இது மட்டும் நடந்தா போதும் பெட்ரோல் லிட்டர் ரூ15-க்கு கிடைக்கும்! மத்திய அமைச்சர் சொன்ன சூப்பர் யோசனை!
மத்திய அமைச்சர் நிதின்கட்கரி இந்தியாவில் உள்ள வாகனங்கள் 60% எத்தனால் மற்றும் 40% எலெக்ட்ரிக் வாகனங்களாக மாறினால் இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 15 ஆகக் குறையும் எனப் பரபரப்பாகப் பேசியுள்ளார். இது குறித்த விரிவான விவரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் பெட்ரோல் விலை தற்போது 100-ஐ தாண்டியும் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் என்பது ஒரு அடிப்படைத் தேவை என்பதால் மக்கள் அதிக விலை கொடுத்து பெட்ரோலை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இந்த பெட்ரோல் விலையை அடிப்படையாகக் கொண்டுதான் பல பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் தேவையைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். முக்கியமாக எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிப்பதும் பெட்ரோல் தேவை குறைப்பதற்கான ஒரு விஷயம் தான். அதே நேரத்தில் தற்போது விற்பனையாகும் வாகனங்களை எத்தனால் கொண்டு பயன்படுத்தப்படும் வாகனங்களாக மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி படிப்படியாக பெட்ரோலில் எத்தனால் கலக்கும் முயற்சியில் தற்போது மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே 10 சதவீதம் வரை பெட்ரோலில் எத்தனால் கலக்கப்பட்டு வருகிறது. இதை 20% உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. படிப்படியாக 60-80 சதவீதம் வரை எத்தனாலை பெட்ரோலுடன் கலக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்பொழுது அவர் பேசிய விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.அவர் இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூபாய் 15க்கு விற்கும் காலம் விரைவில் வரும் எனக் கூறினார்.
இது குறித்து அவர் பேசியதாவது: "இந்திய அரசின் தற்போதைய மனநிலை என்பது விவசாயிகளை உணவு வழங்கும் "அன்னதத்தா"வாக மட்டுமல்லாமல் சக்தியையும் வழங்கும் "உர்ஜதத்தா"வாக மாற்ற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.விவசாயிகளே எரிசக்திகளைத் தயாரிக்க முடியும். அதை அவர்களே விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கவும் முடியும்.
தற்போது வாகனங்கள் எல்லாம் எத்தனாலில் இயங்கத் துவங்கி விட்டன. நாட்டில் உள்ள வாகனங்கள் 60% எத்தனால் 40 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாறினாள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 15க்கு குறைந்து விடும். இதனால் காற்று மாசு ஏற்படுவதும் குறையும். கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதும் குறையும்.
தற்போது இந்தியா சுமார் ரூ 16 லட்சம் கோடி அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியாவில் இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலை மாறிவிட்டால் இந்த ரூ 16 லட்சம் கோடி இந்தியாவில் உள்ள விவசாயிகள் கைக்குக் கிடைக்கும். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் உயரும்"எனப் பேசினார். இவர் பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவில் எத்தனால் தயாரிப்பு என்பது விவசாயிகளின் கையில் தான் இருக்கிறது. விவசாய கழிவுகளிலிருந்து தான் அதிகமான எத்தனால் தயாரிக்க முடியும். அதனால் விவசாயிகள் இனி தங்களது கழிவுகளை வீணாக்காமல் அதிலிருந்து எத்தனால் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினால் அவர்களுக்குக் கூடுதலாக வருமானம் கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எத்தனால் தயாரிப்பு என்பது விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய லாபத்தை ஈட்டுக் கொடுக்கும் ஒரு விஷயமாக மாறக்கூடும். இதை விரைவாகச் செய்ய பெட்ரோலில் எத்தனால் கலப்பை அதிகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும். அமைச்சர் சொல்வது எல்லாம் நடக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








