புல்லட் ரயில்லாம் ஓரமா போ! இனி தமிழ்நாட்ல இருந்து காஷ்மீருக்கு பக்கத்து ஊருக்கு போற மாதிரி போயிட்டு வரலாம்!
இந்திய ரயில்வேயின் முகத்தை மாற்றிய பெருமை வந்தே பாரத் ரயில்களுக்கு (Vande Bharat Trains) உண்டு. ரயில் பயணிகள் மத்தியில் மிக குறுகிய காலத்தில் வந்தே பாரத் ரயில்கள் பிரபலம் அடைந்துள்ளன. அதிவேக மற்றும் சொகுசான பயணத்தை வந்தே பாரத் ரயில்கள் உறுதி செய்திருப்பதுதான் இதற்கு காரணம். ஆனால் வந்தே பாரத் ரயில்களில் ஒரே ஒரு குறை மட்டும் இருந்து வருகிறது. வந்தே பாரத் ரயில்களில் அமர்ந்து கொண்டு மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதுதான் அது.
ஆம், தற்போதைய நிலையில் வந்தே பாரத் ரயில்களில் படுத்து கொண்டே செல்லும் ஸ்லீப்பர் (Sleeper) வசதி இல்லை. ஆனால் கூடிய விரைவில் ஸ்லீப்பர் வசதியுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. ஸ்லீப்பர் வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டன.

தற்போது அவற்றின் சோதனை ஓட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில் ராஜஸ்தான் (Rajasthan) மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சோதனை ஓட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (Railway Minister Ashwini Vaishnaw) அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வைரல் வீடியோவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மணிக்கு 180 கிலோ மீட்டர் (180 Kmph) வேகத்தில் பயணம் செய்வதை நம்மால் காண முடிகிறது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டபோது, மற்றொரு சோதனையும் செய்து பார்க்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு க்ளாஸ் நிறைய தண்ணீரை எடுத்து கொண்டுள்ளனர்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்தபோது, அந்த தண்ணீர் சிந்துகிறதா? என்பதை பரிசோதித்து பார்த்துள்ளனர். ஆனால் க்ளாஸ் மற்றும் தண்ணீர் நிலையாக இருந்துள்ளது. அதாவது க்ளாஸ் கீழே விழவில்லை. அதேபோல் தண்ணீரும் சிந்தவில்லை.
இந்த வைரல் வீடியோவைதான் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தற்போது வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் செல்போன் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த செல்போனில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுவதை நம்மால் மிகவும் தெளிவாக காண முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள், அதிவேகத்தில் சென்றாலும் கூட, பயணிகளின் பயணம் மிகவும் மென்மையானதாக இருக்க போகிறது என்பதையே இந்த வீடியோ எடுத்துக்காட்டுகிறது என நாங்கள் கருதுகிறோம். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் சோதனை ஓட்டம் நடப்பு ஜனவரி மாத இறுதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு பிறகு, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் முறைப்படி பயணிகளின் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், புது டெல்லி-ஸ்ரீநகர் (New Delhi-Srinagar) இடையே அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் படிப்படியாக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்படவுள்ளது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் முறைப்படி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இந்தியாவில் காஷ்மீர்-கன்னியாகுமரி (Kashmir-Kanyakumari) மற்றும் சென்னை-ஹவுரா (Chennai-Howrah) போன்ற தொலை தூர பயணங்கள் எல்லாம், தற்போது இருப்பதை காட்டிலும், மிகவும் எளிமையான ஒன்றாக மாற போகின்றன என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








