டாடா கார் மட்டும்தானே பரிசுனு சொன்னாங்க... அடிச்சது ஒரேயொரு சதம் தான், வாழ்க்கை மொத்தமா மாறிப்போச்சு!!
ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடர் முடிந்ததில் இருந்து அதனை தொடர்ந்து கொண்டாட்டங்களையும் சர்ச்சைகளையும் அடுத்தடுத்து பார்த்து வருகிறோம். நான் எதை பற்றி கூறுகிறேன் என்று இந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். 2025ஆம் ஆண்டிற்கான கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரையில் இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த அளவிற்கு, கர்நாடகா மக்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியான செய்தி, மற்றொரு பக்கம் அதனால் ஏற்பட்ட துயரமான செய்தி என வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மக்களை எப்போதுமே கிரிக்கெட்டின் மீது பித்து பிடித்ததுபோல் வைத்திருப்பதுதான் இதற்கு காரணம் என இந்திய கிரிக்கெட் கவுன்சில் (BCCI) இந்த சம்பவத்திற்கு குற்றஞ்சாட்டி உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் முழுக்க முழுக்க வணிகமாக மாறிவிட்டது. ரசிகர்களை எப்படியாவது மேலும் மேலும் கவர வேண்டும் என்பதற்காக பல செயல்களில் ஈடுப்படுகின்றனர். ஒவ்வொரு வருடமும் புது, புது ஐடியாக்களை கொண்டுவருகின்றனர். சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு விலையுயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்து அவர்கள் மீது ரசிகர்களுக்கு ஆவலை ஏற்படுத்தி, அத்தகைய கிரிக்கெட் வீரர்களை ஒரு வணிக பொருளாக மாற்றி விடுகின்றனர்.
அந்த வகையில், 14 வயது கிரிக்கெட் வீரர் என்கிற விளம்பரத்துடன் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயஸ் அணிக்கான தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டவர், வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi). தொடர் முழுக்க பெரியதாக சோபிக்கவில்லை என்றாலும், குஜராத் அணிக்கு எதிராக பெரிய இலக்கை நோக்கி ஆடிய போது மிகவும் குறைந்த பந்துகளில் சதத்தை எட்டி அணியின் வெற்றிக்கு வைபவ் சூர்யவன்ஷி மிக முக்கியமான காரணமாக இருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை ஈர்த்தது.

அந்த ஒரு போட்டி தான் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிராண்ட்-நியூ டாடா கர்வ் (Tata Curvv) காரை பெற்று கொடுத்துள்ளது என சொன்னால் நம்ப முடிகிறதா? ஏனெனில், சதம் அடித்த அந்த ஒரு போட்டியினால் வைபவ் சூர்யவன்ஷியின் ஸ்டிரைக்ரேட் எங்கேயோ சென்றுவிட்டது. இதன் மூலமாக, கர்வ் சூப்பர் ஸ்டிரைக்கர் ஆஃப் தி விருதுக்கான வீரர்கள் பட்டியலில் சூர்யவன்ஷி முதலிடத்தை பிடித்தார்.
இந்த வரிசையில் கடைசி வரையில் யாரும் சூர்யவன்ஷியை முந்தவில்லை என்பதால், இறுதியில் அவருக்கே கர்வ் சூப்பர் ஸ்டிரைக்கர் ஆஃப் தி சீசன் விருதாக புத்தம் புதிய டாடா கர்வ் கார் வழங்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான் 2022ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடரின் ஸ்பான்சராக இருந்து வருவதால், அப்போதில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் சிறந்த ஸ்டிரைக்ரேட்டில் விளையாடும் வீரருக்கு லேட்டஸ்ட் டாடா காரை பரிசாக வழங்குவதை வாடிக்கையாக கொண்டு வருகிறது.

இந்த வகையில், கடந்த வருடங்களில் நெக்ஸான் இவி, கர்வி இவி உள்ளிட்ட எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) பரிசாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த சீசனில் டாடா கர்வ் வழங்கப்பட்டுள்ளது. கர்வ் இவி எலக்ட்ரிக் காரும் விற்பனையில் உள்ளது என்றாலும், எரிபொருள் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் கர்வ் காரை டாடா நிறுவனம் இந்த முறை பரிசு பொருளாக வழங்கியுள்ளது. கர்வ் மற்றும் கர்வ் இவி இந்த இரு புதிய கார்களையும் கடந்த ஆண்டு இறுதியில்தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
டாடா கர்வ் கார் மட்டுமின்றி, அதனை காட்டிலும் விலையுயர்ந்த பிராண்ட்-நியூ மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) காரையும் கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷி பெற்றுள்ளார். இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளரான அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ரஞ்சித் பர்தாகுர் வழங்கினார். இன்னும் சொல்லப்போனால், டாடா நிறுவனம் கர்வ் காரை வழங்குவதற்கு முன்பே குஜராத் அணிக்கு எதிராக சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்த போட்டி நிறைவு பெற்ற உடனேயே இந்த பரிசை அவர் வழங்கி இருந்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பல இலட்ச ரூபாய் மதிப்பில் இத்தனை கார்களை வாங்கிய போதிலும், இதில் எதையும் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியால் தற்போதைக்கு ஓட்ட முடியாது. ஏனெனில், அவருக்கு 14 வயது மட்டுமே ஆகிறது. கார் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமத்தை பெற குறைந்தப்பட்ச வயது வரம்பு 18 வயது ஆகும். இருப்பினும், மூடிய வளாகத்திற்குள் இந்த கார்களை வைபவ் சூர்யவன்ஷி ஓட்டி பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
