ஓசூர் அருகே மக்களை மிரட்டிய அமெரிக்கா-ரஷ்யா போர் விமானங்கள்! மோடி டிரம்ப்பை பாக்க போன நேரத்தில் நடந்த சம்பவம்!
உலகின் சக்தி வாய்ந்த நாடு எது? என்பதில், அமெரிக்கா (America) மற்றும் ரஷ்யா (Russia) ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே, மிக நீண்ட காலமாக போட்டி இருந்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளும் தங்களின் ஆயுத பலத்தை அதிகரித்து கொண்டே செல்கின்றன. குறிப்பாக அதிக சக்தி வாய்ந்த தொழில்நுட்பத்தில் மேம்பட்ட அதிநவீன போர் விமானங்களை (Fighter Aircraft) உருவாக்குவதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய 2 நாடுகளுக்கும் இடையே தற்போது உச்சகட்ட போட்டி நிலவி கொண்டுள்ளது.
தற்போதைய நிலையில் அமெரிக்காவின் எஃப்-35 லைட்டினிங் II (F-35 Lightning II) மற்றும் ரஷ்யாவின் எஸ்யூ-57 (Su-57) ஆகிய இரண்டும்தான் உலகின் அதிசக்தி வாய்ந்த போர் விமானங்களாக கருதப்படுகின்றன. எதிரிகளை அழிப்பதில் முக்கிய பங்காற்றும் இவை இரண்டுமே ஐந்தாவது தலைமுறை போர் விமானங்கள் ஆகும்.

வல்லமை மிக்க இந்த 2 போர் விமானங்களையும் கண்டுகளிக்கும் வாய்ப்பு இந்திய மக்களுக்கு தற்போது கிடைத்துள்ளது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் (Bangalore) நகரில் உள்ள எலஹங்கா ஏர் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் (Yelahanka Air Force Station) ஏரோ இந்தியா 2025 (Aero India 2025) நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.
ஓசூரில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ள எலஹங்காவில், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த விமான கண்காட்சி அரங்கேறுகிறது. இங்குதான் அமெரிக்காவின் எஃப்-35 லைட்டினிங் II மற்றும் ரஷ்யாவின் எஸ்யூ-57 ஆகிய 2 போர் விமானங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த 2 போர் விமானங்களும் ஒரே நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு ஒன்றாக காட்சி தந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

வெறுமனே காட்சிக்கு வைக்கப்படுவதுடன் நிற்காமல், இந்த 2 போர் விமானங்களும் பெங்களூர் வான்வெளியில் பறக்கவும் செய்துள்ளன. இது போர் விமானங்கள் மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தற்போது அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை (Donald Trump) அவர் நாளை (பிப்ரவரி 13) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி-டிரம்ப் சந்திப்பு நடைபெறவுள்ள நேரத்தில், எதிர் எதிர் துருவங்களாக கருதப்படும் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அதிநவீன போர் விமானங்கள் பெங்களூர் வான்வெளியில் பறந்துள்ள நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் எஃப்-35 லைட்டினிங் II போர் விமானம் கடந்த 2015ம் ஆண்டில் இருந்து சேவையில் இருந்து வருகிறது. இதன் நீளம் 15.7 மீட்டர்கள் ஆகும். இந்த போர் விமானம் மணிக்கு 1,930 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் திறன் வாய்ந்தது. இதன் காம்பேட் ரேஞ்ச் (Combat Range) 2,200 கிலோ மீட்டர்கள் ஆகும்.
காம்பேட் ரேஞ்ச் என்பது ஏவுதளத்தில் இருந்து ஒரு போர் விமானம் புறப்பட்டு சென்று, இலக்கை தாக்கி அழிப்பது போன்ற மிஷனை வெற்றிகரமாக முடித்து கொண்டு, குறைந்தபட்ச எரிபொருள் இருப்பு மூலமாக மீண்டும் திரும்பி வரும் அதிகபட்ச தொலைவை குறிப்பதாகும். அமெரிக்காவின் எஃப்-35 லைட்டினிங் II போர் விமானத்தில் அணுசக்தி திறன் கொண்ட ஆயுதங்களும் உள்ளன.
மறுபக்கம் ரஷ்யாவின் எஸ்யூ-57 போர் விமானம், கடந்த 2020ம் ஆண்டில் இருந்து, சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இதன் நீளம் 19.8 மீட்டர்கள் ஆகும். இந்த போர் விமானம் அதிகபட்சமாக மணிக்கு 2,450 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க கூடியது. இதன் காம்பேட் ரேஞ்ச் 3,500 கிலோ மீட்டர் (மீண்டும் எரிபொருள் நிரப்பாமல்) ஆகும்.
இந்த போர் விமானத்தில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளன. இந்த 2 போர் விமானங்களுமே எதிரிகளின் ரேடார் கண்ணில் மண்ணை தூவி விட்டு வெற்றிகரமாக இலக்கை தாக்க கூடியவை. எனினும் ரேடாரில் இருந்து தப்பிப்பதில், ரஷ்யாவின் எஸ்யூ-57 போர் விமானத்தை காட்டிலும், அமெரிக்காவின் எஃப்-35 லைட்டினிங் II திறம்பட செயல்படும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெங்களூரில் தற்போது நடைபெற்று வரும் ஏரோ இந்தியா 2025 பாதுகாப்பு திருவிழாவில் 2 கதாநாயகர்கள் உள்ளனர். அதில், அமெரிக்காவின் எஃப்-35 லைட்டினிங் II போர் விமானம் ஒன்று. மற்றொரு ஹீரோ ரஷ்யாவின் எஸ்யூ-57 போர் விமானம் ஆகும்.


Click it and Unblock the Notifications








