இப்ப வர சொல்லு சீன இரயில்களை... ஒரு துளி நீர் கூட சிந்தல!! வந்தே பாரத் இரயில்களில் இது வேற ரகம்
இந்திய ரயில்வேயின் நவீன அடையாளமாகத் திகழும் வந்தே பாரத் (Vande Bharat) ரயில் சேவையின் புதிய அத்தியாயமாக, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் (Sleeper) ரயில்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன. அதற்கு முன்னதாக சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் (Ashwini Vaishnaw) இந்த ரயிலின் அவ்வாறான அதிவேக சோதனை ஓட்டம் குறித்த முக்கிய தகவலை தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் வீடியோவாக தற்போது பகிர்ந்துள்ளார்.
இந்த ரயில் ராஜஸ்தானின் கோட்டா - மத்திய பிரதேசத்தின் நாக்டா வழித்தடத்தில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. சோதனை ஓட்டத்தின்போது, மிக அதிக வேகத்திலும் கூட, கண்ணாடி டம்ளர்களில் முழுவதுமாக நிரப்பி வைக்கப்பட்டிருந்த நீர் ஒரு துளிகூட சிந்தாத காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது. இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், டம்ளர்களுக்கு மேல், நீர் நிரம்பிய ஒரு டம்பளரை வைத்து சோதனை செய்து பார்த்தும் நீர் ஒரு துளி கூட சிந்தவில்லை.

இது ரயிலின் மேம்பட்ட நிலைத்தன்மையையும் அதிநவீன தொழில்நுட்பத்தையும் வெளிப்படுத்தியது. "வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இன்று சோதித்தார். இது கோட்டா-நாக்டா பிரிவில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் ஓடியது. எங்களது நீர் சோதனை, இந்த புதிய தலைமுறை ரயிலின் தொழில்நுட்ப அம்சங்களை நிரூபித்தது," என்று அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட தூர இரவு நேரப் பயணங்களுக்குப் புதிய பரிமாணத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள், தற்போதுள்ள வந்தே பாரத் சேர் கார் ரயிலின் படுக்கை வகுப்பு வெர்சனாகும். பி.இ.எம்.எல் (BEML) நிறுவனம் தயாரித்த இரண்டு முன்மாதிரி (Prototype) ரயில்கள் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளன.

இவை முழுமையாக குளிரூட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ரயில்வே வரும் ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் நீண்ட தூர ரயில் பயணத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தத் திட்டத்தை ஆதரிக்கும் வகையில் பல்வேறு உற்பத்தித் திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பி.இ.எம்.எல் ஆனது ஒருங்கிணைந்த இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF) உடன் இணைந்து 10 ஸ்லீப்பர் இரயில் பெட்டிகளை ஒரு தொகுப்பாகத் தயாரிக்கிறது. மேலும், இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களின் கூட்டு முயற்சியான கைனெட் (Kinet) நிறுவனம் 10 பெட்டித் தொகுப்புகளை வடிவமைக்கிறது. இவை தவிர, டிட்டாகர் ரயில் சிஸ்டம்ஸ் மற்றும் பி.ஹெச்.இ.எல் (BHEL) அடங்கிய கூட்டமைப்பு 80 ஸ்லீப்பர் வகைகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளன.
சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் நிறுவனமும் உள்நாட்டிலேயே வந்தே பாரத் ரயிலின் ஸ்லீப்பர் பெட்டிகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் முதல் இரண்டு முன்மாதிரிகளும் 16 பெட்டிகளைக் கொண்டுள்ளன. இதில் 11 குளிரூட்டப்பட்ட மூன்று அடுக்கு படுக்கை பெட்டிகள், நான்கு குளிரூட்டப்பட்ட இரண்டு அடுக்கு படுக்கை பெட்டிகள் மற்றும் ஒரு குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு படுக்கை பெட்டி ஆகியவை அடங்கும்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் இந்த முன்மாதிரிகள் மணிக்கு 160 கி.மீ வரை இயக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும், சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 180 கி.மீ வேகத்தை எட்டின. இருப்பினும், நடைமுறையில் இரயிலின் இயக்க வேகம் ஆனது, இந்திய ரயில்வே வழித்தடங்களின் திறன்களைப் பொறுத்து அமையும்.
ஐரோப்பிய ரயில் பெட்டி வடிவமைப்புகளின் அம்சங்களைக் கொண்டு, இந்த ஸ்லீப்பர் பெட்டிகள் மேம்படுத்தப்பட்ட குஷன் படுக்கைகளையும், மேல் படுக்கைகளுக்கு எளிதில் ஏறுவதற்கான மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அணுகல் வசதியையும் கொண்டிருக்கும். பயணிகளின் வசதிக்காக குறைந்த வெளிச்சம் கொண்ட இரவு நேர விளக்குகள், ஒலி அலார்ட்களுடன் கூடிய காட்சித் திரைகள், சிசிடிவி கண்காணிப்பு மற்றும் நவீன சமையலறை ஏற்பாடுகள் போன்ற வசதிகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியன் இரயில்களின் வேகம் மற்ற வெளிநாட்டு இரயில்கள் அளவிற்கு இல்லை என்பது நம் நாட்டில் நீண்ட காலமாகவே ஒரு குறையாகவே இருந்து வருகிறது. ஆனால், அதனை வந்தே பாரத் இரயில்கள் நிவர்த்தி செய்யும் என மத்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. தற்போது இரயில்வே துறை அமைச்சர் தெரிவித்து இருப்பது போல் குலுக்கல்கள் இல்லாமல் இயங்கக்கூடிய இந்த அதிவேக இரயில்கள் ஸ்லீப்பர் வசதி உடன் வருவது இந்திய இரயில்வே துறையில் புதிய புரட்சியை உண்டாக்கும்.


Click it and Unblock the Notifications









