஒருவர் மிகவும் சாதாரணமான காரை பயன்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேவேளையில், அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அந்த காரை உலகிலேயே நம்முடைய அமைச்சர் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார் என்பது அதன் சிறப்பாகும். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி. இவர் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் எம்பிவி ரக காரையே பயன்படுத்தி வருகின்றார்.

இது எப்படி புது வகை காராகும்? இந்த காரைதான் லோக்கல் கவுன்சிலர்கள் சிலரே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனரே.. அப்படி இருக்கையில் இந்த கார் எப்படி உலகின் முதல் மற்றும் ஒரே கார் மாடலாக இருக்கும் என கேக்குறீங்களா?.. தற்போது நாட்டில் விற்பனையில் இருக்கும் இன்னோவா ஹைரகிராஸ், பெட்ரோல் பவர்டு வாகனம் ஆகும்.
அதாவது, பெட்ரோலில் மட்டுமே அது இயங்கும். ஆனால், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பயன்படுத்திக் கொண்டிருப்பது ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் பவர்டு வாகனம் ஆகும். இது, 100 சதவீதம் எத்தனாலில் கூட இயங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய திறன் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் இதுமட்டுமே ஆகும்.

இந்தியாவில் இ10 மற்றும் இ20 ரக பெட்ரோலே பயன்பாட்டில் இருக்கின்றது. ஆனால், மத்திய அமைச்சர் பயன்படுத்திக் கொண்டிருப்பது துளியளவும் பெட்ரோல் தேவைப்படாத வெறும் எத்தனாலில் மட்டுமே ஓடக் கூடிய இன்னோவா ஹைகிராஸ் ஆகும். தன்னுடைய இந்த காரை யுட்யூப் சேனல் ஒன்றின் வாயிலாக அவர் தற்போது வெளி உலகிற்கு வெளிக்காட்டி இருக்கின்றார்.
அமைச்சர் நிதின் கட்கரி வைத்திருக்கும் இந்த இன்னோவா ஹைகிராஸ் காரில் ஹைபிரிட் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது அந்த காரின் கூடுதல் சிறப்பு ஆகும். இந்த தொழில்நுட்பம் எரிபொருள் சிக்கனத்திற்கு வழிவகுக்கும். இந்த காரை சமீபத்திலேயே நிதின் கட்கரி வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இது சுற்றுச் சூழலுக்கு உகந்த வாகனம் என கூறப்படுகின்றது. இதன் காரணத்தினாலேயே இந்த இன்னோவாவை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தன்னுடைய கராஜில் சேர்த்து இருக்கின்றார். எத்தனால், விவசாய கழிவுகளில் இருந்தே தயாரிக்கப்படுகின்றது. முக்கியமாக கரும்பு கழிவுகளே இதன் உற்பத்தியில் முக்கிய பங்கினை வகிக்கின்றன.
எனவேதான் இந்தியா, எத்தனாலில் இயங்கும் வாகனங்களை பயன்பாட்டிற்குக் கொண்டும் வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இதனால் விவசாயம் வளர்ச்சியடையும் என நம்பப்படுகின்றது. முக்கியமாக அமைச்சர் நிதின் கட்காரி இந்த பணியில் மும்பரமாக ஈடுபட்டு வருகின்றார். எத்தனால், மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
எனவேதான் நாட்டு மக்கள் மத்தியிலும் எத்தனால் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த இன்னோவா ஹைகிராஸ் 100 சதவீதம் எத்தனாலில் மட்டுமல்ல, 100 சதவீத பெட்ரோலிலும் ஓடும் திறன் கொண்டது. ஆமாங்க, பெட்ரோல் மற்றும் எத்தனால் என எதுக் கிடைத்தாலும் அதைக் கொண்ட இந்த வாகனத்தை இயக்கிக் கொள்ள முடியும்.
மாற்றி மாற்றி இயக்குவதனால் எந்த சிக்கலையும் அந்த கார் சந்திக்காது. விரைவில் இந்த வசதிக் கொண்ட கார்கள் நாட்டில் விற்பனைக்குக் களமிறங்க இருக்கின்றன. இதற்கான முயற்சியில் அரசும், வாகன உற்பத்தி நிறுவனங்களும் மிக தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. கார்கள் மட்டுமல்ல இருசக்கர வாகன பிரிவும் எத்தனால் பவர்டு டூ-வீலர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன.
இந்த முயற்சியில் பஜாஜ், ஹோண்டா என முன்னணி நிறுவனங்கள் பல ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. எத்தனால் பயன்பாட்டிற்கு மாறுவதனால் நாட்டின் கச்சா எண்ணெய் தேவை பலமடங்கு குறையும். இதனால் அந்நிய செலவாணி பலமடங்குக் குறையும். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனம் மட்டுமல்ல ஹைட்ரஜன் பவர்டு வாகனமும் பயன்பாட்டில் இருக்கின்றது.
டொயோட்டா மிராய் காரே அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த காரில் ஒரு முறை முழுமையாக ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை நிரப்பினால் 647 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் வரை அக்காரில் பயணிக்க முடியும். உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே டொயோட்டாவின் இந்த தயாரிப்பு விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்தியாவில் இதன் விற்பனைக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே சிஎன்ஜி, எலெக்ட்ரிக் உள்ளிட்ட மாற்று திறன் கொண்ட வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இப்போது டீசல் வாகனங்களின் விற்பனையை மிஞ்சும் அளவிற்கு சிஎன்ஜி வாகனங்கள் விற்பனையில் கொடிக் கட்டிப் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications