உத்தர பிரதேச போலீஸ்காரர்களுக்கு பெரிய மனசுங்க!! இலவசமாக ஹெல்மெட்ஸ்... நம் சென்னை போலீஸாரும் செய்வார்களா?
உத்தர பிரதேசம் மாநில போலீசார், பிரபல பைக் டாக்ஸி இணையத்தளமான ராபிடோ உடன் இணைந்து நொய்டாவில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி குறித்தும், இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட ஹெல்மெட்கள் குறித்தும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ராபிடோ, இந்தியா முழுவதும் பிரபலமான பைக் டாக்ஸி நிறுவனம். இணையம் வாயிலாக செயல்படும் இந்த நிறுவனத்திற்கு சில மாநில நகரங்களில் எதிர்ப்புகளும் உள்ளன. அதாவது, திருட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பைக் டாக்ஸியை சுற்றிலும் நடைபெறுவதாகவும், இத்தகைய செயல்களில் ஈடுப்படும் பைக் ரைடர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை அடையாளம் காண்பது சில நேரங்களில் கடினமானதாக உள்ளதாகவும் டெல்லி உள்பட சில மாநிலங்களில் எதிர்ப்புகள் உள்ளன.

அதேபோன்று மறுப்பக்கம், பைக் டாக்ஸி சேவைகள் தங்களது வாழ்வாதாரத்தை கெடுப்பதாக சில ஆட்டோ ஓட்டுனர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக ஆட்டோ ஓட்டுனர்கள் நடத்திய போராட்டங்களை கூட செய்திகளை பார்த்திருப்பீர்கள். இந்தியாவில் பைக் டாக்ஸி சேவையில் சில நிறுவனங்கள் ஈடுப்பட்டுகின்றன. ஆனால் அவற்றுள் முக்கியமானதாகவும், பரவலாக நெட்வொர்க்கை கொண்டதாகவும் ராபிடோ விளங்குகிறது.
இதனால் பைக் டாக்ஸிக்கு எதிராக உள்ள கருத்துகளை ராபிடோ தான் பெருமளவு எதிர்கொள்ள வேண்டியதாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், பைக் டாக்ஸி என்றாலே ராபிடோ மட்டும் தான் என நினைத்து கொண்டு இருப்பவர்களும் உள்ளனர். பைக் டாக்ஸி சேவை மீது விழுந்துள்ள இந்த கறையை எப்படியாவது போக்க வேண்டும் என ராபிடோ பல வழிகளில் செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு முயற்சியாக, உத்தர பிரதேச மாநில போலீசாருடன் இணைந்து நொய்டாவில் இலவச ஹெல்மெட்களை ராபிடோ வழங்கியுள்ளது.

நொய்டாவில் பொட்டானிகல் கார்டன் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகே 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்கள் ராபிடோ சார்பில் வழங்கப்பட்டுள்ளன. போலீசாரின் முன்னிலையில் வழங்கப்பட்டதால், வழங்கப்பட்ட ஹெல்மெட்கள் அனைத்தும் ஐஎஸ்ஓ சான்றளிக்கப்பட்டவை மற்றும் லேட்டஸ்ட் தர நிலைகளை பூர்த்தி செய்தவை ஆகும்.
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற சட்டம் நாடு முழுவதும் அமலில் உள்ளது. நம் சென்னை உள்பட சில முக்கிய மாநகரங்களில், 2-வீலர்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் கூட ஹெல்மெட் அணிவது கட்டாயமாக உள்ளது. இதனால் 2-வீலர் ஓட்டிகள் பலர் ஹெல்மெட் அணிவதை பழக்கமாக்கி கொண்டனர் என்றாலும், இப்போதும் பொது சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்களுள் சிலர் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதை பார்க்க முடிகிறது.

ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் அத்தகையவர்கள் போலீசாரிடம் கூறும் காரணங்கள் என்னவாக இருக்கும் என்று பார்த்தீர்கள் என்றால், ஒன்று வெயில் அதிகமாக உள்ளதால் ஹெல்மெட் அணிய முடிவதில்லை என்பதாக இருக்கும் அல்லது ஹெல்மெட் வாங்க காசு இல்லை என்பதாக இருக்கும். இதில், காசு இல்லை என்ற காரணத்தை பரவலாக பலர் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள். குறிப்பாக, ஏழை, எளியோரும், அவசரத்துக்கு வேறொருவரிடம் இருந்து பைக்/ ஸ்கூட்டரை வாங்க வந்தவர்களாகவே இருப்பர்.
இதன் காரணமாகவே, நொய்டாவில் ராபிடோ நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சியில் குறைந்த வருமானத்தை ஈட்டும் ஏழை, எளிய மக்களாக பார்த்து இலவச ஹெல்மெட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சியில் கௌதம் புத்தா நகர் துணை போலீஸ் கமிஷ்னர் சௌரப் ஸ்ரீவஸ்தாவா தலைமை தாங்கினார். ஹெல்மெட்டை பெற்றுக் கொண்டவர்களிடம் ஹெலெட் அணிவதன் அவசியத்தை போலீசார் எடுத்து கூறினர்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: உலகில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறக்கூடிய நாடுகளுள் ஒன்றாக நமது இந்தியா உள்ளது. இந்தியா உலகிலேயே பெரியதான 2-வீலர் மார்க்கெட் என சொல்லலாம். ஏனெனில் நம் நாட்டில் தான் 2-வீலர்கள் தான் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதனாலோ என்னவோ நம் நாட்டில் பெரும்பாலான சாலை விபத்துகளில் 2-வீலர்கள் இடம்பெறுகின்றன. இதனால், ஹெல்மெட் அணிவது அவசியமாகும். இதனை மக்களிடத்தில் வலியுறுத்தும் நோக்கில் ராபிடோ இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
