யப்பா... இந்த விஷயத்தில் உ.பி முதல்வர் யோகி ஒருபடி மேலே போய் யோசிச்சுட்டாரு!! தமிழ்நாட்டிலும் இந்த திட்டம்?
எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கு சாலை வரியும் கிடையாது மற்றும் வாகன பதிவு கட்டணமும் கிடையாது என்கிற அசத்தலான திட்டத்தை மாநில அரசு ஒன்று கொண்டுவந்துள்ளது. எந்த மாநில அரசு, எத்தனை நாட்களுக்கு இந்த திட்டம் அமலில் இருக்க உள்ளது என்பது குறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
உலக நாடுகள் அனைத்தும் மெல்ல மெல்ல எரிபொருள் என்ஜின் வாகனங்களில் இருந்து, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றன. நமது இந்தியாவும் கூட 2030க்குள் நாட்டில் விற்பனையாகும் கார்களுள் 30% எலக்ட்ரிக் கார்களாக இருக்க வேண்டும் என்கிற கொள்கை உடன் கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது. மேலும் இதற்காக ஃபேம்-2 திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டமானது எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி மாற்றத்தை கொண்டுவோர்க்கு மானியம் கிடைக்க வழிவகை செய்தது. இவ்வாறு மத்திய அரசு மட்டுமின்றி, மாநில அரசாங்களும் குறிப்பிட்ட சதவீத வரியை எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியங்களாக வழங்கி வருகின்றன. இதன் காரணமாக நம் நாட்டில் கடந்த சில வருடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதற்காக களமிறங்கியுள்ள இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஏராளம்.
இந்த நிலையில், எலக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக மானியங்களை கடந்து ஓர் மாநில அரசு அதிரடியாக சாலை வரி மற்றும் வாகன பதிவு கட்டணம் இல்லை என்கிற வரி விலக்கை அறிவித்துள்ளது. அந்த மாநில அரசு வேறொன்றும் கிடையாது, யோகி ஆதித்யநாத் ஆளும் உத்திர பிரதேசம் தான். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை உத்திர பிரதேச அரசு கடந்த மார்ச் 3ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், எலக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வரி விலக்கு ஆனது அடுத்த 3 வருடங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 3 வருட காலம் ஆனது கடந்த 2022 அக்டோபர் 14ஆம் தேதியே துவங்கிவிட்டதாகவும், உத்திர பிரதேச மாநிலத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அடுத்த 5 வருடங்களுக்கு மேற்கூறிய வரிவிலக்குகளை பெறலாம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரிவிலக்கை உடனடியாக அமலில் கொண்டுவரவும், இதுகுறித்த வழிமுறைகளை தெரிந்து கொள்ளவும் இந்த அறிக்கை உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் (RTO) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில், பேட்டரிகள், அல்ட்ரா கெபாசிடர்கள் மற்றும் ஃப்யுல் செல்கள் மூலமாக இயக்க ஆற்றல் பெறுபவையே எலக்ட்ரிக் வாகனங்கள் என்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வரையறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு உத்திர பிரதேச அரசின் இந்த சாலை வரி மற்றும் வாகன பதிவு கட்டண விலக்குகள் 3 வருடத்திற்கு இருக்கும் என்றும், இந்த 3 வருட காலம் கடந்த 2022 அக்டோபர் 14ஆம் தேதியே துவங்கிவிட்டதாக கூறினோம் அல்லவா. 2022 அக்டோபர் 14இல் இருந்து தற்போது வரையில், இந்த இடைப்பட்ட காலத்தில் கட்டணத்துடன் தனது எலக்ட்ரிக் வாகனத்தை ஆர்டிஓ-வில் பதிவு செய்து, சாலை வரியை கட்டியவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆக்ராவில் கடந்த அக்.14ஆம் தேதியில் இருந்து 3,997 எலக்ட்ரிக் வாகனங்கள் மேற்கூறபட்ட வரி விலக்குகளை பெறவில்லை. இந்த 3,997 எலக்ட்ரிக் வாகனங்களில் 437 எலக்ட்ரிக் ரிக்ஷாக்களும், 30 எலக்ட்ரிக் கார்களும், மீதி இருப்பவை அனைத்தும் எலக்ட்ரிக் இரு-சக்கர வாகனங்களாகும். இவையும் மாநில அரசின் இலவச வாகன பதிவு மற்றும் சாலை வரி திட்டத்திற்கு கீழ் வருவதால், இதற்கான நிவாரண தொகையை அவற்றின் உரிமையாளர்கள் பெற்று கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








