இந்தியன் இரயில்வே பயங்கர ஸ்பீடா வேலை செய்யுது!! இந்த புது மெட்ரோ ரயிலை சாதாரணமானதாக எடுத்துக்க முடியாது!
வந்தே மெட்ரோ (Vande Metro) இரயில்கள் அடுத்ததாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ள நிலையில், வந்தே மெட்ரோ இரயில்களை உருவாக்கும் பணிகள் பஞ்சாப் மாநிலத்தில் துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் எக்ஸ் தள பக்கத்தில் வெளியாகி உள்ள படங்களையும், வீடியோக்களையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வந்தே பாரத் இரயில்கள் இந்தியன் இரயில்வேஸில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறைந்த எடையில் உருவாக்கப்படுவதால் வழக்கமான இரயில்களை காட்டிலும் வந்தே பாரத் இரயில்களை அதிவேகமாக ஓட்ட முடிகிறது. அதைவிட முக்கியமாக, வந்தே பாரத் இரயில்கள் முற்றிலுமாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதன் காரணமாக இந்திய இரயில்வேஸுக்கு செலவு குறைவதால், வந்தே பாரத் இரயில்களை மத்திய அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. இதன்படி, பல புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் இரயில்கள் பயன்பாட்டிற்கு அடுத்தடுத்து கொண்டுவரப்பட உள்ளன. வந்தே பாரத் இரயில்களின் ஒரே குறை என்னவென்றால், அவற்றின் அதிகமான டிக்கெட் விலையாகும்.
இதற்காகவே வந்தே சாதாரண் இரயில்கள் ஏசி வசதி இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. முதல் வந்தே சாதாரண் இரயில் பயணத்தை முதன்முறையாக கடந்த ஜனவரி மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் நேரில் கொடியசைத்து துவங்கி வைத்தார். வந்தே பாரத், வந்தே சாதாரண் இரயில்களை போன்று வந்தே மெட்ரோ இரயில்களையும் இந்தியன் இரயில்வேஸ் அடுத்ததாக சேவைக்கு கொண்டுவர உள்ளது.

நீண்ட தொலைவு பயணங்களுக்காக இல்லாமல், இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ள வந்தே மெட்ரோ இரயில்களின் படங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து வெளிவரலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளிவந்து இருந்தன. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் கபுர்தலா என்கிற பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வந்தே மெட்ரோ இரயில்களின் படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.
இந்த படங்களிலும், வீடியோக்களிலும் தொழிற்சாலைக்குள் வெவ்வேறு விதமான இடங்களில் வைத்து உருவாக்கப்படும் வந்தே மெட்ரோ இரயில் பெட்டிகளை காணலாம். இந்த வந்தே மெட்ரோ இரயில் பெட்டிகள் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட முழுவதுமாக உருவாக்கப்பட்ட நிலையில் உள்ளன. இதனால், இந்த ஏப்ரல் மாதம் முடிவதற்குள் முழுவதுமாக உருவாக்கப்பட்ட முதல் வந்தே மெட்ரோ இரயிலை பார்த்துவிடலாம்.

முதல் வந்தே மெட்ரோ இரயில் வருகிற மே மாதத்தில் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்துவிடும் என வடக்கு இரயில்வே மண்டலத்தின் மேலாளர் எஸ் சீனிவாஸ் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு முன்னதாக இந்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து வந்தே மெட்ரோ இரயில்களின் சோதனை பணிகள் துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 16 பெட்டிகளை கொண்டதாக வந்தே மெட்ரோ இரயில்கள் உருவாக்கப்பட உள்ளன. முதல் வந்தே மெட்ரோ இரயிலுக்கான 16 பெட்டிகளை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே கிட்டத்தட்ட 70% நிறைவடைந்துவிட்டன. அடுத்த ஒரு வருடங்களில் குறைந்தது 9 வந்தே மெட்ரோ இரயில்களை உருவாக்க இந்தியன் இரயில்வேஸ் திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத்தின் அதே சிக்னெச்சர் டிசைனில் வந்தே மெட்ரோ இரயில்கள் உருவாக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: செமி-ஹை ஸ்பீடு இரயில்களான வந்தே பாரத் இரயில்களை காட்டிலும் வேகமாக இயங்கக்கூடியதாக வந்தே மெட்ரோ இரயில்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால் அருகருகே இருக்கும் இரு முக்கிய நகரங்களை வந்தே மெட்ரோ இரயில்கள் மூலமாக தற்போதை காட்டிலும் இன்னும் விரைவாக எட்டிவிடலாம். வந்தே பாரத், சாதாரண் மற்றும் மெட்ரோ இரயில்களின் டிசைனில் ஒரே பாணியை பின்பற்றுவது இந்தியன் இரயில்வேஸின் நேர்த்தியை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









