தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
இந்தியா முழுவதும் இயங்கி வரும் வந்தே பாரத் ரயில்களில் வழங்கப்படும் தண்ணீர் பாட்டிலின் அளவை குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி இனி வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் நபர்களுக்கு வெறும் 500 மில்லி தண்ணீர் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் விரைவாக ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு பயணம் செய்து வருகிறார்கள். அதிக வசதி இருப்பதாலும் அதே நேரத்தில் விரைவாக பயணிப்பதாலும் மக்கள் பலர் இந்த ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்நிலையில் வந்தே பாரத் ரயில் குறிப்பிட ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும் மற்றும் சில நிமிடங்கள் மட்டுமே நிற்கும் என்பதால் பயணிகள் வெளியில் இருந்து உணவு பொருட்களை வாங்கி சாப்பிடுவது என்பது சாத்தியமில்லாத விஷயமாக இருக்கிறது. இதனால் வந்தே பாரத் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது உணவிற்கும் சேர்த்து பணம் செலுத்தி உணவை பெற்றுக் கொள்ள முடியும்.
இதனால் நீங்கள் அமர்ந்திருக்கும் சீட்டிற்கே உணவு தாராளமாக வந்து சேரும். இப்படியாக உணவுடன் சேர்த்து ஒவ்வொரு பயணிக்கும் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலை ரயில்வே நிர்வாகம் வழங்கி வருகிறது. இதற்காக ரயில் நீர் வாட்டர் பாட்டில் வழங்கப்படுகிறது. இந்த ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் வழங்கும் முறையை தற்போது ரயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது.

வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் தங்கள் பயண நேரத்தில் இந்த ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலை முழுமையாக பயன்படுத்துவதில்லை. பெரும்பாலும் பாதி குடித்துவிட்டு மீதியை மிச்சம் வைத்து செல்கின்றனர். இந்த தண்ணீர் எல்லாம் வீணாகிறது. இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
அதன்படி இனி வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் அனைத்து பயணிக்கும் உணவுடன் சேர்த்து முதலில் 500 மில்லிலிட்டர் வாட்டர் பாட்டில் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாட்டர் பாட்டில் தீர்ந்து போனால் பயணி கேட்கும் பட்சத்தில் அடுத்த 500 மில்லிலிட்டர் வாட்டர் பாட்டில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது 500 மிலி வாட்டர் பாட்டிலுக்கு பயணிகள் எந்தவிதமான பணமும் செலுத்த வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ளது படி ஒரு பயணிக்கு ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் என்ற ரீதியிலேயே தண்ணீர் பாட்டில்கள் எல்லாம் ஒதுக்கப்படும். ஆனால் அவர்களுக்கு முதலில் 500 மில்லி லிட்டர் தண்ணீர் பாட்டில் மட்டுமே வழங்கப்படும். அவர்களுக்கு அதுவே போதுமானதாக இருந்தால் இரண்டாவது வாட்டர் பாட்டில் வாங்க வேண்டிய தேவை இல்லை. சிலருக்கு 500 மில்லி லிட்டருக்கும் அதிகமான அளவு தண்ணீர் தேவைப்பட்டால் அவர்கள் கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் தேவையில்லாமல் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் வாங்கி அதை பாதி மட்டும் குடித்துவிட்டு மீதியை மிச்சம் வைத்து செல்வதால் தண்ணீர் வீணாவது தவிர்க்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக தண்ணீர் வீணாவது குறைந்தால் ரயில்வே நிர்வாகத்திற்கு பணமும் மிச்சப்படும். அதே நேரம் ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் தண்ணீர் சேமிப்பு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் பயணிகள் ஏறும் இடம் இறங்கும் இடத்தை பொறுத்து இந்த தண்ணீர் தேவை என்பது மாறுபடுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை நீண்ட தூரம் பயணிக்கும் வந்தே பாரத் ரயில்கள் எல்லாம் இருக்கிறது. தமிழகத்தில் சென்னை முதல் நாகர்கோவில் வரை கூட வந்தேபாரத் ரயில் பயணிக்கிறது.
எட்டு மணி நேரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலே குறைவான தண்ணீராக இருக்கும். அதே நேரம் 2-3 மணி நேரம் மட்டுமே பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் அதிகமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயில் என்பது பகல் நேர ரயிலாக இருப்பதால் இதில் பயணிகள் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். குறுகிய பயணம் செய்பவர்களுக்கு குறைவான தண்ணீர் தேவையே போதுமானது. ஆனால் 8 மணி நேரம் வரை நீண்ட தூரமாக பயணம் செய்பவர்கள் அதிக தண்ணீர் தேவை உடன் இருப்பார்கள். அதனால் பயண நேரத்தை கணக்கிட்டு அதற்கு ஏற்றார் போல் தண்ணீர் பாட்டில் அளவை முடிவு செய்தால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









