250 கி.மீ பயணிக்க இனி 1.5 மணி நேரம் தான்! வந்தே மெட்ரோ ரயில் ரெடியாகிடுச்சு!
வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது வந்தே மெட்ரோ ரயில்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை தற்போது துரிதமாக செய்து வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த வந்தே மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிகப்பெரிய வசதி கொண்டதாக இருக்கிறது. பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் போக்குவரத்தை அதிகம் விரும்புகிறார்கள். குறைந்த கட்டணத்தில் சொகுசான பயணத்தை இதன் மூலம் செய்ய முடியும் என்பதால் மக்களுக்கு ரயில் தான் வசதியாக இருக்கிறது. இந்நிலையில் சர்வதேச அளவில் இந்திய ரயில் பயணத்தை மாற்றுவதற்காக வந்தே பாரத் என்ற ரயிலை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.

சாதாரண ரயில் பெட்டி போல இல்லாமல் புல்லட் ரயில் போன்ற ஒரு தோற்றத்தில் இருக்கும் இந்த வந்தே பாரத் ரயில்கள், பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. தற்போது நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிக வேகத்தில் இது பயணம் செய்ய முடியும் என்பதால் குறைவான பயண நேரம் மட்டுமே தேவைப்படும்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் தற்போது வந்தே பாரத் ரயில்கள் மிகப்பெரிய ஹிட்டான நிலையில், இந்திய ரயில்வே நிர்வாகம் இன்டர்சிட்டி பயன்பாட்டிற்காக வந்தே மெட்ரோ என்ற புதிய ரயிலை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகள் எல்லாம் தற்போது துரிதமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த ரயில் குறித்த சில முக்கியமான தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

இப்படி இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது வந்தே மெட்ரோ ரயிலை கட்டமைக்கும் பணியை முடிக்கும் தருவாயில் இருக்கிறது. இந்த ரயிலுக்கான சோதனை வரும் ஜூலை மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வந்து மெட்ரோ ரயிலில் மெட்ரோ ரயிலில் இல்லாத பல்வேறு அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே பாரத் ரயிலுக்கும் வந்தே மெட்ரோ ரயிலுக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால் வந்தே பாரத் ரயில்கள் ஆயிரம் கிலோமீட்டர் வரை தூரமுள்ள நகரங்களை இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ரயிலாகும். இதனால் இதில் ஏராளமான வசதிகள் இருக்கும். நீண்ட தூரம் பயணம் செய்யும்போது பயணிகளுக்கு என்னெல்லாம் தேவைப்படுமோ அந்தந்த வசதிகளை எல்லாம் செய்திருப்பார்கள்.
வந்தே மெட்ரோ ரயில்கள் என்பது குறைவான தூரத்தில் இருக்கும் நகரங்களை இணைப்பதற்கான மெட்ரோ ரயில் ஆகும். 100 முதல் 250 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் இது அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே இப்படியான நகரங்களை பாசஞ்சர் ரயில்கள் மூலம் ரயில்வே நிர்வாகம் இணைத்து வந்தது. இந்த பாசஞ்சர் ரயில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கும்.
ஆனால் வந்தே மெட்ரோ ரயில் இந்த நூறு முதல் 250 கிலோமீட்டர் வரை தூரமுள்ள நகரங்களை முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று வேகமாக கடப்பதற்காக திட்டமிடப்படும். ஒரே நாளில் 3-4 முறை இந்த ரயில் பயணிக்கும் வகையில் இது திட்டமிடப்படும். இதனால் இந்த இரு நகரங்களுக்கு இடையே பயணம் செய்யும் மக்கள். வேகமாக தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியும் இதை குறி வைத்தே இந்த ரயில் தயாரிக்கப்படுகிறது.
இந்த ரயிலுக்குள் இருக்கும் வசதியை பொருத்தவரை வந்தே பாரத் ரயிலில் இருப்பதைப் போல ஆட்டோமேட்டிக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அப்படியேதான் இருக்கின்றன. இதுபோக கூடுதலாக வந்தே பாரத் ரயிலில் இல்லாத சில அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த விபரங்கள் எல்லாம் ரயிலின் அறிமுகத்தின் போது தான் தெரிய வரும்.
இந்த ரயிலில் மொத்தம் 12 பெட்டிகள் கொண்டு முதல் வெர்ஷன் தயாரிக்கப்படுகிறது. தேவைப்படும் ரூட்களில் 16 பெட்டிகள் கொண்ட வெர்ஷன் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. மேலும் இந்த ரயில் வந்தே பாரத் ரயில் போல மணிக்கு 140-150 கி.மீ வேகத்தில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது செயல்பாட்டிற்கு வரும் போது 250 கி.மீ தூரத்தை வெறும் 1.5 மணி நேரத்தில் கவர் செய்துவிடும் என எதிர்பார்க்கலாம்
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெருநகரங்களை இணைப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதேபோல, சிறுநகரங்களையும் இணைக்க வேண்டியது மிக அவசிய தேவையாக இருக்கிறது. சிறுநகரங்களை இணைக்கும் ரயில்களில் தினம்தோறும் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. வந்தே மெட்ரோ ரயில்கள் வந்தால் பலர் இதனால் பயன்பெறுவார்கள். இந்த ரயில் நிச்சயம் மிகப்பெரிய வரவேற்பை பெறும்.


Click it and Unblock the Notifications








