உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
விமான போக்குவரத்து நாளுக்கு நாள் அத்தியாவசியமானதாக மாறி வருகிறது. இதனால், இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் எத்தனை விமான நிலையங்கள் உள்ளன? எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் விமான நிலையங்கள் உள்ளன? என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மக்கள் தொகையிலும், பொருளாதாரத்திலும் நம் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இதனால், வருங்காலங்களில் உலகின் அசைக்க முடியாத சக்தியாக இந்தியா இருக்கும் என பல வெளிநாட்டு அறிஞர்கள் கூட கணித்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவில் விமான சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பக்கத்தில் இருக்கும் முக்கியமான நகரத்திற்கு கூட விமானங்களில் செல்ல நம் நாட்டு மக்கள் விரும்ப ஆரம்பித்துள்ளனர். இதனால், சேவையில் பயன்படுத்தப்படும் விமானங்களின் எண்ணிக்கையும், சேவையை வழங்கும் ஏர்லைன் நிறுவனங்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக உயர்ந்துக் கொண்டிருக்கிறது. அதேபோல், புது, புது நகரங்களில் விமான நிலையங்கள் கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றன.
அதேநேரம், ஒரே நகரத்திலும் பல விமான நிலையங்கள் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டுள்ளன. நம் சென்னையில் கூட, ஏற்கனவே மீனம்பாக்கத்தில் விமான நிலையம் இருக்கும் நிலையில், பரந்தூரில் புதியதாக விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது. இவ்வாறு, நம் தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் இருந்து பல நகரங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்திய அளவில் பார்த்தால், உத்தர பிரதேசத்திலும், மஹாராஷ்டிராவிலும் தான் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விமான நிலையங்கள் உள்ளன. உத்தர பிரதேசத்தில் சிறு மற்றும் குறு வணிகங்களை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு விதமான முயற்சிகளை உ.பி மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த முயற்சிகளின் விளைவாகவே, உத்தர பிரதேசத்தில் சமீப காலங்களில் அதிக எண்ணிக்கையில் விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் பரப்பளவில் பெரியது. இருப்பினும், இந்த மாநிலத்தில் கிராமங்களே அதிகமாக உள்ளன என்றாலும், விமான நிலையங்களும் அதிகமாக இருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. உத்தர பிரதேசத்தில் தற்சமயம் மொத்தம் 10 விமான நிலையங்கள் உள்ளன. இதில், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் அடங்குகின்றன. ஆதலால், இந்தியாவில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் உ.பி மாநிலத்திற்குள் நுழைவதற்கு இந்த 10 விமான நிலையங்கள் வாசல் கதவுகளாக விளங்குகின்றன.

உத்தர பிரதேசத்தில் கடைசியாக கடந்த ஆண்டு இறுதியில் அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது. அயோத்தியில் கடவுள் ராமர் கோயில் திறக்கப்பட்டதை முன்னிட்டு புதிய விமான நிலையம் திறக்கப்பட்டது. உ.பி மாநிலத்தில் லக்னோ, வாரணாசி, அயோத்தி, குஷிநகர் உள்ளிட்ட 4 நகரங்களில் சர்வதேச விமான நிலையங்களும், ஆக்ரா, கான்பூர், கோராக்பூர், பிராக்யராஜ், இந்தோன் மற்றும் பாரெய்லி என 6 நகரங்களில் உள்நாட்டு விமான நிலையங்களும் உள்ளன.
உத்தர பிரதேத்தை போல், மஹாராஷ்டிராவிலும் 10 விமான நிலையங்கள் உள்ளன. இருப்பினும், இந்த தொகுப்பில் உ.பி-ஐ முதலாவதாக நாம் பார்ப்பதற்கு காரணம், இந்த மாநிலத்தில் ஏர்போர்ட்களில் பெரும்பாலானவை மாடர்ன் தரத்தில் இருப்பதினால் ஆகும். ஆனால், உ.பி-க்கு முன்னதாகவே மஹாராஷ்டிராவில் 10 விமான நிலையங்கள் அமைந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு மாநிலங்களுக்கு அடுத்து, குஜராத் மற்றும் கர்நாடகாவில் தலா 9 விமான நிலையங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உத்தர பிரதேசத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலேயே தற்சமயம் வேகமாக பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுவரும் நகரமாக விளங்கும் நொய்டாவில் இன்னும் விமான நிலையம் திறக்கப்படவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் நொய்டா சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டுவிடும். அதன்பின், உத்தர பிரதேசத்தில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துவிடும்.


Click it and Unblock the Notifications









