பிரதமர் துவங்கி வைத்த 4வது நாளில் கல்வீச்சு!! வந்தே பாரத் இரயில் நம்மிடம் மாட்டிக்கிட்டு படும் படாத பாடு...
காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா மாநிலத்தில் வந்தே பாரத் இரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். எந்த இரு நகரங்களுக்கு இடையே இரயில் சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடந்தது? இந்த தாக்குதலினால் ஏற்பட்டுள்ள சேதாரங்கள் என்னென்ன? என்பதை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை ஐசிஎஃப்-இல் உருவாக்கப்படும் வந்தே பாரத் இரயில்களை மேட்-இன் இந்தியா இரயில்களாக நம் மத்திய அரசு நாடு முழுவதும் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டுவந்து கொண்டிருக்கிறது. சென்னையில் இருந்து மைசூருக்கு பெங்களூர் வழியாக தினந்தோறும் வந்தே பாரத் இரயில்கள் சென்றுவரும் சூழலில் சமீபத்தில் சென்னையில் இருந்து ஈரோடு வழியாக கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் இரயில் சேவை துவங்கப்பட்டது.

அதேபோன்று, சென்னை- திருநெல்வேலி இடையேயும் வந்தே பாரத் இரயில் சேவை விரைவில் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து இவ்வாறு வந்தே பாரத் இரயில்கள் பல்வேறு நகரங்களுக்கு விரிவடைந்துவரும் நிலையில், கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஜூன் 27ஆம் தேதி தார்வாட் - பெங்களூர் இடையே வந்தே பாரத் இரயில் சேவை துவங்கப்பட்டது.
இந்த புதிய இரயில் சேவையினை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த நிலையில், கடந்த ஜூலை 1ஆம் தேதி, சனிக்கிழமை தாவாங்கரே இரயில் நிலையத்திற்கு அருகே வந்து கொண்டிருந்த போது பெங்களூர்- தார்வாட் வந்தே பாரத் இரயில் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சி4 பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது. பயணிகள் யாருக்கும் காயம் இல்லை.
சி4 பெட்டி உள்பட குறிப்பிட்ட அந்த வந்தே பாரத் இரயிலில் வேறெந்த சேதாரமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை இரயிவே பாதுகாப்பு படையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை 1ஆம் தேதி தார்வாட்டில் இருந்து பெங்களூரை நோக்கி புறப்பட்ட இந்த வந்தே பாரத் இரயில் மதியம் 3.30 மணியளவில் தாவாங்கரே இரயில் நிலையத்தை வந்துடைந்துள்ளது.
பின்னர் தாவாங்கரேயில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வீச்சு நடந்த போது இரயில் மணிக்கு 160கிமீ வேகத்தில் இயங்கி கொண்டிருந்ததாகவும், இவ்வளவு வேகத்தில் இயங்கி கொண்டிருக்கும் இரயில் மீது கல் எறிந்து, அது பயணிகள் மீது படும்பட்சத்தில் படுகாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு நடப்பது இது ஒன்றும் முதல்முறை அல்ல. முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் சென்னை- மைசூர் வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரு ஜன்னல் கண்ணாடிகள் பலத்த சேதமடைந்தன. வந்தே பாரத் இரயில்கள் இந்தியாவில் உருவாக்கப்படும் மேட்-இன் இந்தியா இரயில்கள் என்பது மட்டுமின்றி, அதிவேக இரயில்கள் ஆகும். இதற்கு முக்கிய காரணம், மற்ற இரயில்களை போல் இல்லாமல், இவை குறைவான எடை கொண்டவையாக உருவாக்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மக்களுக்கு தேவையான திட்டத்தை அரசாங்கம் கொண்டுவரும் போது அதனை எதிர்க்க சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், அத்தகையவர்கள் தங்களது எதிர்ப்பை கண்மூடித்தனமாக காட்டாமல், சற்று யோசித்து வெளிக்காட்டுவது நல்லது. ஏனெனில் 160kmph வேகத்தில் இயங்கும் இரயிலின் மீது எறியப்படும் கல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு பயணிகள் யார் மீதேனும் பட்டால், அவர்கள் உயிரிழப்பதற்கு கூட வாய்ப்புள்ளது.
Source: Newsable Asianet News


Click it and Unblock the Notifications








