எவ்வளவு பெரிய அமைச்சர்! நாட்டு மக்களுக்காக வெளிநாட்டில் என்னவெல்லாம் செய்றாரு பாருங்க!!
செக் குடியரசு நாட்டில் நம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஹைட்ரஜனில் இயங்கும் பேருந்தில் பயணம் செய்து, ஆய்வு செய்து பார்த்துள்ளார். மேலும், ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஹைட்ரஜன் பேருந்தை இந்தியாவிலும் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் திட்டத்தில் இந்திய அரசு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா மட்டுமில்லாமல், மொத்த உலக நாடுகளும் பெட்ரோல்/ டீசலுக்கு மாற்று எரிபொருளை கொண்டுவரும் முனைப்பில் உள்ளன. பெட்ரோல்/ டீசலுக்கு மாற்று எரிபொருளாக எலக்ட்ரிக்கை பல்வேறு நாட்டு அரசாங்கங்கள் ஏற்றுக் கொண்டாலும், வேறு சில எரிபொருட்களும் ஆலோசனையில் உள்ளன. அவற்றுள் ஒன்று, ஹைட்ரஜன் ஆகும்.

ஹைட்ரஜனில் இயங்கக்கூடிய முதல் பேருந்து மிக சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோன்று, மற்ற நாடுகளில் எந்தவொரு பிரச்சனையும் இன்றி பயன்பாட்டில் இருக்கும் ஹைட்ரஜன் வாகனங்களையும் இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டத்தில் மத்திய அரசு உள்ளது. இதன் வெளிப்பாடாக, மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி செக் குடியரசு நாட்டுக்கு சென்றுள்ளார்.
செக் குடியரசு நாட்டின் பராகுவே நகரில் 27வது உலக சாலை மகாசபை நடைபெறுகிறது. இதில் கலந்துக் கொள்வதற்காகவே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செக் குடியரசுக்கு சென்றுள்ளார். அத்துடன், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, ஸ்கோடா எச்'சிட்டி என்ற ஹைட்ரஜனில் இயங்கும் பேருந்தையும் பராகுவே நகர சாலைகளில் அமைச்சர் நிதின் கட்கரி டெஸ்ட் ரைடு செய்து பார்த்துள்ளார்.

இதுகுறித்த வீடியோ & படங்கள் நிதின் கட்கரியின் அதிகாரப்பூர்வ அலுவலக டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், "பசுமையான சூழலுக்கு ஏற்ற மொபைலிட்டியை கொண்டுவருவதில் இந்தியாவின் ஆர்வத்தை இது வெளிக்காட்டுகிறது. ஹைட்ரஜன் பேருந்துகள் கார்பன் உமிழ்வை குறைப்பதில் குறிப்பிடத்தக்க வாக்குறுதியை அளிக்கின்றன மற்றும் சுற்றுச்சூழல் கவலைகளை நிவர்த்தி செய்து, தூய்மையான & பசுமையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கின்றன" என இந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஸ்கோடா எச்'சிட்டி ஹைட்ரஜன் பேருந்துகளில் இயக்க ஆற்றலுக்கு பாலிமர் எலக்ட்ரோலைட் மெம்ப்ரன் (PEM) பேட்டரிகள் பொருத்தப்படுகின்றன. ஹைட்ரஜன் வாயுக்கள் பேருந்தின் மேற்கூரையில் இருக்கும் டேங்குகளில் உள்ளன. இந்த ஹைட்ரஜன் வாயுக்கள் வெளியில் இருக்கும் ஆக்ஸிஜன் உடன் வினைபுரிந்து ஆற்றலை உருவாக்கும். இவ்வாறு உருவாக்கப்படும் ஆற்றல்கள் பேட்டரிகளில் சேகரிக்கப்படும்.

பேட்டரிகளின் தொகுப்பை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிட்டால், அதிகப்பட்சமாக 350கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது ஸ்கோடா நிறுவனம். இந்திய அரசாங்கம் எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் அதேநேரத்தில் ஹைட்ரஜன் வாகனங்களை உருவாக்கவும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கிறது. ஆதலால், வரும் நாட்களில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவிற்காகவும் இவ்வாறான ஹைட்ரஜன் பேருந்துகளை உருவாக்கி வழங்கலாம்.
அல்லது, வேறு ஏதேனும் ஆட்டோமொபைல் நிறுவனத்திடம் ஹைட்ரஜன் பேருந்துகளை உருவாக்கி தரும் ஆர்டரை மத்திய அரசு வழங்கலாம். இவ்வாறு எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் முனைப்புடன் மத்திய அரசு செயல்பட்டதினாலேயே நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் அரசு பேருந்துகள் எலக்ட்ரிக்கில் உள்ளன. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் மட்டும் தற்சமயம் 800க்கும் அதிகமான எலக்ட்ரிக் மாநகர பேருந்துகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக்கை போலவே, ஹைட்ரஜன் வாகனங்களும் பசுமையான சூழலுக்கு ஏற்றவையாக பார்க்கப்படுகின்றன. ஆனால் அதேநேரம், ஹைட்ரஜனை பயன்படுத்துவதிலும் சில பிரச்சனைகள் உள்ளன. அதாவது, ஹைட்ரஜன் மணம் & நிறமற்றது போன்றவை. ஆனால் இந்த குறைப்பாட்டை எல்லாம் களையும் திட்டங்கள் மத்திய அரசாங்கத்திடம் இருக்கும் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications









