அரசே அதிரடியாக அறிமுகம் செய்கிறது... இனி ஹெலிகாப்டர் டாக்ஸியில் எல்லாரும் ஜாலியா போகலாம்... சூப்பர்ல!
விரைவில் தொடங்கப்படவுள்ள ஹெலிகாப்டர் டாக்ஸி சேவை குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உத்தர பிரதேச மாநில சுற்றுலா துறை, ஹெலிகாப்டர் டாக்ஸி சேவையை அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகிறது. இதன்மூலம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த ஹெலிகாப்டர் டாக்ஸி சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஆக்ரா நகரில் ஹெலிபோர்ட் தயாராக இருப்பதாக சுற்றுலா துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் உத்தர பிரதேச மாநிலத்தின் மற்ற முக்கியமான சுற்றுலா தலங்களில் ஹெலிபோர்ட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''தாஜ்மஹாலை பார்வையிடுவதற்காக வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உள்பட பலர் ஆக்ராவிற்கு வருகின்றனர். இதற்கு போக்குவரத்து வசதிகள் சிறப்பாக இருப்பது முக்கியமான காரணம். ஆனால் அதே சுற்றுலா பயணிகள் இதே அளவிற்கு முக்கியத்துவம் உள்ள மற்ற சுற்றுலா தலங்களை பார்வையிட தவறி விடுகின்றனர்.

இதற்கு போக்குவரத்து வசதிகள் அவர்களுக்கு ஏற்ற வகையில் இல்லாததுதான் காரணம். அத்தகைய சுற்றுலா பயணிகளுக்கு ஹெலிகாப்டர் டாக்ஸி சேவை மிகவும் உதவிகரமாக இருக்கும். அத்துடன் சில சமயங்களில் நேரமின்மை காரணமாக சுற்றுலா பயணிகள் மற்ற சுற்றுலா தலங்களை பார்வையிட தவறி விடுகின்றனர்.

ஹெலிகாப்டர் டாக்ஸி சேவை மூலம் இந்த பிரச்னைக்கும் தீர்வு காணப்படும். எந்த நாளில் சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட ஒரு சுற்றுலா தலத்திற்கு செல்கிறார்களோ, அதே நாளில் அவர்களால் திரும்ப வந்து விட முடியும். எனவே ஹெலிகாப்டர் டாக்ஸி சேவைக்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்'' என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''ஹெலிகாப்டர்களில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உடைய பயணிகள் மத்தியிலும் இந்த ஹெலிகாப்டர் டாக்ஸி சேவை நல்ல வரவேற்பை பெறும் என நாங்கள் நினைக்கிறோம். அத்துடன் கொரோனா வைரஸ் பிரச்னை தொடர்ந்து இருந்து கொண்டே வரும் நிலையில், பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணம் செய்வதற்கு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம்தான் இதற்கு காரணம். இதுபோன்ற பிரச்னைகளால் ஆகாய மார்க்கமாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த ஹெலிகாப்டர் டாக்ஸி சேவை உதவியாக இருக்கும்'' என்றனர். இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோது, வாகனங்களின் விற்பனை மிக கடுமையாக சரிந்தது.

ஆனால் ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்ட பிறகு, வாகன விற்பனை கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கு பொது போக்குவரத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான் காரணம். சொந்த வாகனங்களில் பாதுகாப்பாக பயணம் செய்ய மக்கள் விரும்பியதால், புதிய வாகனங்களின் விற்பனை மீண்டும் அதிகரித்தது.

இதுபோன்ற நிகழ்வுகளை மனதில் வைத்துதான் அதிகாரிகள் மேற்கண்ட கருத்தையும் தெரிவித்துள்ளனர். முன்னதாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே ஹெலிகாப்டர் டாக்ஸி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் ஒரு உதாரணம்.

இதுதவிர நாட்டின் மற்ற ஒரு சில பகுதிகளிலும் கூட ஹெலிகாப்டர் டாக்ஸி சேவைகள் கிடைக்கின்றன. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கூட ஹெலிகாப்டர் டாக்ஸி சேவையை கடந்த காலங்களில் மக்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் உத்தர பிரதேச சுற்றுலா துறையின் முயற்சிக்கும் நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் உத்தர பிரதேச மாநில அரசின் சுற்றுலா துறை அறிமுகம் செய்யவுள்ள ஹெலிகாப்டர் டாக்ஸி சேவைக்கு எவ்வளவு கட்டணம்? என்பது போன்ற தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. கூடிய விரைவில் இந்த தகவல்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டணம் நியாயமாக இருந்தால் நடுத்தர வர்க்க மக்களிடமும் இந்த ஹெலிகாப்டர் டாக்ஸி சேவை நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








