எல்லாத்துக்கும் ரெடியாகுங்க... மத்திய அமைச்சரின் மறைமுக எச்சரிக்கை - இனி வர போகும் கார் எல்லாம் இப்படிதான்!!
எலக்ட்ரிக் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதன் முக்கிய நோக்கமே, அவற்றில் இருந்து கார்பன் மாசு உமிழ்வானது முற்றிலுமாக இருக்காது என்பதாகும். அதேநேரம், பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்தும் கார்பன் மாசு உமிழ்வை குறைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமானது, பிஎஸ் (BS - Bharat Stage Emission Standards) மாசு உமிழ்வு கட்டுப்பாடுகள் ஆகும். வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன் மாசு உமிழ்வை கட்டுப்படுத்துவது பிஎஸ் கட்டுப்பாடுகளின் முக்கிய நோக்கமாகும். ஆரம்பத்தில் இந்த மாசு உமிழ்வு கட்டுப்பாடுகள் ஐரோப்பாவில் 'யூரோ' என்கிற பெயரில் பின்பற்றப்பட்டு வந்தன.
அதனை பின்பற்றி, இந்திய அரசாங்கம் 2000ஆம் ஆண்டில் 'இந்தியா 2000' என்கிற பெயரில் இந்த கட்டுப்பாடு வழிமுறைகளை நாட்டில் அறிமுகம் செய்தது. அதன்பின்னர், இந்த கட்டுப்பாட்டு விதிமுறை ஆனது பிஎஸ் என மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, பிஎஸ்2, பிஎஸ்3, பிஎஸ்4 என இந்த விதிமுறைகள் அடுத்தடுத்து அப்டேட் செய்யப்பட்டன.

கடைசியாக, கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வந்தன. பிஎஸ்4-இல் இருந்து பிஎஸ்5 கொண்டுவரப்படாமல், நேரடியாக பிஎஸ்6 கொண்டுவரப்பட்டது. அதன்பின், கடந்த 2023 ஜூன் மாதத்தில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறையில் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. இதன் மூலமாக, இன்றைய கால வாகனங்களில் இருந்து வெளிவரும் மாசு உமிழ்வின் அளவு ஆனது வெகுவாக குறைந்துள்ளது.
இந்த நிலையில், இந்த வாகன மாசு உமிழ்வு விதிமுறையில் அடுத்த கட்டமாக, பிஎஸ்7 விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஆதலால், அதற்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாராக இருக்கும்படி மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இது, இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பாவில் யூரோ-7 மாசு உமிழ்வு விதிமுறைகள் வருகிற 2025ஆம் ஆண்டில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவின் பிஎஸ் விதிமுறைகள் பெரும்பாலும் ஐரோப்பாவின் ஸ்டாண்டர்டை சார்ந்தே இருக்கும் என்பதால், 2025இல் யூரோ-7 அங்கு அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே இந்தியாவில் பிஎஸ்7 அமலுக்கு கொண்டுவரப்பட்டு விடும் என தெரிகிறது.
மத்திய அரசாங்கத்திடம் இருந்து இதுகுறித்து அறிவிப்பு வரும் வரையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் காத்திருக்க வேண்டாம் என தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் இதுகுறித்து மேலும் பேசுகையில், "பிஎஸ்7 வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிக்களை மேற்கொள்ள நீங்கள் (ஆட்டோமொபைல் நிறுவனங்கள்) தொடங்க வேண்டும். நமது தொழில்துறை ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும்.
கடந்த முறை, அரசு காலக்கெடுவை நிர்ணயித்து, அதனை கடைப்பிடிக்க தொழிற்துறையை தள்ளியது. தொழில்துறையினரும் அதற்கேற்ப தங்களது பங்களிப்பை வழங்கினர். ஆனால், நாங்கள் அப்படி ஒரு முடிவை எடுக்கும் வரையில் நீங்கள் ஏன் காத்திருக்க வேண்டும்?" என கேள்வி எழுப்பியுள்ளார். பிஎஸ்6 விதிமுறைகளை போன்று, ஐரோப்பாவில் யூரோ-7 விதிமுறைகளும் 2 கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளன.
இதில் முதல் கட்டம் 2025ஆம் ஆண்டிலும், 2ஆம் கட்டம் 2027ஆம் ஆண்டிலும் அங்கு அமல்படுத்தப்பட உள்ளன. 2025ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் யூரோ-7 அமலுக்கு வந்தாலும், இந்தியாவில் பிஎஸ்7 ஆனது 2027ஆம் ஆண்டில்தான் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. நைட்ரஜன் ஆக்ஸைடு வாயுவை குறைவாக வெளிப்படுத்தும் வகையில், வாகனங்களின் என்ஜின் சிஸ்டத்தில் அதிநவீன வடிக்கட்டிகள் மற்றும் அதிநவீன எக்ஸாஸ்ட் ஆஃப்டர்-ட்ரீட்மெண்ட் சிஸ்டங்கள் வழங்கப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎஸ்6 விதிமுறைகளினால் டீசல் என்ஜின் வாகனங்களை அப்டேட் செய்வது செலவு மிகுந்ததாக இருந்தது. இதனால், மாருதி சுஸுகி போன்ற இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்கள் கூட டீசல் கார்களின் விற்பனையை நிறுத்திக் கொண்டன. பிஎஸ்7 விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு இன்னும் 3 வருடங்கள் ஆகும் என்றாலும், அதற்குள்ளாக எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கும்படி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தற்போது மறைமுகமாக எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








